You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக் டாக் தடை சாத்தியமா? என்ன சொல்கிறது அந்த நிறுவனம்?
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.
சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.
''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறாக கூறினார் மணிகண்டன்.
"டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும்," என்று அன்சாரி கோரிக்கை வைத்ததை அடுத்து அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸும் டிக் டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். டிக் டாக் செயலி இளைஞர்களை கெடுப்பதாகவும், கலாசார சீர்கேட்டிற்கு வித்திடுவதாகவும் அவர் கூறி இருந்தார்.
அமைச்சரின் இந்த முடிவினை பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜனும் வரவேற்று இருந்தார்.
தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களும் டிக் டாக் செயலியால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டுமென்றும் குரல்கள் ஒலிக்கின்றன.
சரி. இது போன்ற செயலிகளை தடை செய்வது சாத்தியமா? சாத்தியமென்றால் யாரை அணுக வேண்டும்?
இதற்கான பதிலை காண்பதற்கு முன், டிக் டாக் தடை செய்யப்பட வேணும் என்ற கோரிக்கை குறித்து பெண்ணிய செயற்பாட்டாளர்களும், டிக் டாக் பிரபலங்களும் என்ன நினைக்கிறார்கள்?
வளர்ச்சிக்கு உதவுகிறது டிக்டாக்
டிக் டாக் பிரபலமான வைஷ்ணவி ராஜசேகர், டிக் டாக்கை தடை செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார்.
"முறையாக பயன்படுத்தினால் டிக் டாக் மூலமாக நாம் வளர முடியும். என்னுடைய வளர்ச்சிக்கு டிக் டாக் பயன்பட்டிருக்கிறது. சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். மோசமான வீடியோக்களை பகிர்கிறார்கள் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். அதற்காக முழுமையாக தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை," என்கிறார்.
டிக் டாக் மூலமாக தனது நடனத் திறமையை வெளிபடுத்தி ரஜினிகாந்திடமிருந்து பாராட்டுகளை பெற்ற மஞ்சுவின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.
அவர், "திறமைகளை வெளிப்படுத்த சரியான தலம் இது. பயனர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், டிக் டாக் நிறுவனமும் சில கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும். மோசமான காணொளிகளை பதிவேற்ற செய்ய முடியாத படி செய்ய வேண்டும்," என்கிறார்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அதிகளவில் டிக் டாக்கை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எஃப்.எம் ஆர்.ஜேவான ஸ்டீஃபனும் அதில் ஒருவர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டீஃபன், "திறமைகளை வெளிப்படுத்த தகுந்த நல்ல மேடைதான் டிக் டாக். ஆனால், அதை பயன்படுத்த அதிகளவில் சுயக்கட்டுபாடு தேவை. இதில் என்ன பிரச்சனை என்றால் சுயகட்டுப்பாட்டை தகர்க்கும் விஷயங்கள் அதிகளவில் டிக் டாக்கில் உலவுவதுதான். அதுவொரு போதை," என்கிறார்.
"டிக்டாக்கை முடக்க முயலும் அரசின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், அதே நேரம் இந்த செயலி முடக்கப்பட்டால், இன்னொரு செயலி வரும்," என்கிறார்.
தடை செய்யப்பட வேண்டுமா?
செயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், "எந்த செயலிகளையும் அரசு தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஆனால், இந்த டிக் டாக் விஷயத்தில் நிலைமை எல்லை மீறி போய் விட்டதாகவே நான் நினைக்கிறேன். அது தடை செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடுதான்," என்கிறார்.
மேலும் அவர், "கலாசாரம் கெட்டுவிட்டது என்ற பார்வையில் நான் இதனை அணுகவில்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்குமானது. இதைத்தான் செய்ய வேண்டும். இதனை செய்யக் கூடாது என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், கவனத்தை ஈர்க்க டிக் டாக் மூலமாக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டார்கள். அதுதான் பதற்றமடைய செய்கிறது," என்கிறார்.
சமூக ஊடகத்திற்கென உத்தி வகுக்கும் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் சோனியா அருண்குமார் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.
சோனியா அருண்குமார், "பெண்கள் நடனம் ஆடுவது, பெண்கள் தங்களை முன்னிறுத்துவது, அதன் மூலமாக பிரபலமடைவதுதான், இவர்களுக்கு உறுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் இவ்வாறாக தடை கோருவது எல்லாம்," என்கிறார்.
பெண்களுக்கு இணையவெளியில் எந்த பாதுகாப்பும் இல்லை. இங்கே அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். மோசமான கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். அது குறித்து புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சூழல் இப்படி இருக்கும்போது டிக் டாக்கை மட்டும் தடை செய்ய சொல்லுவது ஏன்?
இதனையெல்லாம் கடத்து டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்யவெல்லாம் முடியாது. ஒரு செயலி முடக்கப்பட்டால் இன்னொரு செயலி ஆப் ஸ்டோருக்கு வரும்," என்கிறார்.
டிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் டிக் டாக் தங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.
சாத்தியமா?
எல்லோரும் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான். டிக் டாக்கை முடக்கலாம். ஆனால், அது போல நூறு செயலிகள் ஆப் ஸ்டோருக்கு வரும் என்பதுதான்.
இது தொடர்பாக மென்பொறியாளர் என்.வெங்கட், "இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும். ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு பைரடெட் வெர்ஷன் கிடைக்கும். அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது," என்கிறார்.
மீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது? என்ற நம் கேள்விக்கு. அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது," என்கிறார்.
டிக் டாக் நிறுவனம் என்ன சொல்கிறது?
அந்நிறுவனத்தின் சார்பாக பேசிய பூமிகா அவஸ்தி, "பயனாளிகள் டிக் டாக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தாங்கள் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்றார்.
மின்னஞ்சல் மூலம் சில விளக்கங்களை அவர் அளித்தார்.
"டிக் டாக் விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம். உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்," என்று அந்த மின்னஞ்சல் விவரிக்கிறது.
மேலும் பூமிகா, "இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :