Dolittle - சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

Do Little

ஹாலிவுட்டில் ஏற்கனவே எடி மர்ஃபி நடித்து டாக்டர் டூலிட்டில் என்ற படம் வந்திருந்தாலும் அந்தப் படத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஹ்யூ ஜான் லாஃப்டிங் எழுதிய 'தி வாயேஜஸ் ஆஃப் டாக்டர் டூலிட்டில்' நாவலைத் தழுவியே இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

விக்டோரியா காலத்து இங்கிலாந்தில் நடக்கிறது கதை. விலங்குகளோடு பேசக்கூடிய திறமைவாய்ந்த டாக்டரான ஜான் டூலிட்டில் (டௌனி), தன் மனைவியின் மறைவுக்குப் பிறகு, மனிதர்களையே சந்திக்க விரும்பாமல், தன் தோட்டத்து வீட்டிலேயே முடங்கிப்போகிறார்.

விலங்குகளுடன் மட்டுமே பேசிக்கொண்டு வாழ்கிறார். அப்போது, அரசி விக்டோரியாவுக்கு உடல் நலம் குன்றிவிடுகிறது. அவரைக் காப்பாற்றினால்தான், டூலிட்டில் மிருகங்களுடன் வசிக்கும் தோட்டத்து வீட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை.

இதனால், அரசிக்கு மருத்துவம் பார்க்கச் செல்கிறார் டூலிட்டில். அரசிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை சரிசெய்ய தொலைதூரத் தீவு ஒன்றில் உள்ள மரத்தின் காயைப் பறித்து வர வேண்டும் என தெரிகிறது. ஆனால், அந்தப் பிரயாணத்தில் பல இடையூறுகள். அதையெல்லாம் மீறி, எப்படி அரசியைக் காப்பாற்றுகிறார் டூலிட்டில் என்பது மீதிக் கதை.

சந்தேகமேயில்லாமல் குழந்தைகளுக்கு மட்டுமான ஒரு படம் இது. அரசிக்கு பிரச்சனை; காப்பாற்ற வேண்டுமானால் மலை, கடல் கடந்து சென்று டிராகனுடன் சண்டை போட்டு மருந்தை எடுத்துவர வேண்டும் என்ற கதை பல நாடுகளிலும் உள்ளதுதான். அதே கதையை சற்று மாற்றி, நகைச்சுவையுடன் சொல்வதுதான் இந்த டூலிட்டில் சாகசம்.

ரொம்பவும் விறுவிறுப்பான படம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், துவக்கத்திலிருந்து முடிவுவரை, ஏதாவது ஒன்று நிமிர்ந்து உட்காரவைக்கும் வகையில் நடந்துகொண்டேயிருக்கிறது.

பெரியவர்கள் பார்த்தால், சற்று பொறுமை இழக்க வைக்கும். ஆனால், பதின்வயதுக் குழந்தைகள் நிச்சயம் ரசிக்கக்கூடிய திரைப்படம் இது. மிருகங்களுக்கு இடையிலான உரையாடல், அவற்றின் உடல் மொழி ஆகியவையும் ரசிக்க வைக்கிறது.

ராபர்ட் டௌனியின் நடிப்பு, கிராஃபிக்ஸ், மிருகங்களுக்கான குரல்கள் ஓகே ரகம். ஆங்கிலத்தில் பார்ப்பவர்களுக்கு டௌனியின் உச்சரிப்பில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், தமிழில் இதைவிட மோசமானவற்றையெல்லாம் பார்த்துவிட்டதால், அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை.

படத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவையெல்லாம் தேர்ந்த சினிமா ரசிகர்களை தொந்தரவு செய்பவை. குழந்தைகளைப் பொறுத்தவரை ரசிக்கத்தக்க படம் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :