முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் அணை, அச்சத்தில் மக்கள்
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: 'கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம்'

பட மூலாதாரம், facebook
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அணை முற்றிலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கடந்த 22-ந் தேதி இரவு 9 மதகுகள் திடீரென உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளனவா? என ஆய்வு செய்ய ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ஹைடெக் சிவில் என்ஜினீயர்கள் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
அவர்களுடன் இணைந்து நீச்சல் பயிற்சியாளர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி ஒவ்வொரு மதகுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் முக்கொம்பு கொள்ளிடம் அணை முற்றிலும் இடிந்து விழுமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பகல் கொள்ளிடம் அணையில் மேற்கொண்டு வரும் பணிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் ராஜாமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்ட மாட்டோம்'
மத்திய அரசு கூறும் எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டமாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். எதை எதிர்க்க வேண்டுமோ, அதை எதிர்த்தோம் என்றும் அவர் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"மத்திய அரசு சொல்வதை மட்டும்தான் செய்கிறீர்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதே எனக் கேட்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; அப்படித்தான் பேசுவார்கள். பாராட்டியா பேசப் போகிறார்கள்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றியதைத்தான் அவருடைய அரசும் பின்பற்றுகிறது. எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்த்தோம். எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டுவது கிடையாது" என்று செய்தியாளர்களை சிதம்பரத்தில் சந்தித்த பழனிசாமி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.



பட மூலாதாரம், இந்து தமிழ்

இந்து தமிழ்: 'பொருளாதார வீழ்ச்சியால் வியாபாரம் 40% குறைவு'
ஜிஎஸ்டியால் வியாபாரிகள் மட்டுமின்றி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் 40 சதவீத வியாபாரம் குறைந்துவிட்டது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் நாளிதழ்.
"வரி குறைவாக இருந்தால், வரி ஏய்ப்பு இருக்காது. 589 பொருட்களுக்கு வரியே இல்லாமல் இருந்த நிலையில், 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. சாம்பிராணிக்கு வரி கிடையாது, வாசனை சாம்பிராணிக்கு வரி உண்டு. அரிசிக்கு வரி இல்லை, பிராண்ட் அரிசிக்கு வரி உண்டு. பிராண்டு இல்லாத பொருட்களை மக்கள் தற்போது வாங்குவதில்லை. இதனால் குழப்பமே மிஞ்சுகிறது" என்று அவர் கூறி உள்ளதாக அந்நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பெண் தற்கொலை: மிரட்டியதா போலீஸ்?'
திருவேற்காடு காவல் நிலையம் எதிரே தனக்கு தானே தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இரண்டு காவல் அதிகாரிகள் பணி இடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
ரேணுகாவுக்கு எதிராக அவரது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் ரேணுகாவை விசாரித்த போலீஸ், அவரை மோசமான வார்த்தைகளில் திட்டியதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேணுகாவின் சகோதரி சாந்தா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













