9000 ஆண்டுகள் பழமையான முகமூடியை வெளியிட்டது இஸ்ரேல்
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
9000 ஆண்டுகால பழமையான முகமூடியை வெளியிட்ட இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP/getty
9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கைவினை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தாண்டு தொடக்கத்தில் திருடர்களிடம் இருந்து அதிகாரிகள் இந்த முகமூடியை கைப்பற்றியதாக இணைய நாளிதழான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
பிங்க் மற்றும் மஞ்சள் சேன்ட்ஸ்டோனால், நியோலிதிக் யுகத்தில் இது செய்யப்பட்டது.
"இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது" என்று இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ரோனித் லூபு ஏ எஃப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காபூலில் குண்டுவெடிப்பு - குறைந்தது 10 பேர் பலி

பட மூலாதாரம், EPA
காபூலில் பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனமான G4S தாக்கப்பட்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
நிறுவனத்திற்கு வெளியே கார் குண்டை வெடிக்கச் செய்த துப்பாக்கிதாரிகள் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். இறந்தவர்களில் வெளிநாட்டுகாரர்களும் இருப்பதாக பாதுகாப்பு அமைப்பு வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
கடுமையான துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளது.
G4S என்பது பிரிட்டன் தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாக்க உதவும் உலகின் பெரும் பாதுகாப்பு குழுக்களில் ஒன்றாகும்.

ஜமால் கஷோக்ஜி கொலை: விசாரணைக்கு வராத சிஐஏ இயக்குனர்

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவுடனான உறவுகள் குறித்த செனட் விசாரணைக்கு மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ-வின் இயக்குனர் வராததை அமெரிக்க செனட்டர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆதாரங்களை அளித்தும், சிஐஏ இயக்குனர் ஜினா ஹேஸ்பல் வராததை, ஏதோ அவர் மூடி மறைப்பதாக செனட்டர் ஒருவர் விவரித்தார்.
பின்னர், ஏமனில் சௌதியால் முன்னெடுக்கப்பட்ட போருக்கான அமெரிக்காவின் ஆதரவை நிறுத்துவதற்கான நடவடிக்கைக்கு செனட் வாக்களித்தது.
பிரபல எழுத்தாளர் கொலை செய்யப்பட்டதையடுத்து, சௌதி மீதான விமர்சனங்கள் அதிகமாகி வருகின்றன. அமெரிக்க குடியுரிமை உள்ள சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.

யுக்ரேன் அதிபர் மீது புதின் பரபரப்பு குற்றச்சாட்டு

பட மூலாதாரம், AFP
2019-ஆம் ஆண்டில் நாட்டில் நடக்கவுள்ள தேர்தலில் தனது வாய்ப்புகளை அதிகரிக்க யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட்டதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் எஃப்எஸ்பி எல்லை படையினர் யுக்ரேனின் கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை கைப்பற்றினர்.
ரஷ்யாவில் புதன்கிழமையன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ''எல்லையில் நிலவும் சூழலை மேலும் பதட்டமாக வைத்திருக்க அவர் ஏதாவது செய்தாக வேண்டும்'' என்று யுக்ரேன் அதிபரை குறிப்பிட்டு புதின் பேசினார்.
பிற செய்திகள்:
- 2.O வெளியானது: மொழிகளை கடந்த கதாநாயகனா ரஜினி?
- இந்தோனீசிய விமான விபத்து: பறக்க தகுதியற்ற விமானத்தை இயக்கியதால் ஏற்பட்ட விளைவு
- கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது
- "ஸ்டெர்லைட் ஆய்வு குழுவினரின் அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை" - பாத்திமா பாபு
- குடிபோதையில் மருத்துவம் பார்த்து தாய், சேய் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












