வங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம் பேர் வீடிழந்த பரிதாபம் மற்றும் பிற செய்திகள்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 15 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாயின.

இதன் காரணமாக 50 ஆயிரம் பேர் வீடிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பின்னிரவில் சாலண்டிகா குடிசை பகுதியில் இந்தத் தீ விபத்து நடந்தது.

அங்கு வசிக்கும் பெரும்பாலோனர் குறைவான வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள். பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.

உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால், பலர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

வீடிழந்து தவிக்கும் பல்லாயிரம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

நலமான பொருளாதாரத்தை சுட்டும் ஐந்து அம்சங்கள்

2024-25ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ஐந்து ட்ரில்லியன் டாலர் வளர்ச்சி காணும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோதி நிர்ணயித்துள்ளார். தற்போது இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பு சுமார் 2.7 ட்ரில்லியன் டாலராகும்.

நரேந்திர மோதி நிர்ணயித்துள்ள பொருளாதார இலக்கை அடைய வேண்டுமென்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எட்டு சதவீதமாக இருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் தொடக்கம்

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் கடந்த 12 நாட்களாக முடக்கப்பட்டிருந்த தகவல் தொடர்பு சேவைகள், ஓரளவிற்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. ஜம்முவின் ஐந்து மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது வரை 17 டெலிபோன் எக்ஸ்சேன்ஜுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் இல்லையா?

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்று வரையான காலம் வரை நாட்டை இரண்டு பெண்கள் மாத்திரமே ஆட்சி செய்துள்ளனர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது மகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே இலங்கையை ஆட்சி செய்த பெண் தலைவர்களாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தனர்.

1960 - 1965, 1970 - 1977 மற்றும் 1994 - 2000 வரையான காலப் பகுதிகளில் உலகின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கையில் பிரதமராக பதவி வகித்திருந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 36 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை.

மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மாலை 5:22 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்தததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: