You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமா? - நீதிபதி கருத்து
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சேர்ந்தவரையே நியமிக்கலாமா?
"இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது, எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அவரது கட்சியை சார்ந்தவரையே எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாமே?" என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்கிறது அந்நாளிதழ் செய்தி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மதிப்பனூரை சேர்ந்த தாமோதரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்ததால், திருவாரூர் தொகுதி காலியானது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வெளியிட்டது. சில நாட்களில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை செய்யாமல் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்காக, தேர்தல் ரத்து நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையர் மேற்கொண்டுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் பிறப்பித்த அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "ஒரு தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க, இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, மரணம் அடைந்தவர் சார்ந்த கட்சி சார்பில் மற்றொருவரை தேர்வு செய்து, அவரை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக நியமனம் செய்யலாமே?
இதுபோன்ற நடவடிக்கைகளால் பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும். இது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு பொருத்தமானதாக இருக்காது" என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் எதிர்தரப்பு வக்கீல் ஆஜராகாததால், விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமணி: 'இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் வழக்குரைஞருக்கு ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ்'
முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் திருப்பத்தூர் பெண் வழக்குரைஞருக்கு வட்டாட்சியர் வழங்கினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
திருப்பத்தூரைச் சேர்ந்த பொ.வே.ஆனந்தகிருஷ்ணன்-மணிமொழி தம்பதியின் மூத்த மகள் சிநேகா (35) வழக்குரைஞர். இவரது கணவர் கி.பார்த்திபராஜா, திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிநேகா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்று வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து பல்வேறு விசாரணைகளுக்குப் பின்னர், அவருக்கு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் டி.எஸ்.சத்தியமூர்த்தி, சிநேகாவுக்கு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து வழக்குரைஞர் சிநேகா கூறியது:
பள்ளியில் முதல் வகுப்பு சேர்க்கையின்போது பள்ளி நிர்வாகம் நான் என்ன ஜாதி என்று கேட்டது. எனக்கு ஜாதியும் இல்லை, மதமும் இல்லை என்று என் பெற்றோர் கூறினர். பள்ளி முதல் கல்லூரி வரை எதிலும் ஜாதி, மதம் குறிப்பிட்டதில்லை. இந்தியர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.
எனது சகோதரிகள் இருவரின் பிறப்பு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்களிலும் இந்தியர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்து தமிழ்: 'பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை'
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த அவரிடம் ''பாஜக, தேமுதிக, பாமக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா'' என செய்தியாளர்கள் கேட்டனர், அதற்கு அவர், "நீங்கள் கூறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாக நடப்பதாக, ஒருங்கிணைப்பாளரும் முதல்வரும் கூறியுள்ளனர். முடிந்ததும் வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பார்கள். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. அதனால், கூட்டணி பேச்சில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை நடந்துவருகிறது." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். எங்களுக்கு எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட எதிரி திமுக. துரோகி அமமுக. அவர்கள் இருவரும் எங்களுக்குத் தேவையில்லாதவர்கள். அவர்கள் தவிர யார் வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த தடையில்லை'' என்று கூறினார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மாநகராட்சிகளாகின்றன ஓசூர், நாகர்கோவில்'
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகியன மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான சட்ட மசோதாக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப் பேரவையில் புதன்கிழமை தனித்தனியாக தாக்கல் செய்தார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
இந்த மசோதக்கள் சட்டமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நிறைவேற்றப்படும் என்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :