சினிமா விமர்சனம்: காற்றின் மொழி

சினிமா விமர்சனம்: காற்றின் மொழி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

வித்யா பாலன் நடிக்க சுரேஷ் த்ரிவேணி இயக்கத்தில் 2017ல் வெளிவந்த துமாரி சூலு இந்தித் திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக். வித்யா பாலன் நடித்த பாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜோதிகா.

கணவன் பாலு (விதார்த்), குழந்தை சித்தார்த் ஆகியோரே தன் உலகம் என நினைத்து வாழும் விஜயலட்சுமி (ஜோதிகா), தானும் பிற பெண்களைப் போல வேலைக்குச் செல்ல வேண்டுமென நினைக்கிறாள்.

ஒரு பண்பலை வானொலி நிலையத்தில், மது என்ற புனைப் பெயருடன் இரவு நேரத்தில் வயதுவந்தோருக்கான நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால், சில நாட்களிலேயே விஜயலட்சுமியின் இந்த வேலை கணவன் உள்பட குடும்பத்தினருக்கு பிடிக்காமல்போகிறது.

சினிமா விமர்சனம்: காற்றின் மொழி

பட மூலாதாரம், Twitter

இதனால் ஏற்படும் சிக்கல்களில் வேலையை விட்டுவிடுகிறாள் விஜயலட்சுமி. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, கணவன் புரிந்துகொள்ள மீண்டும் வேலைக்குச் செல்கிறாள் நாயகி.

துமாரி சூலு படத்தின் காட்சிக்கு காட்சி ரீ-மேக் இந்தப் படம். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்தவர்களும் இந்தப் படத்தை ரசிக்க முடியும்.

இலங்கை
இலங்கை

அதே கதையை சென்னையில் பொருத்தி, திரைக்கதைக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வுசெய்திருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். தவிர, தேவையில்லாத காட்சிகள் என்று படத்தில் எதுவுமே இல்லை.

படம் முழுக்க முழுக்க ஜோதிகாவின் தோள்களில் பயணிக்கிறது. படத்தின் துவக்க காட்சிகளை விட்டுவிட்டால், படம் நெடுக பிரகாசிக்கிறார் ஜோதிகா.

சினிமா விமர்சனம்: காற்றின் மொழி

பட மூலாதாரம், Twitter

திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்த படங்களிலேயே சிறந்த படமென்று இந்தப் படத்தை நிச்சயம் சொல்லலாம்.

ஆர்ப்பாட்டமில்லாத கணவன் பாத்திரத்தில் வரும் விதார்த் கொடுத்த பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்.

இலங்கை
இலங்கை

நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வரும் குமாரவேல், நிலைய இயக்குநராக வரும் லட்சுமி மஞ்சு ஆகியோரும் அசத்துகிறார்கள்.

சில காட்சிகளில் மட்டுமே வரும் எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, உமா, யோகிபாபு, மயில்சாமி ஆகியோரும் நினைவில் நிற்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: காற்றின் மொழி

இந்தப் படத்தின் பலவீனமான பகுதி என்பது படத்தின் துவக்க காட்சிகள்தான்.

கதாநாயகி தனியாக பேசிக்கொள்ளும் அந்தக் காட்சிகள் படத்தின் திரைக்கதைக்கும் ஜோதிகாவுக்கும் சிறப்பான காட்சிகள் என்று சொல்ல முடியாது.

அதேபோல, வானொலி நிலையத்தின் தலைவர், கதாநாயகியின் நிகழ்ச்சியில் எப்போதும் உடன் இருப்பதும் உறுத்துகிறது.

பாடல்களும் இந்தப் படத்தில் வசீகரிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: