வீட்டுக் காவல், ஹேபியஸ் கார்பஸ் - தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

பட மூலாதாரம், Micha Chodyra
மகாராஷ்டிராவின் பீமா கொரேகானில் இந்த ஆண்டு (2018) தொடக்கத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஐந்து முக்கிய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த ஐந்து செயற்பாட்டாளர்களையும் செப்டம்பர் 6-ஆம் தேதிவரை வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ் ஆகிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அருண் பெரேர மற்றும் வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக புனே நகர போலீசார் பின்னர் உறுதி செய்தனர்.
2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற மிக பெரியதொரு பேரணியில் இந்த செயற்பாட்டளர்கள் தலித்துகளை தூண்டிவிட்டதால் நடைபெற்ற வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடந்த இந்த சோதனைகள் மற்றும் கைதுகள் தொடர்பான ஊடக செய்திகளில் வீட்டுக் காவல், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA), கைது செய்யப்பட்டவர்களை ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு மாற்றும்போது வழங்கப்படும் காவல் (Transit Remand) போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சட்ட ரீதியாக இந்த வார்த்தைகள் பற்றி இந்த தொகுப்பு விளக்குகிறது.
வீட்டுக் காவல் (ஹவுஸ் அரெஸ்ட்)
இந்திய சட்டத்துறை அமைப்பில் வீட்டுக்காவல் என்று சட்ட ரீதியான வார்த்தை எதுவும் இல்லை. கைது செய்யப்பட்டவர் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ அழைத்துச் செல்லப்படாமல் அவர்களது சொந்த வீட்டில் காவலில் வைக்கப்படுவதே வீட்டுக் காவல் ஆகும்.

பட மூலாதாரம், D-Keine
கைது செய்யப்பட்டவர் வேறு யாருடனாவது உரையாடலாமா அல்லது கூடாதா என்பது வீட்டுக் காவல் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளில் உள்ளடங்கும்.
தேடுதல் ஆணை (Search Warrant)
ஒரு கட்டடம் அல்லது வாகனம் அல்லது தனி நபர் ஒருவரை சோதனை செய்ய போலீஸ் அல்லது வேறு விசாரணை முகமை பயன்படுத்தும் சட்ட ரீதியான அதிகாரம்தான் தேடுதல் ஆணை எனப்படும் சர்ச் வாரண்ட் ஆகும்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியை அணுகி போலீசாரால் சர்ச் வாரண்ட் செய்ய அதிகாரத்தை பெற முடியும்.
இந்த அதிகாரத்தின் மூலம், குற்றம் நடந்ததற்கு வேண்டிய ஆதாரங்களை திரட்ட ஒரு தனிநபர், வளாகம் அல்லது வாகனத்தில் போலீசாரால் தேடுதல் சோதனை நடத்த இயலும்.

1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறை விதிகள் 91, 92 மற்றும் 93 படி, விசாரணை முகமை தங்களுக்குள்ள சந்தேகங்களை குறிப்பிட்டோ அல்லது ஆதாரங்களை தெரிவித்தோ சர்ச் வாரண்ட்டை பெற விண்ணப்பிக்க முடியும்.
தனது நீதிமன்ற எல்லைக்கு அப்பால் தேடுதல் சோதனையை போலீசார் நடத்த வேண்டுமானால், அவர்கள் உள்ளூர் போலீசாரையும் தங்கள் சோதனையின்போது உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
பெண்கள் மட்டுமே ஒரு கட்டடத்தில் சோதனை நடத்த வேண்டுமானால், சூரிய மறைவுக்கு பிறகும், சூரிய உதயத்துக்கு முன்பும் அவர்களால் சோதனை நடத்த முடியாது.
கைது பற்றாணை (அரெஸ்ட் வாரண்ட்)
அரசின் சார்பாக ஒரு தனிநபரை கைது செய்ய அல்லது காவலில் வைக்க நீதிபதியால் (நிர்வாக அல்லது நீதித்துறை) வழங்கப்படும் உத்தரவு ஆணைதான் கைது வாரண்ட் ஆகும்.
குற்றம் விளைவிக்கும் பொருள் அல்லது இடம் என்று கருதப்பட்டால் அதனை சோதனை செய்யவோ அல்லது கைப்பற்றவோ கைது வாரண்டுக்கு அதிகாரமுள்ளது.
தனது நீதிமன்ற எல்லைக்கு அப்பால் போலீசார் கைது வாரண்ட் செய்ய வேண்டுமானால், அவர்கள் உள்ளூர் போலீசாரையும் தங்கள் நடவடிக்கையின்போது உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
சட்டப்பிரிவு 41ன்படி கைது செய்யப்பட்டவருக்கு, அவர் ஜாமீன் பெற உள்ள உரிமைகள் குறித்து போலீசார் தெரிவிக்க வேண்டும்.
விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞரின் உதவி கிடைக்க தேவையான உதவியை சட்டப்பிரிவு 41டி பெற்றுத்தருகிறது.
கைது செய்யப்பட்டவர்களை வேறிடத்துக்கு மாற்றும்போது வழங்கப்படும் காவல் ஆணை(Transit Remand)
கைது செய்யப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 24 மணிநேரத்துக்குள் அழைத்துச் செல்ல போலீசாரால் முடியவில்லையென்றால், கைது செய்யப்பட்டவர்களை ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு மாற்றும் டிரான்ஸிட் ரிமாண்ட் ஆணையை பெற வேண்டும்.

பட மூலாதாரம், utah778
சிஆர்பிசி சட்டப்பிரிவு 76ன் கீழ் கைது செய்யப்பட்ட நபர் 24 மணி நேரத்துக்குள் உள்ளூர் நீதிமன்றத்தில் போலீசாரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஹேபியஸ் கார்பஸ்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226ன்படி உள்ள ஒரு சட்ட மனுதான் ஹேபியஸ் கார்பஸ்.
சட்டவிரோத தடுப்புக்காவல், கைது அல்லது ஆள்கடத்தல் குறித்த சந்தேகம் குறித்து அரசியலமைப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தின் மூலம் தெரியப்படுத்துவது இதில் ஓர் அம்சமாகும்.
நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான சேர்க்கை மற்றும் விசாரணை அதே நாளில் நடைபெறும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












