'டெஸ்லா' தலைவராக பொறுப்பேற்கும் பெண் நிர்வாகி ரோபைன் டென்ஹோம் - எலான் மஸ்குக்கு பதில்

மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் சமூக ஊடகத்தில் தெரிவித்த ஒரு கருத்து, பங்கு மோசடியாக கருதப்பட்டு, அமெரிக்க பங்கு பரிவர்த்தனை அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில் அதன் தலைவர் பதவியில் இருந்து விலகும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார் அவர்.

தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை கடந்த மாதம் அவர் அறிவித்தார். இதையடுத்து நிறுவனத்தின் தலைவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நிர்வாகியான ரோபைன் டென்ஹோம் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய தொலைத் தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ராவில் தலைமை நிதி அலுவலராகப் பதவி வகிக்கும் டென்ஹோம் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஊடக பெருமுதலாளி ஜேம்ஸ் முர்டோச் இந்தப் பதவிக்கு வருவார் என்ற பேச்சுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டெஸ்லாவை தனியார் உரிமை நிறுவனமாக மாற்றுவதற்கு நிதி ஏற்பாடு செய்திருப்பதாக எலான் மஸ்க் தமது சமூக ஊடகப் பக்கத்தில் ஆகஸ்ட் மாதம் கருத்து தெரிவித்தார். இந்தப் பதிவைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்தன. சில வாரங்களில் தமது திட்டத்தை கைவிடுவதாக மஸ்க் தெரிவித்தார்.

இதனால், இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் குற்றம்சாட்டினர்.

அமெரிக்க பங்கு பரிவர்த்தனை அமைப்பு டெஸ்லாவுக்கும், எலான் மஸ்க்குக்கு தனிப்பட்ட முறையிலும் தலா 20 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. அத்துடன் எலான் மஸ்க் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. மூன்றாண்டுகள் பதவியில் இருந்து விலகி இருக்க அவர் சம்மதித்தார். அதே நேரம், நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பார்.

இந்த விவகாரத்தால், கடந்த மூன்று மாதங்களாக இந்த கார் உற்பத்தி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது.

மாடல்-3 மின்சார கார் உற்பத்தியை திட்டமிட்டபடி முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த கார் பரவலான சந்தையை இலக்கு வைக்கிறது.

இந்நிலையில், இதுவரை லாபமே ஈட்டாத இந்த நிறுவனம் கடந்த காலாண்டு காலத்தில் லாபம் ஈட்டியுள்ளது. இதனை வரலாற்றுச்சிறப்புமிக்க லாபம் என்று எலான் மஸ்க் வருணித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு 6 மாதம் நோட்டீஸ் அளித்துள்ள ரோபைன் அந்த காலம் முடிந்த பிறகு டெஸ்லாவில் தலைவராகப் பதவியேற்பார்.

தமக்கு இந்த நிறுவனத்தின் மீதும், அதன் நோக்கங்கள் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறிய ரோபைன், எலானும், டெஸ்லாவும் நீடித்த லாபம் பெறுவதற்கும், நீண்ட கால பங்கு மதிப்பு உயர்வுக்கும் உதவ முடியும் என்று கருதுவதாக ரோபைன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: