தௌசண்ட் ஓக்ஸ்: கலிபோர்னியா பார் தாக்குதலில் 13 பேர் பலி- முன்னாள் கடற்படை வீரர் மீது சந்தேகம்

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பார் ஒன்றில் மன நிலை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபபட்டதாக சந்தேகிக்கப்படும் இயன் டேவிட் லாங் என்ற 28 வயது முன்னாள் கடற்படை வீரரும் கொல்லப்பட்டார்.

புகை கக்கும் சாதனத்தாலும், கையெறி குண்டினாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது.

இதில் அதிகாரி ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டு காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் வென்ட்சுரா கவுண்டி ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் எரிக் பஸ்சௌவ் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த ஷெரீஃபின் செர்ஜன்ட் ரான் ஹீலஸ் பல முறை சுடப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறவிருந்தார் அவர்.

வியாழன் காலையில் பயங்கரமான இந்த துப்பாக்கிச்சூடு பற்றி அறிய வந்ததை குறிப்பிட்டும், இதில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை புகழ்ந்தும் அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

கலிபோர்னிய நெடுஞ்சாலை காவல்துறையினர் 3 நிமிடங்களில் சம்பவ இடத்தை சென்றடைந்துள்ளனர். முதலில் நுழைந்துள்ள அலுவலர் மீது பலமுறை சுடப்பட்டுள்ளது. ஷெரீஃபின் செர்ஜன்ட் மருத்துவமனையில் வைத்து இறந்துள்ளார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.டஜன் கணக்கான முறை துப்பாக்கி சுடப்பட்டதாகவும், அங்கு பீதி நிலவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள மோசமான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவில் பலர் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. ஆனால், அவற்றில் மிகவும் பயங்கரமானவை சமீப ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.

கடந்த 2 வாரங்களில் மட்டும் ஃபுளோரிடாவின் யோகா நிலையத்தில் ஒருவர் 2 பேரை சுட்டுக்கொன்றார், இன்னொருவர் பீட்ஸ்பர்க் யூத செபக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 11 பேரை கொன்றார்.

கடந்த 2017ம் ஆண்டு லாஸ் விகாஸில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றின் 32வது மாடியில் இருந்து 62 வயதானவர் சுட்டதில் 58 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்காணக்கானோர் காயமடைந்தனர்.

2016ம் ஆண்டு ஓர்லான்டோ ஒருபாலுறவுகாரர்களின் இரவு கேளிக்கை உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

ஃபுளோரிடாவின் பார்க்லாண்டிலுள்ள மர்ஜோரி ஸ்டோன்மான் டக்லாஸ் உயர்நிலை பள்ளியில் பிப்ரவரி மாதம் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் பரப்புரை மேற்கொள்ள செய்தது.

துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பக இணையதளத்தின்படி இந்த ஆண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி 1200 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்டோரில் 3000 பேர் 18 வயதுக்குட்பட்டவர்.

துப்பாக்கி மூலம் தற்கொலை செய்துகொள்ளும் ஓராண்டு மதிப்பீடான 22,000 பேர் இந்த எண்ணிக்க்கையில் உள்ளடங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :