''தலைவனாக வழிநடத்த அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு உண்டு'' : இயக்குநர் மகேந்திரன்
அரசியலில் இறங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்த நிலையில், அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து இயக்குநர் மகேந்திரன் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

பட மூலாதாரம், Getty Images
"முள்ளும் மலரும்'', ''ஜானி'' உள்பட பல திரைப்படங்களில் ரஜினியை வைத்து இயக்கிய மகேந்திரன், ரஜினிகாந்த் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ரஜினியின் இன்றைய அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட மகேந்திரன், ''ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். பலரும் எதிர்பார்த்த அறிவிப்பே இது'' என்று கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக கூறிய ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது பற்றி கேட்டபோது பதிலளித்த மகேந்திரன், ''இது குறித்த விரிவான தகவல்களை அவர் இனி கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன். இன்றைய அறிவிப்பு தலைப்பு செய்திகள் போல்தான்'' என்று கூறினார்.
மற்ற தகவல்கள் இனிமேல் வெளியிடப்படும் என்று நம்புவதாக இயக்குநர் மகேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
''நான் மட்டுமல்ல, சோ ராமசாமி போன்றவர்கள்கூட, ரஜினியை பெயரை அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்மொழிந்தனர . ஒரு அரசியல் தலைவராக வர அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு உண்டு என்று கணித்தவர் சோ. அந்த கணிப்பு இன்று உண்மையாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
அரசியலில் சிறப்பாக செயல்படவும், தலைவனாக வழிநடத்தவும் அனைத்து தகுதிகளும் ரஜினிக்கு உண்டு என்று மகேந்திரன் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரஜினியின் கட்சியில் சேர வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, ''அனைவருமே ரஜினியின் கட்சிக்கு தங்களின் பங்களிப்பை தருவார்கள். அதே போல், நானும் எனது பங்களிப்பை தருவேன் '' என்று தெரிவித்தார்.
ரஜினியின் கட்சி பெயர் எப்போது அறிவிக்கப்படும்?
தனது அரசியல் பிரவேசத்தில் கட்சியின் பெயர் குறித்து ரஜினி அறிவிக்காதது குறித்து கூறுகையில், ''அரசியலுக்கு வருவேன் என்று இன்று உறுதியாக கூறிவிட்டார் ரஜினி. கட்சியின் பெயர், கொடி போன்றவற்றையம், கட்சியின் கொள்கைகள் பற்றியும் இன்றே கூறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு காலம் உள்ளது. இனிமேல் அது குறித்து தெரிவிப்பார்'' என்று கூறினார்.
ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினி, '' கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சம்பவங்கள் தமிழர்கள் எல்லோரையும் தலைகுனிய வைத்துவிட்டது. மற்ற மாநிலத்தினர் நம்மை இழிவாக பார்க்கிறார்கள்'' என்று கூறினார்.
இது குறித்து பேசிய மகேந்திரன், ''கடந்த ஓராண்டாக நடக்கும் விஷயங்கள் மிக மோசமாக இருந்ததால் அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். தமிழர்கள் அனைவர் மனதிலும் இருக்கும் அபிப்பிராயம் இது. மக்களின் கருத்தைத்தான் அவர் தெரிவித்துள்ளார்'' என்று மகேந்திரன் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- 'ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்'
- "நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்": நடிகர் ரஜினிகாந்த்
- பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி
- பிபிசி தமிழ் நேயர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கானுயிர் காட்சிகள்
- அரசியலில் ரஜினி: ட்விட்டரில் குவிந்த பிரபலங்களின் ஆதரவும் எதிர்ப்பும்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













