“இன்று நிலவும் அச்ச உணர்வு, நெருக்கடி கால கட்டத்தில் கூட இருந்ததில்லை”: ரொமிலா
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களையும் வரும் வியாழக்கிழமை வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஷ் தேஷ்பாண்டே, மாயா தாருவாலா ஆகியோர் சார்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்கள் இல்லாத போதிலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷண், அபிஷேக் சிங்வி, இந்திரா ஜெய்சிங், ராஜு ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அந்த மனுவை புதன்கிழமை விசாரித்தது. இடைக்கால நடவடிக்கையாக, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஐந்து பேரையும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை அவர்களது சொந்த வீட்டில் காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க மகாராஷ்டிர அரசு முயல்வதாகவும், ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்பதை தடுத்து, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்வதாவும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.
இது தொடர்பாக வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பரிடம் பிபிசி நிருபர் வினித் கரே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேட்டியெடுத்தார்.
வினித் கரே: உங்களுடன் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் இந்த பொதுநலன் மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள். இதற்கான அடிப்படை நோக்கம் என்ன?
ரொமிலா: “மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புனேவிற்கு அழைத்துச் செல்லப்பட இருந்தார்கள். கைது செய்யப்படும் வழிமுறை தவறு என்பதுதான் நாங்கள் மனு தாக்கல் செய்ததன் முக்கிய நோக்கம். அவர்கள் அனைவராலும் அறியப்பட்டவர்கள். மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள்.பிற குற்றவாளிகளைப் போன்றவர்கள் அல்ல இவர்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? அவர்களுக்கு எதிராக எதை நிரூபிக்க விரும்புகிறீர்கள்? நடைமுறை செயல்பாடுகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வதற்காக போடப்பட்ட மனு அது.
எங்கள் மனு இன்று (புதன்க்கிழமை) விசாரிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு அவர்கள் தங்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்கள் சிறைக்கு அனுப்பட வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த வாரத்தில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவிருக்கிறது.”

கே: அவர்களை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியுமா?
”ஆம், அவர்களில் சிலரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.”
கே: அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் சரியில்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது போலீசார் வழக்கை விசாரித்த விதம் சரியில்லை என்று கருதுகிறீர்களா?
ரொமிலா: "இரண்டுமே... போலீசார் ஒருவரை கைது செய்ய வரும்போது, குற்றச்சாட்டு தொடர்பான விரிவான தகவல்களை வைத்திருக்க வேண்டும். கைது செய்யும்போது, அவர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்ற விவரங்களை தெளிவாக சொல்ல வேண்டும்."
கே: இன்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையை பற்றி உங்களுக்கு தெரியுமா? மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசாரும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போதுள்ள அரசியல் நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கு விரைவில் முடிவது போல் தெரியவில்லையே?
ரொமிலா:"இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி இப்போது புரியவைப்பது என்று தெரியவில்லை... சரி, வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிலர் அந்த இடத்திலேயே இல்லை. அவர்களில் யாருமே துப்பாக்கிகளையோ, ஆயுதங்களையோ கையில் எடுப்பவர்களோ, அவற்றை பயன்படுத்துபவர்களோ கிடையாது.
இந்த நிலையில் வன்முறை என்பது எங்கிருந்து வந்தது? அவர்கள் தங்கள் கருத்துகளை எழுதுவார்கள், பேசுபவார்கள், இதில் வன்முறை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது எப்படி சுமத்தப்பட்டது என்றே தெரியவில்லை."

பட மூலாதாரம், AFP
கே: இந்த விவகாரத்தில் என்னுடைய புரிதலின்படி, தீவிர இடதுசாரி மனோபாவத்தை (கருத்துக்களை) கொண்டிருந்த அவர்களது செயல்கள் ஒருவிதத்தில் வன்முறையை தூண்டிவிடுவதாய் இருப்பதாக போலீசார் கருதியிருக்கலாம்.
ரொமிலா: "தீவிர இடதுசாரி மனோபாவம் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் அனைவரும் செயற்பாட்டாளர்கள். உதாரணமாக சுதா, ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் வாதாடுபவர். அவர் அரசியல் நிலைமைகளைப் பற்றி சிறந்த கட்டுரைகளை எழுதுபவர். பொருளாதாரம், நவீன பொருளாதார அரசியல் பற்றி நன்றாக எழுதுவார். தீவிர இடதுசாரி பிரிவு என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? தீவிர இடதுசாரி என்றால் என்ன என்பதை சரியாக விளக்கவேண்டும். வெறும் வெற்று அறிக்கைகளை விடக்கூடாது."
கே: இந்த செயற்பாட்டாளர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் நினைத்திருப்பார்களோ?
ரொமிலா: "அப்படி இருந்தால் அதற்கான எதாவது ஆதாரத்தை போலீசார் கொடுக்க வேண்டுமல்லவா?"


கே: தேவையான ஆதரங்கள் இருப்பதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வழங்குவதாகவும் போலீசார் கூறியிருக்கிறார்களே?
ரொமிலா: "கொடுக்கட்டும், அவற்றை பொதுவெளியில் முன்வைக்கட்டும். இதில் ரகசியம் காக்கவேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் என்ன?
டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாண்டுகளுக்கு முன்பு கைது செய்தபோது, அவரது நூலகத்தில், மாவோயிஸ்ட் புத்தகங்கள் கிடைத்ததாக கூறுவது போன்ற எதையாவது கூறினால் அது நகைப்புக்கு உரியவையாகவே இருக்கும். தொடர்புகள் என்று போலீசார் சொல்ல விரும்புவது எதை?"

கே: அவர்களுடைய இடதுசாரி சார்புக் கொள்கைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட்கள், நக்ஸல்களுடன் செயற்பாட்டாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ரொமிலா: "அதைப்பற்றி நான் அழுத்தமான எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. இது எளிதான விஷயமில்லை. இது சிக்கல் நிறைந்த விஷயம். அவர்களுக்கு பலருடன் தொடர்பு இருக்கலாம். ஆனால் அவர்களுடன் தொடர்புடைய ஏ. பி, சி என சிலருக்கு எக்ஸ், ஒய், ஜெட் என பிறருடன் தொடர்பு இருக்கிறது என்பதையோ, போலீஸ் எப்படி நிரூபிக்கும்? இதை மற்றவர்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது வேறொரு விஷயம். புனேயில் நடைபெற்ற விஷயங்களைப் பற்றியும், செயற்பாட்டாளர்களின் கருத்துகளைப் பற்றியும் ஒரே மூச்சில் சொல்லிவிடமுடியாது. அதற்கு விரிவாக சுமார் ஒன்றரை மணி நேரமாவது பேசவேண்டும்."
கே: இன்று மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு வெளியே சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றதாக கேள்விப்படுகிறோம். அதில் கலந்துக் கொண்ட செயற்பாட்டாளர்களும், மக்களும் புதிய இந்தியா எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி மிகவும் கவலைப்படுவதாக தெரிகிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?
ரொமிலா: "அவர்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதில்லை."
கே: கடந்த நான்காண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?
ரொமிலா: "மாற்றம் என்று சொன்னால், மக்களிடையே பயம், தீவிரவாதம், மக்களை குழுக்களாக பிரிப்பது, அதாவது சிறுபான்மையினர், கீழ் சாதியினர், முஸ்லிம்கள் என பிரிப்பது...
ஒருவரின் மீது வழக்கு போடப்பட்டால், அதற்கான காரணம் தெரியவேண்டும். அதற்காக ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென போலீசார் வந்து உன்னை கைது செய்கிறோம், புணே சிறைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லிவிடமுடியாது. சட்டம் இதுவரை இப்படி செயல்பட்டதில்லை. தற்போது நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது."
கே: இந்த நிலைமை மேலும் மோசமடையும் என்று நினைக்கிறீர்களா?
ரொமிலா: "ஆகலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே தெரிகிறது. ஒருமுறை இப்படி செய்துவிட்டால், மீண்டும் தொடர்ந்து இதுபோன்ற அழுத்தங்களை மக்கள் மீது ஏற்படுத்த முயல்வார்கள்."
கே: தற்போதைய நிலைமையை எமர்ஜென்சி நிலைமையுடன் ஒப்பிட முடியுமா? அதைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ரொமிலா தாபர்: "முதன்முதலில் நமது நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, மக்களுக்கு பெரிய அளவில் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படவில்லை."

பட மூலாதாரம், Getty Images
கே: உங்களைப் போன்றவர்கள் தற்போதைய நிலையை நெருக்கடி காலத்துடன் ஒப்பிடுகிறீர்களா?
ரொமிலா: "கண்டிப்பாக, ஆனால், இன்று நிலவும் அச்ச உணர்வு, நெருக்கடி கால கட்டத்தில் இருந்ததில்லை. அன்று நிலவிய சூழ்நிலை வேறு."
கே: இந்த நிலை நான்கு ஆண்டுகளாக தொடர்கிறதா?
ரொமிலா: "ஆமாம், இது நான்கு ஆண்டுகளாக தொடர்கிறது. இது எத்தனை ஆண்டுகள் தொடரும் என்று தெரியவில்லை. ஆனால், 2019க்கு பிறகு ஐந்து ஆண்டுகள் நீடித்தால், என்ன ஆகும் என்று தெரியவில்லை."


கே: இதுபோன்ற பொதுநலன் மனுவை நீங்கள் இப்போதுதான் முதன்முதலில் போட்டிருக்கிறீர்களா? இதற்கு பின்னணியில் எதாவது காரணம் இருக்கிறதா?
ரொமிலா: "இதுபோன்ற நிலையில் நாங்கள் வேறு என்னதான் செய்ய முடியும்? இதற்கு முன்பு இதுபோன்ற மனுக்களை, அதிலும் குறிப்பாக முக்கியமான மனுக்களை தாக்கல் செய்திருக்கிறேனா என்பது பற்றி உண்மையிலுமே எனக்கு நினைவில்லை."
கே: உங்களுடன் இணைந்து இந்த பொதுநலன் மனுவை தாக்கல் செய்தவர்களை பற்றி சொல்லமுடியுமா?
ரொமிலா: "அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"
கே: உங்களுக்கு அவர்களைத் தெரியாதா?
ரொமிலா: "இல்லை, எனக்கு அவர்களைத் தெரியும்."
கே: அவர்களை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியுமா?
ரொமிலா: ஆம், அவர்களில் சிலரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.
கே: உங்கள் தரப்பில் பிரசாந்த் பூஷன் போன்ற வழக்கறிஞரக்ள் ஆஜாரானார்களே...
ரொமிலா: "நான் மட்டுமல்ல, மனு தாக்கல் செய்த எங்கள் அனைவரின் சார்பில் அவர்கள் ஆஜரானார்கள்."
கே: உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முதலில் மனு தாக்கல் செய்தீர்கள்.அடுத்து?
ரொமிலா:"நீதிமன்றம் கூறுவதைப் பொறுத்துதான் முடிவு செய்யமுடியும். நாங்கள் படிப்படியாகத் தான் நடவடிக்கைகளை எடுக்க முடியும்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












