சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2

விஸ்வரூபம் - 2
படக்குறிப்பு, விஸ்வரூபம் - 2
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2013ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முந்தைய படத்தில் வரும் சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்கிறது இந்தப் பாகம்.

முதல் பாகத்தில் விஷ் என்ற மாறுவேடத்தில் அமெரிக்காவில் வசிக்கும் விஸாம் அகமது கஷ்மீரி, நியூயார்க் நகரில் நிகழவிருந்த வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்கிறார். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட ஒமர் தப்பிவிடுகிறார். இந்த இரண்டாம் பாகம் அதிலிருந்து துவங்குகிறது.

இந்தப் பாகத்தின் கதைச் சுருக்கத்தை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வாசிம் (கமல்ஹாசன்), லண்டனிலும் இந்தியாவிலும் நடக்கவிருக்கும் இரண்டு மாபெரும் குண்டுவெடிப்புகளைத் தடுத்து நிறுத்துகிறார். முடிவில் வில்லனான ஒமர் (ராகுல் போஸ்) கொல்லப்படுகிறார்.

இந்த மோதல்களில், சக 'ரா' ஏஜென்ட்டான அஸ்மிதாவும் (ஆண்ட்ரியா) கொல்லப்படுகிறார். வாசிமை தவறாப் புரிந்துகொண்டிருக்கும் நிரூபமா (பூஜா குமார்), அவரை நேசிக்க ஆரம்பிக்கிறார்.

இந்தக் கதை தவிர, முந்தைய பாகத்தின் சில சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமான வேறு சில காட்சிகளும் படத்தில் உண்டு.

விஸ்வரூபம் - 2
படக்குறிப்பு, விஸ்வரூபம் - 2

முதல் பாகத்தில் ஒமர் தப்பிவிட, அவரை நாயகன் எப்படி துரத்திப் பிடிக்கிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கி படம் செல்வதில்லை.

அதனாலேயே, படம் முழுவதும் பிரதான கதை எப்போது ஆரம்பிக்கும் - எப்போது முடியும் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக சுமார் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது படம்.

படத்தின் முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்போ, தெளிவான கதையோட்டமோ இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை. துண்டு துண்டாக, தெளிவற்ற தொடர்ச்சியோடு கடந்து போகின்றன காட்சிகள்.

சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2
சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2

முதல் படத்தில் மிகப் பெரிய ஆக்ஷன் காட்சியாக அமைந்து அசரவைத்த ஆஃப்கானிஸ்தான் தாக்குதல் காட்சிகள், இந்தப் படத்தில் பல இடங்களில் திரும்பத் திரும்ப வருகின்றன.

முதல் பாதியில் அமெரிக்காவிலிருந்து லண்டன் வரும் வாசிம், இங்கிலாந்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பைத் தடுக்கிறார். ஆனால், அது தொடர்பான காட்சிகள் எல்லாமே நீளமாக, போரடிக்கும் வகையில் இருக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு, இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்பைத் தடுக்கிறார். இதிலும் அதே பிரச்சனை. இடைவேளைக்கு முன்பு ஒரு க்ளைமாக்ஸ், இடைவேளைக்குப் பின்பாக ஒரு க்ளைமாக்ஸ் என அமைந்திருந்தாலும் எதிர்பார்ப்பையோ, த்ரில்லையோ இந்தக் காட்சிகள் ஏற்படுத்தவில்லை.

விஸ்வரூபம் - 2
படக்குறிப்பு, விஸ்வரூபம் - 2

ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன, ஏவுகணைகளை வீசுகிறார்கள், கத்தியாலோ, துப்பாக்கியாலோ யாராவது யாரையாவது கொலை செய்கிறார்கள், கை - கால்களை ஒடிக்கிறார்கள், சக பெண் அதிகாரி நாயகனுடன் தொடர்ந்து சரசமாடிக்கொண்டேயிருக்கிறார்,

எதிர்பாரா இடங்களில் இருந்து துரோகிகள் முளைக்கிறார்கள் என முதல் பாகத்தில் இருந்த எல்லாமும் இந்த பாகத்திலும் இருக்கின்றன. ஆனால், தாங்கவே முடியாத விதத்தில்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

உளவாளிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் படம் எத்தனை இடங்களில் நம்மை சீட் நுனிக்கு தள்ளியிருக்க வேண்டும்?

துரதிர்ஷ்டவசமாக ஒரு காட்சிகூட அப்படி அமையவில்லை. ஒற்றைக் கண்ணோடும், பேசமுடியாமலும் வரும் வில்லனான ஒமர், பல இடங்களில் அச்சத்திற்குப் பதிலாக சிரிப்பையே ஏற்படுத்துகிறார்.

முதல் பாகத்தில் பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கமல், இந்த பாகத்தில் 'நம்பி படம் பார்க்க வந்தவர்களை இப்படிச் செய்யலாமா?' என்று கேட்க வைக்கிறார்.

ஒட்டுமொத்தப் படத்திலும் ஆனந்த் மகாதேவனுடனான ஓர் உரையாடல் காட்சிகளில் மட்டுமே பழைய கமலைப் பார்க்க முடிகிறது.

விஸ்வரூபம் - 2
படக்குறிப்பு, விஸ்வரூபம் - 2

நிரூபமாவாக வரும் பூஜாவுக்கு ஆண்ட்ரியா - கமல் உறவைப் பார்த்துப் பொறாமைப்படுவதே முக்கியப் பணி. ஒரே ஒரு காட்சியில் கடலடியில் மூழ்கி வெடிகுண்டை செயலிலக்கச் செய்கிறார். ரா ஏஜென்ட் அஸ்மிதாவாக வரும் ஆண்ட்ரியா, ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறார்.

1972ல் எம்.ஜி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அ.தி.மு.க. என்ற கட்சியை துவங்கி சில மாதங்களில் அவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

வெளியானபோது பெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தொடர்ச்சியற்ற, சம்பந்தமில்லாத திரைக்கதையையும் காட்சிகளையும் கொண்டிருந்தது.

கமல்ஹாசனும் புதிய கட்சியைத் துவங்கியிருக்கும் நிலையில், தனக்கான உலகம் சுற்றும் வாலிபனாக இந்தப் படத்தைக் கருதியிருக்கக்கூடும். அதற்கேற்றபடியே படத்தின் துவக்கத்தில் மக்கள் நீதி மய்ய பிரசாரக் காட்சிகளையும் இணைத்திருக்கிறார்.

ஆனால், விஸ்வரூபம் - 2 ரசிகர்களை குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளியிருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :