You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்?
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூட்டாட்சி தத்துவத்தின் பாதுகாவலனாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார். இந்திய மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் தருபவராக தன்னை காட்டிக் கொள்வார்.
ஆனால், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்திய கூட்டாட்சி தத்துவத்தை பலவீனப்படுத்தும் செயலாக பலரால் பார்க்கப்படுகிறது.
புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நேரடியாக டெல்லியின் ஆளுகைக்குள் இருக்கும்.
"மிகை அதிகாரம் கொண்ட நகராட்சிகள்"
இந்தியக் கூட்டாட்சியில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களைவிட அதிகாரம் மிகவும் குறைவு.
இதனை, "டெல்லியின் கட்டுபாட்டில் இயங்கும் மிகை அதிகாரம் கொண்ட நகராட்சிகள்" என்று வர்ணிக்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் சுமந்திரா போஸ்.
கடினமாக போராடி பெறப்பட்ட ஒன்று
கலாசார ரீதியாக ஒரே தன்மைவாய்ந்த அதே சமயம் பொருளாதாரரீதியாக முன்னேறிய கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகார பகிர்வு தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில / பிராந்திய அரசுகளுக்கு இடையே கருத்தொருமிப்பு இருக்கிறது.
ஆனால், வெவ்வேறு கலாசாரம் மற்றும் மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவான நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் கூட்டாட்சி முறையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுதல் அவ்வளவு எளிதானதல்ல.
ஒற்றை ஆட்சி அமைப்புக்கும், கூட்டாட்சி அமைப்புக்கும் ஒரு நுட்பமான சமநிலையை அடைய அரசமைப்பு பாடுபடுகிறது என்கிறார் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகியான யாமினி அய்யர்.
"அதே சமயம் சில அரசியல் விமர்சகர்கள், "இந்திய கூட்டாட்சி நம்பகத்தன்மை," குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகம் தோல்வி அடையும்போது, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மாநில ஆட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.
ஆனால், மாநில அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் போது, பெரும்பாலும் ஆளுநரின் கட்டுப்பாட்டில் மாநில அரசு வருகிறது. இந்தியாவில் 1951 - 1997 இடையிலான காலக்கட்டங்களில் மட்டும் 88 முறை இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
கூட்டாட்சி மீதான கறை
மாநில அரசு இல்லாதபோது, மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல், உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் பேசாமல் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செயதது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கறையாக பார்க்கப்படுகிறது.
ப்ரூக்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வருகைதரு ஆய்வாளர் மற்றும் 'டிமிஸ்டிஃபையிங் காஷ்மீர்' புத்தகத்தின் ஆசிரியரான நவநிடா சந்தா பெகேரா, "ஜனநாயக மாண்புகள் தகர்த்து ஒற்றை ஆட்சி முறையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைதான் அரசின் இந்த முடிவு உணர்த்துகிறது. இந்திய கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் செயல் இது. அரசின் விரிவான திட்டத்தை புரிந்து கொள்ளாமல், அரசின் முடிவை கொண்டாடுவதில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்," என்கிறார்.
மேலும், "உண்மையில் கவலை அளிப்பது என்னவென்றால், இன்று காஷ்மீருக்கு நிகழ்ந்தது நாளை எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றிய அரசு ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைத்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து, அதிகாரம் அற்றதாக மாற்றலாம். இதனை கடந்து கவலை அளிப்பது, எதிர்ப்புகுரல்கள் ஒடுக்கப்படுவதும், இதுமாதிரியான சூழலில் மாநில கட்சிகள் அமைதியாக இருப்பதும்தான்," என்கிறார் அவர்.
இந்திய ஜனநாயகம் வலுவாக இருக்க இந்திய கூட்டாட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்கிறார் யாமினி அய்யர்.
ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அணு ஆயுத தேசம் பக்கத்தில் இருக்கும்போது, அதன் அருகிலேயே இவ்வாறான சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலம் இருப்பது நல்லதல்ல என்பது அவர்கள் வாதம்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்குவது முறையல்ல என்கின்றனர் இந்திய அரசை ஆதரிப்பவர்கள். சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சி எதிர்த்து கொண்டிருக்கிறது.
கிளை ஒட்டுகள் இல்லை - உச்ச நீதிமன்றம்
அரசியல் சட்டம் மூலம் மத்திய அரசுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் மாநில அரசுகள் மத்திய அரசின் கிளை ஒட்டுகள் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் தெளிவாகக் கூறியுள்ளது.
"மாநில அரசுகளுக்கு என்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரங்களில் அவைதான் சர்வ வல்லமை மிக்கவை; அந்த அதிகாரங்களை மத்திய அரசு சிதைக்க முடியாது," என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டுமானமே கூட்டாட்சி முறைதான் என்பதை உச்ச நீதிமன்றம் இதுவரை உறுதிப்படுத்தியே உள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் எப்படி செயல்படப்போகிறது? "உச்ச நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு இந்த வழக்கு ஒரு பரீட்சைதான்," என்கிறார் நவநிடா சந்தா பெகேரா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்