சினிமா விமர்சனம்: இமைக்கா நொடிகள்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
டிமாண்டி காலனி படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யபும் நடித்திருப்பதால் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.

பட மூலாதாரம், twitter/imaikkaanodigal
பெங்களூரில் சைக்கோ கொலைகாரனான ருத்ரா (அனுராக் காஷ்யப்) பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைக் கடத்தி, 2 கோடி ரூபாய் பிணைத் தொகை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஆனால், பிணைத் தொகை கொடுத்த பிறகும் கடத்தப்பட்டவர்கள் கொடூரமாக கொலைசெய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் சிபிஐ அதிகாரி அஞ்சலி (நயன்தாரா). ஆனால், தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் அஞ்சலிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த சைக்கோ கொலைகாரன் ருத்ரா, அஞ்சலியின் தம்பி அர்ஜுன்தான் (அதர்வா) என்று காவல்துறை முடிவுசெய்து, அவனைத் துரத்த ஆரம்பிக்கிறது. ருத்ரா அஞ்சலியைக் குறிவைப்பது ஏன், அர்ஜுன் ஏன் இதில் சம்பந்தப்படுகிறான், அஞ்சலியின் கடந்த காலம் என்ன என்பது மீதக் கதை. இதற்கு நடுவில் அர்ஜுனின் காதல் கதையும் அஞ்சலியின் திருமண வாழ்க்கையும் தனி ட்ராக்.
ஸ்காண்டிநேவிய த்ரில்லர் நாவல்களில் வருவதுபோல முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்யும் கதை. படம் துவங்கும்போதே ஒரு பரபரப்பான கடத்தல். கடத்தப்பட்டவரின் உறவினர்கள் பணத்தைக் கொடுத்த பிறகும், கடத்தப்பட்டவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமே கிடைக்கிறது. இது தொடர்கதையாகவும் ஆகிறது. துவக்கத்தில் ஒரு சாதாரண, சைக்கோ கொலையாளி vs காவல்துறை என்பதுபோலத்தான் துவங்குகிறது படம். ஆனால், பிற்பாதிக்குப் பிறகு ஏகப்பட்ட திருப்பங்கள். ஒரு கட்டத்தில், 'அய்யோ.. ட்விஸ்ட்டெல்லாம் போதும்' என்று சொல்லுமளவுக்கு ட்விஸ்டுகள்.

பட மூலாதாரம், twitter/imaikkaanodigal
டிமாண்டி காலனி படத்தை சுமார் 2 மணி நேரத்திற்குள் முடித்த அஜய், இந்தப் படத்தை சுமார் மூன்று மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார்.
படம் துவங்கியவுடனேயே நடக்கும் கடத்தல் சம்பவமும் கொலையும் உடனடியாக படத்தோடு ஒன்றவைத்துவிடுகிறது. ஆனால், இடையில் ஸ்பீட் பிரேக்கரைப் போல அதர்வாவை அறிமுகப்படுத்தி, அவருக்கான காதல் கதையை மிக நீளமாக பாடல்களுடன் சொல்ல ஆரம்பிக்கும்போது, துவக்கத்தில் ஏற்பட்டிருந்த உணர்வே போய்விடுகிறது. பிறகு ஒரு வழியாக பிரதான கதைக்குள் படம் வந்த பிறகு, நீளமான நயன்தாரா- விஜய் சேதுபதி ஃப்ளாஷ்பேக் மறுபடியும் சோர்வை ஏற்படுத்துகிறது. இவை எல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாக மூன்று படங்களைப் பார்த்த அலுப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால், படத்தில் பல வலுவான அம்சங்கள் உண்டு. கொலைகாரனை வெறும் சைக்கோ கொலைகாரனாகக் காட்டாமல், அதற்கு ஒரு வலுவான பின்னணியை வைத்திருப்பது, உண்மையிலேயே அட்டகாசம். அதேபோல நயன்தாரா பழிவாங்குவதாகச் சொல்லப்படுவதும் அதற்கான பின்னணியும் நல்ல திருப்பம். ஃப்ளாஷ்பேக் காட்சிகள் குறைவாக இருந்து, பிரதான கதையிலேயே படம் சென்றிருந்தால் இன்னும் சுருக்கமாக, இன்னும் மேம்பட்ட அனுபவத்தைத் தந்திருக்கும்.
வில்லன் ருத்ரா ஒரு காட்சியில் பல மாடிக் கட்டடத்தின் உச்சியில் இருக்கிறார். அடுத்த வினாடி கீழே இருக்கிறார். மற்றொரு காட்சியில், பாதுகாப்புக் காரணங்களுக்காக கதாநாயகனின் ஃபோன் ஸ்கேனருக்குள் சென்று வெளியில் வருவதற்குள் மாற்றப்படுகிறது. கதாநாயகனுக்கே தெரியாமல் அவரது பாக்கெட்டில் ரிமோட் வைக்கப்படுகிறது. இதையெல்லாம் தனி ஆளாக சைக்கோ கொலைகாரன் செய்கிறான். இதுபோன்ற நம்பமுடியாத பல தருணங்கள் கதையில் உண்டு. ஆனால், த்ரில்லர் பட ரசிகர்கள் அதை மன்னித்துவிடக்கூடும்.
கடந்த வாரம்தான் நயன்தாரா நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வாரம் இந்தப் படம். கோலமாவு கோகிலா படத்திலிருந்த டெம்ப்ளேட் நடிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் அவர். சி.பி.ஐ. அதிகாரி, மனைவி, குழந்தையின் தாய் என வெவ்வேறு பாத்திரங்கள் ஒரே படத்தில். அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது அவரது நடிப்பு.

பட மூலாதாரம், twitter/imaikkaanodigal
வில்லனாக வரும் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார். கதாநாயகி, கதாநாயகனைவிட அதிக காட்சிகளில் வரும் பாத்திரம் இது. சமீப காலத்தில் வெளிவந்த படங்களில் இருந்ததிலேயே மிக சக்திவாய்ந்த வில்லன் பாத்திரம் இந்தப் படத்தில்தான். இருந்தபோதும் தமிழுக்குப் புதுமுகமான அனுராக் காஷ்யப் அதை அநாயாசமாகச் செய்திருக்கிறார்.
நயன்தாராவும் அனுராக் காஷ்யபும் பெரும் கவனத்தை ஈர்த்துக்கொள்வதால் கிடைத்த இடைவெளியில் ஜொலிக்க வேண்டிய கட்டாயம் அதர்வாவுக்கு. அதைச் செய்திருக்கிறார். தெலுங்கிலிருந்து அறிமுகமாகியிருக்கும் ராஷி கண்ணா ஒரு இனிமையான புதுவரவு.
ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் விஜய் சேதுபதி, 'ஓக்கே பேபி' என்றபடி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா நல்ல பாடல்களுக்குப் பெயர்போனவர். ஆனால், இந்தப் படத்திற்கு பாடல்கள் அனாவசியம் என்பதால், பாடல் காட்சிகள் வெறுப்பேற்றுகின்றன. டிமாண்டி காலனி படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பின்னணி இசையில் சத்தம் அதிகம்.
முதல் படத்தில் கவனத்தைக் கவர்ந்த அஜய் ஞானமுத்து, இரண்டாவது படத்திலும் அந்த கவனத்தைத் தக்கவைக்கிறார். ஆனால், நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் காணொளி விமர்சனத்தை காண :
பிற செய்திகள்:
- “தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை நரேந்திர மோதி விரும்பவில்லை”
- பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் முயற்சி
- இலங்கை: 13 ஆண்டுகளாக காணாமல் போன மகனை தேடிக் கொண்டிருக்கும் தாய்
- ரோஹிஞ்சா பிரச்சனை: 'ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும்'
- பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் பெற்ற பலன் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













