2.0 : சினிமா விமர்சனம் #2Point0Review

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
2.0

பட மூலாதாரம், 2.0/Facebook

2010ல் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் பின்னணியை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம். அதாவது விஞ்ஞானி வசீகரன் மற்றும் அவரது கண்டுபிடிப்பான 'சிட்டி' ரோபோவின் அடுத்த சாகசம்.

பறவையியல் நிபுணரான டாக்டர் பக்ஷிராஜன் (அக்ஷய் குமார்) செல்போன்களாலும் அதற்காக அமைக்கப்படும் டவர்களாலும் உருவாகும் கதிர்வீச்சுகளால் பறவைகள் பாதிக்கப்படுவதைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப் போராடுகிறார். ஆனால், அது நடக்காமல் போக, ஒரு செல்போன் டவரில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

இதற்கிடையில், நகர் முழுவதும் செல்போன்கள் பறிக்கப்படுகின்றன. யார் பறிப்பது, பறிக்கப்பட்ட செல்போன்கள் எங்கே செல்கின்றன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே, கோரமான கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதையடுத்து டாக்டர் வசீகரனை (ரஜினிகாந்த்) அரசு உதவிக்கு அழைக்க, அவர் தன் முந்தைய கண்டுபிடிப்பான 'சிட்டி' வந்தால்தான் இதை எதிர்கொள்ள முடியும் என்கிறார். இதையடுத்து சிட்டி மீண்டும் உருவாக்கப்படுகிறது.

தற்கொலைசெய்துகொண்ட பக்ஷிராஜன்தான், இம்மாதிரி செல்போன்களைப் பறித்து, கொலைகளைச் செய்கிறார் என்பதும் தெரிகிறது. இதையடுத்து சிட்டியும் பக்ஷிராஜனும் மோதுகிறார்கள்.

ரொம்பவும் எளிய கதை. இந்தத் திரைக்கதையில் ஓரளவுக்கு மேல் திருப்பு முனைகளோ, சஸ்பென்ஸோ இருக்க முடியாது. ஏன், சுத்தமாக அப்படி ஏதும் இல்லை என்றே சொல்லலாம். கதாநாயகியும் ஒரு ரோபோ என்பதால் காதல், குடும்பம் போன்ற சென்டிமென்ட் காட்சிகளும் இல்லை. ஆகவே, படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை நம்பியே நகர வேண்டிய கட்டாயம். ஆனால், கிராஃபிக்ஸில் நடக்கும் அந்த ஆக்ஷன் காட்சிகளை எவ்வளவு நேரத்திற்கு ரசிக்க முடியும்?

2.0/Facebook

பட மூலாதாரம், 2.0/Facebook

ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் என இரண்டே முக்கிய பாத்திரங்கள்தான். இதில் பெரும்பாலும் அக்ஷய் குமார் பறவையாக வருகிறார். ரஜினிகாந்த் பெரும்பாலும் ரோபோவாக வருகிறார். இதனால், இந்த இருவரில் யாருடனும் ஒட்ட முடியாமல், சண்டைக் காட்சிகளை மட்டும் பார்க்க வேண்டியிருக்கிறது. டாக்டர் பக்ஷிராஜன் இவ்வளவு பெரிய வில்லனாக மாறுவதற்குப் பின்னாலிருக்கும் கதையாக சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் அவ்வளவு உணர்ச்சிகரமாக இல்லை. ஆகவே, கதையோடு சுத்தமாக ஒன்ற முடியவில்லை.

பல காட்சிகள் எந்திரன் படத்தையும் அந்நியன் (குறிப்பாக ஸ்டேடியத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சி) படத்தையும் நினைவுபடுத்துகின்றன.

தவிர, இறந்த மனிதனின் ஆவி, பேய் போன்றவற்றுக்குப் பதிலாக, அதற்கு அறிவியல் விளக்கம் கொடுப்பதாகச் சொல்லி, ஆரா, மைக்ரோ - ஃபோட்டோன்ஸ் என்றெல்லாம் அதை விளக்குவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

2.0

பட மூலாதாரம், 2.0/Facebook

முந்தைய படத்தில் வரும் டாக்டர் போராவின் மகனாக ஒருவரை அறிமுகப்படுத்தி, அவரது பாத்திரமும் முழுமையாகாமல் சென்றுவிடுகிறது.

படத்தின் பிற்பாதியில் சிட்டி முழுமையாக பக்ஷிராஜனுடன் சண்டைபோட களத்தில் இறங்கும்போதுதான் படம் சூடுபிடிக்கிறது. ஆனால், அதற்குள் முக்கால்வாசிப் படத்தைப் பார்த்து சோர்ந்துபோயிருப்பதால், இந்த ஆக்ஷன் காட்சிகள் பெரிய விறுவிறுப்பை ஏற்படுத்துவதில்லை.

வசனம், நகைச்சுவை, பஞ்ச், ரசனை எதுவும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் தட்டையான வசனங்கள், படத்தின் மற்றுமொரு பலவீனம்.

படத்தின் நாயகன் ரஜினிகாந்த்துக்கு இது மற்றொரு குறிப்பிடத்தக்க படமல்ல. மிகச் சாதாரணமாக அறிமுகமாவதிலிருந்து முற்பாதி முழுக்க ரொம்பவுமே அடக்கிவாசிக்கிறார். ரஜினியிடம் சாதாரணமாக தென்படும் உற்சாகமும் துள்ளலும்கூட இதில் இல்லை. ஆனால், பிற்பாதியில் சிட்டியாக வரும்போது சில காட்சிகளில் பிரமாதப்படுத்துகிறார். அந்தக் காட்சிகளைவிட்டுவிட்டால், இந்தப் படத்தில் எதற்கு ரஜினி என்றுதான் கேட்கத் தோன்றும்.

2.0

பட மூலாதாரம், 2.0/Facebook

வில்லனாக வரும் அக்ஷய்குமார் படம் நெடுக கிராஃபிக்ஸ் பறவையாக வருவதால், அவரது நடிப்பைப் பற்றி ஏதும் சொல்ல முடியாது. ஆனால், ஃப்ளாஷ் - பேக் காட்சியில் வரும் அக்ஷய் குமார் பரவாயில்லை.

கதாநாயகி எமி ஜாக்சனுக்கு ரோபோ வேடம். அந்த வேடத்தில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

2.0

பட மூலாதாரம், 2.0/Facebook

'புள்ளினங்காள்', 'எந்திரலோகத்து சுந்தரியே' என இரண்டே பாடல்கள். அதிலும் ஓரு பாடல், படம் முடிந்த பிறகுதான் வருகிறது. இவற்றைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.

படத்தின் தொழில்நுட்ப அணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. குறிப்பாக படத்தின் துவக்கத்தில் பங்களித்தவர்களின் பெயர்கள் திரையில் வரும் காட்சிகள் அட்டகாசம். சில காட்சிகளில் கிராஃபிக்ஸ் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும், பல இடங்களில் அசத்துகிறது.

ஆக்ஷன் காட்சிகளுக்காக குழந்தைகள் இந்தப் படத்தை ரசிக்கக்கூடும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :