இனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்
இன்று முக்கிய நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர்: காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்

பட மூலாதாரம், Hindustan Times
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, டில்லி - ஹரியானா எல்லையில் உள்ள, குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள, 'லைவ் டெல்லர்' பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம்., இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும், ஏ.டி.எம்., சாதனத்தில், காசோலையை செலுத்த வேண்டும்.
அத்துடன், ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே, 'ஸ்கேன்' செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம்., மானிட்டர் திரை மீது, வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து, ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
இந்த முறையில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு, உடனடியாக பணம் பெற முடியும். அத்துடன், பணம் டெபாசிட் செய்வதற்கும், தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும், இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும். தற்போது, இரண்டு வங்கிகள், இந்த புதிய, ஏ.டி.எம்.,மை பயன்படுத்த துவங்கியுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கறது.

தினமணி : புயலில் குடிசைகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்

பட மூலாதாரம், Getty Images
கஜா புயலால் குடிசைகளை இழந்த ஏழைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "கஜா புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் குறித்த எச்சரிக்கை பெறப்பட்டவுடன், விரிவான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
புயலால் சேதமடைந்த மரங்களை வெட்டி அகற்ற, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மக்களுக்குப் பணி வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களில், உயர் தொழில்நுட்பத்தின் மூலம் மா, பலா, தென்னை, முந்திரி போன்றவற்றை மீண்டும் பயிரிடவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் அரசு முழுமையாக உதவும்.
புயல் சீற்றத்தில் குடிசைகளை இழந்த ஏழை மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
பயிர் சேதங்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகைகள், தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும். முதல்கட்ட நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதற்காகவும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என அவர் தெரிவித்ததாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா : உலக கோப்பை ஹாக்கி - முதல் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

பட மூலாதாரம், TWITTER / HOCKEY INDIA
புவனேஸ்வரில் கலிங்கா விளையாட்டரங்கில் நடந்துவரும் 14-ஆவது உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை 5-0 என்று இந்தியா வென்றுள்ளது குறித்த செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது.
ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்திய வீரரான மன்தீப் சிங் முதல் கோலை போட, அடுத்த இரண்டு நிமிடங்களில் ஆகாஷ்தீப் சிங் அணிக்கான அடுத்த கோலை அடித்தார்.
இப்போட்டியில் இரண்டு கோல்களை அடித்த சிம்ரன்ஜீத் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தடுப்பாளர்கள் சிறப்பாக விளையாடியது பற்றி குறிப்பிட்ட தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர் 2-ஆம் தேதியன்று நடக்கவுள்ள தனது அப்டுத்த போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா சந்திக்கவுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













