பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் முயற்சி

பூகம்பத்தை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்களை இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

"பிரதான பூகம்பத்தை" தொடர்ந்து நடைபெறும் பிந்தைய நடுக்கங்கள் வரையறையின்படி சிறியதாக கருதப்பட்டாலும், அவை சில சமயங்களில் பெரியளவிலான பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

இந்நிலையில், முதல் முறையாக இயந்திர கற்றல் (Machine Learning) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பூகம்பத்தின் பிந்தைய நடுக்கம் எங்கு நடைபெறும் என்பதை கணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இயந்திர கற்றலையும், அதை ஒத்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலம் பூகம்பம் குறித்த சிக்கலான விடயங்களை அறிந்துகொள்ள இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"நீங்கள் பூகம்பம் பற்றிய முன்னறிவிப்பு குறித்து யோசித்து பார்த்தால் - பூகம்பம் எப்போது நடக்கும், எந்தளவிற்கு இருக்கும், எந்த இடத்தை தாக்கும் போன்ற விடயங்கள் மனதில் எழலாம்" என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான பிரெடன் மேட் கூறுகிறார்.

"நாங்கள் பிரதான பூகம்பத்தை தொடர்ந்த பிந்தைய நடுக்கங்கள் எங்கு நடைபெறும் என்பதை கண்டறிவதற்கு முயற்சி செய்கிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூகம்பங்கள் மற்றும் பிந்தைய நடுக்கங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் திரட்டப்பட்டுள்ள தரவுகளை/ பதிவுகளை முதலாக கொண்டு ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாத மற்ற பூகம்பங்களுடன் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு பார்த்தனர்.

கண்டத்தட்டு நகர்வினால் பூகம்பம் ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Science Photo Library

படக்குறிப்பு, கண்டத்தட்டு நகர்வினால் பூகம்பம் ஏற்படுகிறது.

நரம்பியல் வலையமைப்புகள் (Neural Network) என்றழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் மனித மூளையின் செயல்பாட்டை ஒத்தது. அதாவது, தற்போது பிந்தைய நடுக்கங்களை கண்டறிவதற்கு பிரதான பூகம்பங்கள் சார்ந்த கணக்கீடுகளின் தொகுப்புகளை பயன்படுத்துவதை காட்டிலும், இந்த புதிய தொழில்நுட்பத்தின் கணக்கீட்டு திறனை பயன்படுத்தி பல வழிகளிலும் பிந்தைய நடுக்கங்கள் பற்றிய ஊகங்களை மேற்கொள்ள முடியும்.

"நரம்பியல் வலையமைப்பு தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது" என்று இதன் முதன்மை ஆராய்ச்சியாளரும் கனெக்டிகட் பல்கலைக்கழக பேராசிரியருமான போயபே தேவ்ரிஸ் கூறினார்

அமெரிக்க புவியியல் மையத்தை சார்ந்த ஆராய்ச்சியாளரான எலிசபெத் கோச்ரன், "இந்த ஆராய்ச்சியின் அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது" என்று கூறுகிறார்.

"இந்த ஆராய்ச்சி பிந்தைய நிலநடுக்கங்கள் குறித்த பார்வையை தெளிவாக அளித்தாலும், பல்லாயிரக்கணக்காக தரவுகளை பயன்படுத்தி இதை கணிப்பது ஆச்சர்யத்தை அளிக்கவில்லை" என்று கூறுகிறார்.

இது எப்படி நமக்கு உதவும்?

"இது பயனளிக்கக்கூடிய நிலையை அடைவதற்கு வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் இதை ஊக்கமளிக்கும் முதல் படியாகதான் பார்க்கிறோம்" என்று தேவ்ரிஸ் கூறுகிறார்.

நிலநடுக்க பதிவு கருவி

பட மூலாதாரம், ELIZABETH COCHRAN

படக்குறிப்பு, நிலநடுக்க பதிவு கருவி

அமெரிக்கா மற்றும் மற்ற சில நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ள பூகம்பத்தை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் திட்டங்களுடன் சேர்த்து பயன்படுத்துக்கூடிய அணுகுமுறையை இதில் பின்பற்ற இயலாது. ஆனால், நரம்பியல் வலையமைப்பு மூலம் பூகம்பங்கள் மற்றும் பிந்தைய நடுக்கங்கள் குறித்த தரவுகளை கொண்டு புதிய வழிகளில் பதில்களை கண்டறியலாம்.

எங்கிருந்து இந்த தரவுகள் பெறப்படுகிறது?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் சீஸ்மோமீட்டர்ஸ் எனப்படும் பூகம்ப பதிவு கருவிகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. அவை நம்மால் உணரமுடியாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவில் நடைபெறும் பூகம்பத்தைகூட பதிவு செய்யக்கூடியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :