You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்சாரை தாண்டி அரசியல், மத சர்ச்சைகளில் சிக்கிய முக்கிய இந்திய திரைப்படங்கள்
சமீப காலங்களில் பெரும்பாலான படங்கள், குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. மக்களின் பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து, அதில் ஒரு சர்ச்சை எழுவது என்பது சாதாரணமாகிவிட்டது.
அவ்வாறு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் சர்கார். அரசையும், அரசின் திட்டங்களையும் விமர்சித்து மறைமுகமாக இப்படம் கிண்டலடிக்கிறது என பலரும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அப்போது தணிக்கை செய்யப்பட்டது தவறா? அந்த அமைப்பிற்கு எதற்கு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். படத்தில் வரும் சில காட்சிகள் சிலரை புண்படுத்தும் வகையில் இருப்பதாக ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இப்படி எதிர்ப்பு தெரிவிக்கும் ஒவ்வொரு படத்திலும் அரசியல் தொடர்பு இருப்பதாக தெரிகிறது என்று சொல்லலாம். சமூக ஊடகங்களில் பல கருத்துகள் இது தொடர்பாக பகிரப்பட்டு வருகின்றன.
பாலிவுட்டிற்கும் சரி, கோலிவுட்டிற்கும் சரி இது புதிதல்ல. இவ்வாறு வெளிவந்து சர்ச்சைக்குள்ளான படங்கள் பல உள்ளன.
விஸ்வரூபம் 1
2013ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்த படம் பெரும் பிரச்சனைக்கு உள்ளானதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.
முதலில் DTHல் படத்தை வெளியிடப் போவதாக கமல் அறிவிக்க, அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பினையடுத்து DTHல் வெளியிடும் எண்ணத்தை கமல் கைவிட்டார்.
பின்னர், இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி இதற்கு தடை விதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்த இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி இப்படத்திற்கு அரசு தடை விதித்தது, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று கூறியது என நாட்டின் கவனத்தையே இத்திரைப்படம் ஈர்த்தது.
இறுதியாக 2013 பிப்ரவரி 2ஆம் தேதி அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வர, இதில் கமல்ஹாசனுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தலைவா
2013ல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனை முடிந்த சில மாதங்களில் விஜய் நடித்த தலைவா படமும் சர்ச்சைக்குள்ளானது.
தலைவா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.
ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்ட நாளன்று மாலை, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார் விஜய். ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவில்லை.
பின்னர் தலைவா படத் தலைப்பில் Time to Lead என்ற வாசகத்தை எடுத்த பிறகு படம் வெளியானது.
இதே மாதிரி பாபா, விருமாண்டி, துப்பாக்கி போன்ற பல்வேறு படங்கள் பெரும் சர்ச்சைக்கு பிறகே வெளியானது.
பத்மாவத்
அதே போல சமீபத்தில் இந்திய அளவில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்படத்தில் முஸ்லிம் பேரரசர் அலாவூதின் கில்ஜி, ராஜபுத்ர இளவரசியான பத்மாவதியும் நெருக்கமாக இருப்பது போல காட்சிகள் இருப்பதாகவும், இந்து அமைப்புகள் மற்றும் ராஜபுத்ர அமைப்புகள் சிலவும் குற்றஞ்சாட்டின.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. தீபிகா படுகோனின் தலையை வெட்டி விடுவோம் என்ற அச்சுறுத்தலும் கர்னி சேனாவிடம் இருந்து வந்தது.
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது.
தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுகள் விதித்த தடை பேச்சுரிமைக்கு எதிரானது. இந்திய தணிக்கை குழுவினால், தணிக்கை செய்யப்பட்டு வெளியாக இருந்த படத்தை தடை செய்திருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: