You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் -'முரசொலி வைத்திருந்தால் திமுககாரன்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி'
முரசொலியை வைத்திருந்தால் தி.மு.க.காரன் எனவும் துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனவும் சொல்லிவிடலாம் என துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய ரஜினிகாந்த், துக்ளக் இதழின் மறைந்த ஆசிரியர் சோவை, பெரிய ஆளாக்கியது கருணாநிதிதான் என்று குறிப்பிட்டார்.
"நம் துணை ஜனாதிபதி இந்த இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறார் என்றால், அவர் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. படிக்கும் காலத்திலேயே கல்லூரியில் யூனியன் செயலராக இருந்தார். அப்போதுதான் வளர்ந்துவந்த கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியில் அப்போது ஆந்திராவில் 200-300 பேர்தான் இருந்திருப்பார்கள். அதில் சேர்ந்து கட்சியையும் வளர்த்து, தானும் வளர்ந்தார். அதன் அகில இந்தியத் தலைவராகி, மக்களுக்கு சேவை செய்து, கண்ணியமாக வாழ்ந்து இந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
இன்னும் அவர் நீண்ட காலம் சேவை செய்துவிட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கலாம். சீக்கிரமே வந்துவிட்டார். இது பெரிய இடம்தான். ஆனால், நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. அவர் இருந்தால், நாமும் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.
நான் பேசுவேன் என குருமூர்த்தி சொல்லிவிட்டார். ஆனால், பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. எனக்கு ஒரு நேரம் வரும். அப்போது பேசுவேன். அவரை வைத்துக்கொண்டு என்ன பேச முடியுமோ அதை இப்போது பேசுகிறேன்.
சோவின் கடைசி ஆறு - ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தனக்குப் பின் யார் இந்த துக்ளக் இதழை நடத்துவார்கள் என்று கவலை வந்துவிட்டது. அவருக்கு வேறு சாய்ஸே இல்லை. ஒரே ஒரு சாய்ஸ், குருமூர்த்திதான். ஆனால் குருமூர்த்தி அதை ஏற்கவில்லை. என்னிடம்கூட சோ சொன்னார், குருமூர்த்தியிடம் பேசும்படி. 'நீங்கள் சொல்லியே கேட்கவில்லை. நான் சொல்லியா கேட்கப்போகிறார்' என்றேன்.
எம்.ஜி.ஆர். படங்களை எடுத்துக்கொண்டால், அவரைத் தவிர, வேறு யார் நடித்தாலும் ஓடாது. அதுபோல, சோ இல்லாமல் துக்ளக் இரண்டு வாரம்கூட ஓடாது. துக்ளக் என்றால் சோ, சோ என்றால் துக்ளக்.
ஆனால், குருமூர்த்திக்கு பெரிய மனது. கையில் எடுத்தார். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. துக்ளக்கின் ஒரிஜினாலிட்டி கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகமாக, வீரியமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ்கள் படித்து உருவாவதில்லை. அவர்கள் உருவாகியே, பிறப்பார்கள். அவர்களை ஜீனியஸ் என அடையாளம் காண சில ஆண்டுகளாகும். அதற்கு ஒரு துறையை அவர்கள் தேர்வுசெய்வார்கள். அந்தத் துறையில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவார்கள். ஜனங்கள் அவர்களை அடையாளம் காண்பார்கள். அப்படி ஒரு ஜீனியஸ்தான் சோ. அவர் தேர்வு செய்த துறை பத்திரிகை துறை. ஆயுதம் துக்ளக்.
அவர் ஒரு பெரிய பட்டாளத்தையே உருவாக்கினார். முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளின்னு சொல்லிறலாம். துக்ளக் வைத்திருந்ததால அறிவாளியா, படிச்சு அறிவாளியானாரா - அது தெரியாது.
சோவை பெரிய ஆளாக்கியது இரண்டு பேர். ஒருவர் பக்தவத்சலம், மற்றொருவர் கலைஞர். பக்தவத்சலத்தின் அரசு இருந்தபோது, சோ நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பெரிதாக பிரபலமாகவில்லை. அப்போது 'சம்பவாமி யுகே.. யுகே' என ஒரு நாடகம். பக்தவசலத்தின் அரசை கடுமையாக விமர்சித்து அந்த நாடகம் இருந்தது. அந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென வழக்கு போட்டார்கள். அதை எதிர்த்து சோ ஜெயித்தார். அதனால், நாடக உலகில் பிரபலமானார்கள்.
1971ல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார்.
அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார். இன்னொரு சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் அறிமுகமாகியிருந்த சோவை, இந்தியா முழுக்க பிரபலமானார்.
நெருக்கடி நிலை வந்தது. அப்போது அட்டையில் கறுப்பு அட்டையை வெளியிட்டார். நெருக்கடி நிலைக்கு எதிராக மாநிலம் மாநிலமாக பிரச்சாரம் செய்தார். பெரிய தேசிய தலைவர்களுடன் பழகினார். இந்தியா முழுவதும் தெரியவந்தார் சோ.
இப்போது சோ போன்ற ஒரு பத்திரிகையாளர் மிக அவசியம். காலம் ரொம்ப கெட்டுப்போய் விட்டது. சமுதாயம் கெட்டுப்போய்விட்டது.
ஊடகங்கள்தான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும். அவர்களுக்கு பெரிய கடமை இருக்கிறது. சில ஊடகங்கள், டெலிவிஷன் சேனல்கள், எது நல்லதோ, எது உண்மையோ அதை வெளிப்படையாக மக்களிடம் சொல்லவேண்டும். நியூஸ்ங்கிறது ஒரு பாலு. அதுல பொய்யிங்கிற தண்ணிய கலந்துருவாங்க. அப்பாவி ஜனங்களுக்குத் தெரியாது. எது பாலு, எது தண்ணின்னு நீங்கதான் சொல்லனும்.
"பானி கா பானி.. தூத் கா தூத். தயவுசெய்து உண்மையை எழுதுங்க" என்று பேசினார் ரஜினி.
இதற்குப் பிறகு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பிற செய்திகள்:
- இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- இந்தியக் குடியுரிமை: 3 நாட்களில் 32,000 பேரை அடையாளம் கண்ட உத்தரப்பிரதேச அரசு
- 'இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்' - மஹிந்த ராஜபக்ஷ
- 'தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்டுவோம்' - மலேசிய பிரதமர் இந்தியாவுக்கு பதிலடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: