பறிபோகும் வேலைவாய்ப்பு, அதிகரிக்கும் வேலையின்மை: என்ன நடக்கிறது இந்தியாவில்?

    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன.

இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்கோரேப் (ecowrap) என்ற பெயரிலான அந்த அறிக்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனக் கணக்குப்படி நடப்பு நிதியாண்டில் 89.7 லட்சம் புதிய சம்பளக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

"தற்போது வேலைவாய்ப்புகள் உருவாகும் விகிதத்தை கொண்டு கணக்கிட்டால் அடுத்த நிதியாண்டில் இதைவிட 15.8 லட்சம் சம்பளக் கணக்குகள் குறைவாகவே பதிவாகும். இது மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் ஊதியம் பெறுகிறவர்களின் கணக்கு. மத்திய, மாநில, தனியார் துறை வேலை வாய்ப்புகள் இந்தக் கணக்கில் வராது. 2004ம் ஆண்டு முதல் அந்த வேலைவாய்ப்புகள் தேசிய ஓய்வூதிய திட்டக் கணக்கில் பதியப்படும்."

அந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறவற்றிலும் அடுத்த நிதியாண்டில் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறைவாகவே உருவாகும் என்கிறது அந்த அறிக்கை.

ஆனால், வேலைவாய்ப்பு குறைவது இதைவிடவும் தீவிரமாக இருக்கும் என்கிறார் சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கே.ஜோதி சிவஞானம் . பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரத்தின் நிலையைக் காட்டும் பல உயரலைக் குறியீடுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைவது மட்டுமன்றி, வீழ்ச்சி அடையும் வேகமும் முடுக்கம் பெறுகிறது என்கிறார் அவர்.

பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறைந்தால் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் குறையும்

எஸ்.பி.ஐ. ஆய்வை சுட்டிக்காட்டி உண்மையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை எப்படி இருக்கிறது? வரும் ஏப்ரல் முதல் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? என்று கேட்டது பிபிசி தமிழ்.

அதற்கு பதில் கூறிய ஜோதி சிவஞானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீத வளர்ச்சி என்பது 15 லட்சம் வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், 45 லட்சம் வேலை வாய்ப்புகளை மறைமுகமாகவும் உருவாக்கும். வளர்ச்சி குறைந்தாலும், இதே விகிதத்தில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றார்.

அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (சுருக்கமாக பொருளாதார வளர்ச்சி) 1 சதவீதம் குறைந்தால் அதனால் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறையும் என்பது அவரது கருத்து.

இந்நிலையில் கடந்த நிதியாண்டினை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 2 சதவீதம் குறையும் நிலை உருவாகி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2016ல் 8.17 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு 7.17 சதவீதமாக குறைந்து கடந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக வீழ்ந்தது. இரண்டாவது காலாண்டில் மோசமான வீழ்ச்சி ஏற்பட்டு வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவை எட்டியது.

இந்த நிதியாண்டில் இன்னும் இரண்டு சுமார் 3 மாதங்கள் உள்ளன. இரண்டு காலாண்டுகளுக்கு புள்ளிவிவரம் வரவேண்டும். ஆனால், வளர்ச்சி விகிதம் மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் உயரலை குறியீடுகள் அனைத்துமே பின்னோக்கி செல்கின்றன.

"குறிப்பாக, முதலீடு உயரவில்லை, ஏற்கெனவே உள்ள முதலீடுகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. இதன் பொருள் என்னவென்றால், ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் செய்யக்கூடிய அளவுகூட உற்பத்தி நடக்கவில்லை."

"காரணம், சந்தையில் தேவை மந்தமாக உள்ளது. ஒரு கட்டத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த கிராமப்புற கூலி வளர்ச்சி, தற்போது எதிர்மறை விகிதத்தில் செல்கிறது. உணவுப் பொருள் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இவை எல்லாமும் சேர்ந்து நிகழ்வது ஆபத்தானது. எனவே, இந்த நிதியாண்டு முடிவில், நிச்சயமாக வளர்ச்சி விகிதம் 5க்கு குறைவாகத்தான் இருக்கும்," என்றார் ஜோதி சிவஞானம்.

கடந்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதம், இந்த நிதியாண்டில் இது 2 சதவீதம் வீழ்ந்து 4.8 சதவீதமாக முடியுமா என்று கேட்டபோது, அதைவிடவும் கீழே போகலாம் என்றார்.

ஒரு சதவீத வீழ்ச்சிக்கு 60 லட்சம் வேலைவாய்ப்புகள் இழப்பு என்ற விகிதத்தில் இரண்டு சதவீதத்துக்கு கணக்கிடவேண்டுமா என்று கேட்டபோது, வளர்ச்சி விகிதத்தை கணக்கிடுவதில் உள்ள புள்ளிவிவர சிக்கலையும் அவர் கூடுதலாக சுட்டிக்காட்டினார்.

"அத்துடன், 2014ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு வந்த உடனே, பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறையில் செய்த மாறுதலால் உடனடியாக 2 சதவீதம் வளர்ச்சி உயர்ந்ததாக கணக்கு மாற்றிக் காட்டப்பட்டது. அதாவது களத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல் கணக்கீட்டு முறையில் செய்த மாறுதலால் 2 சதவீதம் வளர்ச்சி உயர்த்திக் காட்டப்பட்டது. இந்திய அரசின் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தற்போது கணக்கிடும் பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையான விகிதத்தைவிட 2.5 சதவீதம் கூடுதலாக கணக்கிடப்படுகிறது என்கிறார். பொருளாதார வல்லுநராகவும் உள்ள பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தற்போதைய வளர்ச்சி விகிதம் 1.5 சதவீதம்தான் என்கிறார்," என்பதையும் ஜோதி சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

'வருங்கால வைப்பு நிதி கணக்கை வைத்து வேலை வாய்ப்பை கணக்கிட முடியாது'

ஸ்டேட் வங்கி பொருளாதார ஆய்வுத் துறை அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என்று வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது, "அது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்யப்படும் தொழிலாளர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு. வேலை வாய்ப்பை கணக்கிடுவதற்கு அது சரியான முறை அல்ல. 7 பேருக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை தருகிறவர்கள்தான் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு செய்வார்கள். ஒரு வேளை கடந்த ஆண்டு 6 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கியவர்கள் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு தொழிலாளிக்கு வேலை தந்தாலும், 7 பேர் பதிவு செய்யப்படுவார்கள். அதனால், புதிதாக 7 வேலை வாய்ப்புகள் உருவானதாக கணக்கிட அது வழிவகுக்கும்.

அதைவிட மிகவும் நம்பகமானது தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) எடுக்கும் புள்ளிவிவரம்தான். 2017-18 ஆண்டுக்கு இந்த நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி வேலையின்மை விகிதம் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக உயர்ந்திருந்தது. சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (CMIE) என்ற நிறுவனம் இந்த வேலையின்மை விகிதம் 7 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிட்டதாக குறிப்பிடுகிறது. தொழிலாளர் துறையும் வேலை பங்கெடுப்பு விகிதம் குறைந்துள்ளதாகவே கூறுகிறது என்று சுட்டிக்காட்டினார் ஜோதி சிவஞானம்.

(பிபிசி தமிழில் தளத்தில் 15 ஜனவரி 2020 வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: