You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலர் தின சிறப்பு பகிர்வு: ஆதியில் ஆப்பிள் இந்த சுவையில் இருந்தது #ValentinesDay
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி மெல்லிய ஒலியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏதேதோ நினைவுகள் கணப் பொழுதில் நினைவில் தோன்றி மறைகின்றன. எப்படி முழுவதும் செவித் திறன் அற்றவரால் ஓர் இசையை இவ்வளவு நேர்த்தியாக கோர்க்க முடிந்தது. ஒலியை கொண்டு இப்படியான ஓர் அற்புதத்தை படைக்க முடிந்தது?
பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனியும் காதலும்
ஆன்மாவிலிருந்து இசைக்கான குறிப்புகளை எடுத்து மெல்ல அவரது மனத் திரையில் ஒலிக்கவிடுவாராம். பெளதீக ரீதியாக கேட்க முடியாத, அவரது நினைவுகளில் மட்டுமே ஒலித்த அந்த இசை குறிப்புதான் பீத்தோவனின் பத்தாவது சிம்பொனியாக உயிர் பெற்று இருக்கிறது.
ஆன்மாவிலிருந்து உருவாக்கப்பட்ட படைப்பு அது.
விளைவுகள் கொண்டு வரும் பலன்களை எதிர்ப்பார்க்காமல், செய்யும் பணிமீதான உச்சபட்ச காதலின் உருவாக்கம் அது.
ரூமியின் சொற்களில் சொல்ல வேண்டுமானால், "உங்கள் ஆன்மாவிலிருந்து ஒரு பணியை செய்யும் போது, உங்களுக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சி நதி ஓடுவதை உணர்வீர்கள்".
'ஆதியில் ஆப்பிள் இந்த சுவையில் இருந்தது'
நினைவுகளை கொஞ்சம் தூசுதட்டி பார்த்தால், இப்படிதான் எல்லாமும் இருந்திருக்கிறது. நாமும் இருந்திருக்கிறோம். ஆன்மாவிலிருந்து அனைத்தையும் செய்த காலமொன்று இருந்தது. லைக்கிற்கு ஏங்காத, எதற்கும் தன்னை முன்னிறுத்தாத காலமாக அது இருந்திருக்கிறது. இந்த அளவுக்கு 'ஷோ ஆஃப்' இல்லாத காலமது.
எப்போதும் காலத்தின் நினைவுகளோடு சினிமா ஒட்டி இருக்கும்தானே?
ஒரு காலத்தை நினைவு கூறும்போது, அதன் இலவச இணைப்பாக ஏதோ ஒரு சினிமாவும் வரும்தானே. அப்படிதான் காதல் கடந்து வந்திருக்கும் காலக்கட்டங்களை அசைபோடும் போது எனக்கு முதலில் 'காதலுக்கு மரியாதை' என்ற திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது.
வளர்ந்த கிராமமான தஞ்சாவூரில் அந்த படத்தை பார்த்தது உறைந்த நினைவுகளாக அப்படியே இருக்கிறது. அந்த படத்தை தங்கள் நிஜ வாழ்வோட பொருத்தி பார்த்த எங்கள் தெரு அண்ணன்களும் நினைவுக்கு வருகிறார்கள்.
அப்போதும் ஸ்டாக்கிங் இருந்ததுதான். எந்த காலத்திலும் அதை நியாயப்படுத்த முடியாதுதான். ஆனால், நான் பார்த்த அண்ணன்கள் பெண்களை தொந்தரவு செய்யாதாவர்களாகதான் இருந்திருக்கிறார்கள். காதலில் கசிந்துருகி இருக்கிறார்கள். 'வெட்றா அவளை குத்துறா அவளை' என்று சொல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
திரைப்படத்தை அவர்கள் பிரதிபலித்தார்களா அல்லது அவர்களை திரைப்படம் பிரதிபலித்ததா என்று எனக்கு புரிபடவில்லை.
ஆனால், இப்போது அதுவொரு நாஸ்டால்ஜியா .
'ராமும், ஜானுவும்'
அனைவரும் அப்படியான ஒரு நினைவுகளுக்குதான் ஏங்கி இருக்கிறோமென நினைக்கிறேன். குறைந்தபட்சம் என் வயதுடையவர்கள், மனதை அசைத்து பார்க்கும் இசையை கேட்கும் போதோ, அல்லது மெல்லிய தூரலில் மலை பின்னணியில் ஒரு மேகக் கூட்டம் ஊர்ந்து போகும் தருணத்தில் லயித்திருக்கும் போதோ, அப்படியான நினைவுகளை அசைப்போட்டு இருக்கிறார்கள் என நம்புகிறேன்.
அதனால்தான் 96 திரைப்படம் இப்படியொரு மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. பெண்கள் இரவு சுற்றக் கூடாது, ஸ்லீவ்லெஸ் அணியக் கூடாதென ஒப்புக் கொள்ள முடியாத பிற்போக்குகள் அந்தப் படத்தில் இருந்தாலும், முப்பது வயதை கடந்தவர்கள் தம்மை ராமாகவும், மணம் முடிக்காத காதலியை ஜானுவாகவும் பொருத்தி பார்க்கிறார்கள்.
எல்லாவற்றையும் நினைத்த பொழுதில் நிகழ்த்தி காட்ட வாய்ப்புகளும், சாத்தியங்களும் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், இறகின் மெல்லிய தீண்டலில் ஒலிக்கும் இசையாக இருந்த அந்த திரைப்படம் பெரும்பாலானவர்களை அசைத்து பார்த்து இருக்கிறது. ஒரு காலப் பயணம் மேற்கொள்ள வைத்திருக்கிறது.
'உலகமயமாக்கலும் காதலும்'
காதல் எப்படி பல்வேறு படிநிலைகளை கடந்து இங்கு வந்தது என்பதை யோசித்தால் உலகமயமாக்கலின் தாக்கம் என்பதுதான் விடையாக வந்து நிற்கிறது.
1990களில் தாராளமயமாக்கல் இந்திய சமூகத்தில் நிகழ்ந்து இருந்தாலும், அது கடைசி மனிதர்களிடமும் விளைவுகளை ஏற்படுத்தியது 2000ஆம் ஆண்டுக்கு பின்புதான் என்று நினைக்கிறேன். அந்த மாற்றம்தான் இங்கு காதல் பரிமாறும் விதம், அது நிலைத்திருக்கும் காலம் எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் என் இரு நண்பர்கள் பேசிக் கொண்டது நினைவுக்கு வருவதை இந்த சமயத்தில் தடுக்க முடியவில்லை. ஒருவர், "என்ன நாகரிகம் இது. காதலர் தினம் என்பதெல்லாம் மேற்கத்திய கலாசாரம்" என்றார். அதற்கு மற்றொரு நண்பர், "நமக்கு மேற்கத்திய நிதி மட்டும் வேண்டும். கலாசாரம் வேண்டாமா. வரும் நிதியின் இலவச இணைப்பு அது" என்றார்.
இங்கு எதுவும் 'தனி' என்று கிடையாது ஒரு விஷயம் மற்றொரு விஷயத்தில் தாக்கம் செலுத்தும். அதுதான் இயற்கையின் விதி.
சங்க காலத்தில் உடன்போக்கு இருந்தது. உலகமயமாக்கலுக்குப் பின் லிவிங் டு கெதராக இருக்கிறது.
காலம் நகரும்; அதனுடன் சேர்த்து அனைத்தையும் நகர்த்தும். காதலும் வேறுவிதமாக பரிணாமம் அடையும். எக்காலமானாலும் ஆன்மாவிலிருந்து விளையும் எதுவும் பெரும் மகிழ்ச்சியை தரும்.
ஒன்பதாவது சிம்பொனி பீத்தோவனுக்கு கொடுத்தது போல.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :