2.O வெளியானது: மொழிகளை கடந்த கதாநாயகனா ரஜினி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
வியாழக்கிழமையன்று ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்றான 2.O திரைப்படம் உலகெங்கிலும் ஏறக்குறைய 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதற்கு முன்பு திரைப்பட வசூலில் சாதனை படைத்த பல முன்னணி இந்திய திரைப்படங்களின் சாதனையை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரைப்படத்துறையிலும், சில ஆண்டுகளாக பல இந்திய மொழி திரைப்படங்களிலும் ரஜினிகாந்த் கோலோச்சி வருவதாக கூறப்படுவது உண்மையா என்பது பற்றியும், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு எப்படி சாத்தியமானது என்பது குறித்தும் சில திரைப்பட வல்லுனர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திரைப்பட விமர்சகரான சரா சுப்ரமணியம், ''80 மற்றும் 90களில் இந்தியாவில் குறிப்பாக பெரு நகரங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாட்டத்துக்கு காரணம் மிகவும் குறைவு. பெரும்பாலும் சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவையே கொண்டாட்டத்துக்கு காரணமாக அமைந்தன'' என்று கூறினார்.
''இவ்வாறான சூழலில், பல திரையரங்குகளில் ரஜினியின் திரைப்படம் வெளியாகும் போது முதல் நாள், முதல் ஷோவில் நடக்கும் அமர்க்களம், ஆரவாரத்தை பார்க்கவே ஒரு கூட்டம் கூடும்'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
''ரஜினியின் பெயர் மற்றும் ரசிகர்கள் பலத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்தும் தனித்துவமான ஸ்டைல். இதுவே அவரை பலரும் ரசிக்க காரணமாக இருந்தது'' என்று சரா சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
அதேபோல் அவரது டயலாக் டெலிவரி பெரும் கவனத்தை பெற்றது. முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி பேசும் ’கெட்ட பையன் சார் இந்த காளி’ என்ற வசனத்தை வேறு யாரும் பேசியிருந்தால் இந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியாது என்று அவர் நினைவுகூர்ந்தார்.
எல்லைகளை எப்படி கடந்தார் ரஜினி?
இந்தியாவில் நிலவிய சூப்பர் ஹீரோ என்ற கதாப்பாத்திரத்தின் வறட்சியை நிரப்பியவர் ரஜினி.
சில திரைப்படங்களில் அவர் செய்யும் சாகசங்கள் அபத்தமானவையாக இருந்தாலும் ரஜினி என்ற பெயருக்காகவே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று கூறிய அவர், ''பல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மொழி என்ற தடையை மீறி பலரையும் சேர்ந்துள்ளது போல ரஜினியின் பல திரைப்படங்களும் மொழி மற்றும் புவியியல் என்ற தடையை, எல்லையை தகர்க்கிறது'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பல பாலிவுட் நட்சத்திரங்களின் ஆதர்ச நாயகனாகவும் ரஜினி இருக்கிறார் என்று கூறிய சரா சுப்ரமணியம், ''ஷாருக் கான் தனது திரைப்படத்தில் லுங்கி டான்ஸ் நடனத்தில் ரஜினியை கொண்டாடி பாடுகிறார் என்றால் அது வியாபார யுக்தி மட்டும் அல்ல. ரஜினியின் புகழும் காரணம். ஹீரோக்களின் ஹீரோவாக ரஜினி இருக்கிறார் என்று பொருள்'' என்று கூறினார்.
ரசிகர்களிடம் ரஜினிக்கான வரவேற்பு அப்படியே உள்ளதா?
மற்ற மாநிலங்களில் ரஜினியின் புகழ் பிம்பம் சற்றும் குறையவில்லை என்ற போதிலும், தமிழகத்தில் ரஜினி ரஜினியாகவே பார்க்கப்படுகிறாரா என்பது சந்தேகமே என்று கேள்வி எழுப்பினார் சரா சுப்ரமணியம்.
''அரசியல் நுழைவு அறிவிப்புக்கு பிறகு அவரை நேரடியாக மக்கள் பார்க்கும்போது , ரஜினியின் கருத்துக்களை, முரண்பாடுகளை அவர் ரசிகர்களே ஏற்றுக்கொள்கின்றனரா என்று தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் ரசிகர்களின் ரசனையும் மாறிக் கொண்டே இருக்கிறது. இயல்பான படங்கள் அல்லது சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்று ரசிகர்கள் பிரிந்து நிற்கும் நிலையில், இந்த இரண்டுக்கும் இடையே உள்ள திரைப்படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.
''உலக மற்றும் இந்திய அளவில் 2.O படத்துக்கு வரவேற்பு அதிகம் இருக்கலாம், ஆனால், தமிழகத்தில் அந்த அளவு இல்லை. தமிழகத்தில் இந்த படத்துக்கு பெரிய அளவில் முன்பதிவு இல்லை. சமூகவலைத்தளங்களிலும் இந்த திரைப்படம் குறித்த பேச்சு பெரிதாக இல்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், மிகப் பெரிய அளவில் சந்தையை கொண்டுள்ள பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக ரஜினியின் தமிழ் திரைப்படங்கள் வசூலில் போட்டி போடுவது வணிக ரீதியாக பெரிய விஷயம்தான் என்றார்.
’ரஜினி ஸ்டைல்’
ரஜினியின் அடுத்த திரைப்படமான பேட்ட திரைப்படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ''ரஜினியுடன் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றுவது எனது மிகப்பெரிய கனவு. நாட்டில் உள்ள எண்ணற்ற பலரை போல சிறு வயது முதலே நானும் ரஜினியின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன்'' என்று நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், ARUN SANKAR
''நாட்டில் தற்போதுள்ள மிகப் பெரிய நட்சத்திரங்களில் ரஜினியும் ஒருவர். பல ஆண்டுகளாக அவரின் வசீகரம் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. அவரின் தனித்துவமான ஸ்டைல், உடல்மொழி, பாவனை மற்றும் வசனங்களை உச்சரிக்கும் விதம் ஆகியவை மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இதுவே ரசிகர்களை அவரின்பால் கட்டுண்டு வைத்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
அண்டை மாநில ரசிகர்களையும் ஈர்த்த ரஜினி - எப்படி சாத்தியமானது?
தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் ரஜினிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். அவரின் நேரடி தமிழ் படங்களும், டப் செய்யப்பட்ட அவரின் திரைப்படங்களும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ரஜினி நடித்த கதாநாயகுடு மற்றும் குசேலன் ஆகிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அஸ்வினி தத் கூறுகையில், ''ரஜினி ஓர் அசாதாரண நடிகர். அவரின் நடிப்பும், உடல்மொழியும் தனித்துவமானது. இதுதான் சாதாரண மக்களிடையே ரஜினியின் புகழை கொண்டு சேர்த்தது'' என்று கூறினார்

பட மூலாதாரம், Getty Images
.
''திரைப்படம் என்றில்லை திரைப்பட தளத்திலும் அவரது வேகமான ஸ்டைல் அனைவரையும் வியக்க வைக்கும். இது தான் ரசிகர்களை தொடர்ந்து அவர்பால் வைத்திருக்கும் மந்திரம். அனைத்து வயதினரையும் ஈர்க்கும் ஒரே நடிகர் ரஜினிதான்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர்கள் - இது எப்படி?
தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ரஜினியின் திரைப்படத்துக்கு வரவேற்பு பல ஆண்டுகளாக இருந்து வந்த சூழலில், ஜப்பான், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அவரின் திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், வெளிநாட்டு ரசிகர்கள் ரஜினியை பெரிதும் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
''தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் ரஜினிக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பது உண்மைதான். மற்ற நாடுகளில் அவரின் படத்துக்கு கிடைக்கும் ஆதரவு, அந்நாடுகளில் வாழும் தமிழர்களால் கிடைத்திருக்கக்கூடும்'' என்று பிபிசி தமிழிடம் பேராசிரியரும், திரைப்பட விமர்சகருமான ராமசாமி தெரிவித்தார்.
ஜப்பானில் ரஜினியின் முத்து திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததாக செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டியபோது பதிலளித்த ராமசாமி, ''முத்து திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம், முன்பு தென் கிழக்கு நாடுகளில் வாழ்ந்த ஓர் அரசரை பிரதிபலிப்பதாக இருப்பதாக திரைப்படம் வருவதற்கு முன்பு அங்கு செய்திகள் வெளிவந்தன. இது அந்நாட்டு ரசிகர்களை ஈர்த்திருக்கலாம், அதே வேளையில் மற்ற ரஜினி படங்கள் ஜப்பானில் ரசிகர்களை ஈர்த்ததா என்று தெரியவில்லை'' என ஐயம் தெரிவித்தார்.
எப்படி உருவானது ரஜினி ஸ்டைல்?
''ரஜினியின் உடல்மொழி மற்றும் ஸ்டைல் ஆகியவை நன்கு திட்டமிடப்பட்டவை. நம் உடல் பாகங்கள் எவ்வாறு இயல்பாக திரும்பும், அசையும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு. அதனை லாவகமாக செய்து ரசிகர்களை தன்பால் ரஜினி ஈர்க்கிறார்'' என்று ராமசாமி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Dinodia Photos
''ரஜினியின் ஸ்டைல்தான் ரசிகர்களை ஈர்த்த முதல் அம்சம். தனித்துவம் வாய்ந்த அந்த ஸ்டைலை ரஜினி, தனது திரைப்படங்களில் மட்டுமல்ல அவரது அரசியல் அறிவிப்பு மற்றும் மேடை பேச்சுக்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். இது இயல்பாக நடந்திருக்காது. தெரிந்தே நடந்திருக்கும்'' என்று அவர் மேலும் கூறினார்.
இதேபோல் ரஜினியின் சில திரைப்பட வசனங்களும் அவரின் உடல்மொழிக்கு வேலை கொடுப்பது போலவே எழுதப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












