பாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் - நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி

திருச்சி நகரத்தில் சாலையோரம் வசித்துவந்த பெண் ஒருவரை லாரி ஓட்டுநர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையோரம் பிச்சையெடுத்து வந்த பெண் ஒருவர் உணவு மற்றும் பணஉதவியை எதிர்பார்த்து பலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு உதவி செய்வதாகக் கூறி லாரி ஓட்டுநர் சதீஸ்குமார் கடந்த புதன் கிழமையன்று (ஜனவரி 15) அவரை மறைவான இடத்திற்குக் கூட்டிச்சென்று அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியபோது, அப்பெண் அலறியுள்ளார்.

அவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், சதீஸ்குமார் அங்கிருந்து தப்பித்துள்ளதாக வழக்கு பதிவுசெய்த விசாரணை அதிகாரி ஜெயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''சதீஸ்குமார் இதற்கு முன்னர் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்ததால், அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பதில் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்பதால், தற்போதுவரை கிடைத்த தகவலை வைத்து, சதீஷ்குமாரை கைது செய்துள்ளோம். அப்பெண்ணின் உடல்நலம் தேறிய பின்னர், விசாரணை செய்வோம்,'' என ஆய்வாளர் ஜெயா தெரிவித்தார்.

சதீஸ்குமார் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்தியாக வழக்குப் பதிவாகியுள்ளது என ஜெயா தெரிவித்தார்.

''அப்பெண்ணின் பெற்றோர் காலமாகிவிட்டார்கள். அவருடைய உறவினர் ஒருவர் சென்னையில் இருப்பதாக அவர் கூறுகிறார். உறவினர்களிடம் பேசி அவருக்கு பாதுகாப்பு கிடைக்குமா என விசாரிப்போம் அல்லது வழக்கு முடிந்த பின்னர், பெண்களுக்கான அரசு நடத்தும் பாதுகாப்பு இல்லத்திற்கு அவரை அனுப்பிவைப்போம்,'' என ஜெயா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :