ஜானகி ராமச்சந்திரன், காமராஜர் இறுதிச் சடங்குகளின்போது நடந்தது என்ன?

ஜானகி ராமச்சந்திரன், காமராஜர் இறுதிச் சடங்குகளின்போது நடந்தது என்ன?
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜானகி ராமச்சந்திரன் நினைவிடத்தை மெரினா கடற்கரையில் அமைப்பதற்கு அனுமதிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார் என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்ட நிலையில், தாங்கள் அப்படி கேட்கவில்லையென குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். காமராஜர் நினைவிடம் தொடர்பாகவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் தி.மு.க. சார்பில் கோரிக்கைவிடுத்தபோது தமிழக அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காமராஜர், பக்தவத்சலம் நினைவிடங்களுக்கு அருகில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கித்தருவதாகக் கூறியது.

இதனை எதிர்த்து தி.மு.கவின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், முன்னாள் முதலமைச்சருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க முடியாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுத்ததாகத் தெரிவித்தார். அதேபோல முன்னாள் முதலமைச்சர் ஜானகியின் உடலை அடக்கம் செய்யவும் கடற்கரையில் இடம்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

விசாரணையின் முடிவில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசின் அனுமதி மறுப்பு, நீதிமன்ற விவாதங்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கும் உள்ளாயின.

காமராஜர் நினைவகம்

இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக பல ஆண்டுகளும் 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை முதல்வராகவும் இருந்த காமராஜர் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காலமானார்.

அந்தத் தருணத்தில் தமிழக முதல்வராக மு. கருணாநிதி பதவிவகித்தார். காமராஜரின் இறுதிச் சடங்குகள் நடப்பதற்கான இடம் எப்படி தேர்வுசெய்யப்பட்டது என்பதை தனது பார்வையில் மு. கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பதிவுசெய்திருக்கிறார்.

காமராஜர் நினைவகம்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, காமராஜர் நினைவகம்

"தமிழகத்திலே உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காமராஜரின் உடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்து அங்கேயே அடக்கம் செய்ய முடிவுஎடுத்தனர். அந்தச் செய்தி என் காதிலே விழுந்ததும் நான் அந்தக் கருத்தை மறுத்து தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அரசு மரியாதையுடன்தான் அடக்கம் செய்ய வேண்டுமென்றும் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி மண்டபத்திலேயேதான் வைக்க வேண்டுமென்றும் கூறினேன். அதிகாரிகளை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறிவிட்டு, உடனடியாக காமராஜரின் உடலை ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்" என்று நெஞ்சுக்கு நீதியின் இரண்டாம் பாகத்தில் கருணாநிதி பதிவுசெய்திருக்கிறார்.

மேலும், "காமராஜர் உடலை எங்கே அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தபோது கிண்டியில் காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் ராஜாஜி நினைவகம் அருகில் அடக்கம் செய்யலாம் என்ற கருத்தினை நான் தெரிவித்தேன். அப்போது இரவு மணி எட்டாகிவிட்டது. மழை வேறு. இருந்த போதிலும் நானே எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று பார்ப்பதற்காக கிண்டிக்குச் சென்றேன். என்னுடன் பேராசிரியர், ப.உ. சண்முகம், மேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு, திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். கிண்டிக்குச் சென்று அங்கே இருட்டில், காரைத் திருப்பி கார் வெளிச்சத்திலேயே இடத்தைப் பார்வையிட்டுத் தேர்ந்தெடுத்தோம்" என்றும் கருணாநிதி அந்த நூலில் கூறியிருக்கிறார்.

அந்தத் தருணத்தில் தன்னுடன் வந்ததாக மு. கருணாநிதி குறிப்பிடும் திண்டிவனம் ராமமூர்த்தி அப்போது ஸ்தாபன காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். முதலமைச்சரிடம் மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்யும்படி கோரியதாகவும் அதை அவர் மறுத்ததாகவும் பிபிசியிடம் திண்டிவனம் ராமமூர்த்தி தெரிவித்தார்.

"எங்களுக்கு காமராஜருக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென ஆசை இருந்தது. காமராஜரைக் காணவந்த முதலமைச்சர் கருணாநிதியிடம் அதைத் தெரிவித்தோம். ஆனால், அவர் அண்ணா நினைவிடத்தைப் பராமரிப்பதே பெரும் பிரச்சனையாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்." என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி.

அதிகாரபூர்வமாக கட்சியின் சார்பில் இந்தக் கோரிக்கை முதலமைச்சரிடம் வைக்கப்பட்டதா என்று கேட்டபோது, "இல்லை. அதிகாரபூர்வமாகக் கேட்கவில்லை. எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம். ராஜகோபால் நாயுடு போன்றவர்கள் அப்போது உடன் இருந்தார்கள்" என்றார் திண்டிவனம் ராமமூர்த்தி. ஆனால், முதலமைச்சராக இருந்தால்தான் மெரினாவில் இடம் தர முடியும் என்று கூறி கருணாநிதி மறுக்கவில்லை என்றார்.

காமராஜர்

பட மூலாதாரம், TWITTER

திண்டிவனம் ராமமூர்த்தி குறிப்பிடும் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவரான ராஜகோபால் நாயுடு, மேலவையில் பேசும்போது தனக்கு நன்றி தெரிவித்துப் பேசியதாக, சட்டமேலவை குறிப்புகளை மேற்கோள்காட்டி நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிடுகிறார் கருணாநிதி.

"தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அவருடைய பிரேதத்தை பார்வைக்கு வைத்து அங்கேயே எரித்து நினைவுச்சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவுசெய்திருந்தோம். சிலர் ராஜாஜி ஹாலுக்கு கொண்டுபோய் வைக்க வேண்டும்; முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று சொன்னார்கள். இதை எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அதே வினாடியில் முதலமைச்சர் அவர்கள் காமராஜர் வீட்டிற்குள் வந்துவிட்டார். வந்ததும் முதல் வேலையாக இங்கே கூட்டத்தைச் சமாளிக்க முடியாது; உடனே ராஜாஜி ஹாலுக்கு கொண்டுபோக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு ஏதோ கனவு கண்டதைப் போலச் சொன்னார்கள். எங்கள் மனதை எப்படித் தெரிந்துகொண்டார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை.... எங்கே வைப்பது என்பதற்கு அவரைக் காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டுமென்று சொன்னார்கள்... அன்று இரவே முதலமைச்சர் அவர்கள் அவருடைய வண்டியிலேயே என்னையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் காரியதரிசியையும் அழைத்துக்கொண்டு மழை பெய்துகொண்டிருக்கும்போதே, இரவு 8 மணிக்கு முதலமைச்சர் அவர்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்றோம். அவர்களே செய்திருக்கலாம். எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் எங்களையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்தில், அந்த இரவில் வெளிச்சம் இல்லை. கார்களை எல்லாம் திருப்பி நிறுத்தி விளக்கைப் போட்டு, இடத்தைத் தேர்ந்தெடுத்து அன்றிரவே அங்குள்ள மரங்களை எல்லாம் அகற்றி, இரவெல்லாம் அமைச்சர் அவர்கள் தூக்கமில்லாமல் அங்கேயே இருந்து ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே இதை மறக்க முடியாது" என்று ராஜகோபால் நாயுடு மேலவையில் குறிப்பிடுகிறார்.

காமராஜருக்கு இடம் கேட்டு மறுக்கப்பட்டதா என அந்தத் தருணத்தில் ஸ்தாபன காங்கிரசின் மற்றொரு பொதுச் செயலாளராக இருந்த பழ. நெடுமாறனிடம் கேட்டபோது, அப்படி ஒரு கோரிக்கையே கருணாநிதியிடம் வைக்கப்படவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.

"எங்களுக்கு அப்படி ஒரு யோசனையே இல்லை. நாங்கள் தேனாம்பேட்டை மைதானத்தில் வைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தோம். கருணாநிதி தானாக முன்வந்து தற்போது நினைவிடம் உள்ள இடத்தை ஒதுக்கிக்கொடுத்தார்" என்று நினைவுகூர்கிறார் நெடுமாறன்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்று நூல் உட்பட, அவரைப் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கேட்டபோது, "தலைவர்களுக்கு மெரினா குறித்த விருப்பம் இருந்தது உண்மைதான். ஆனால், அதிகாரபூர்வமாக அதைக் கோரவில்லை" என்று மட்டும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக உலாவரும் பல வாட்ஸப் தகவல்களில் காமராஜரை புதைக்க மெரினாவில் இடம் தர கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல்கள் கடந்த சில நாட்களாகப் பரப்பப்பட்டன. ஆனால், உண்மையில் காமராஜரின் உடல் எரியூட்டப்பட்டது.

ஜானகி ராமச்சந்திரன் நினைவிடம்

1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, மு. கருணாநிதி தலைமையிலான புதிய அரசு மே 13ஆம் தேதியன்று பதவியேற்றது. முன்னாள் முதலமைச்சரும் எம்.ஜி.ஆரின் மனைவியுமான வி.என். ஜானகி மே 19ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

அப்போது என்ன நடந்தது என்பதை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு குழந்தைகளில் ஒருவரான லதாவின் மகனான குமார் ராஜேந்திரனிடம் கேட்டபோது, "குடும்பத்தினர் யாரும் ஜானகிக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

"ஜானகியம்மாள் மறைந்தவுடன் உடனடியாக முதல்வரின் இல்லத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தோம். உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வந்து தகவலை உறுதிப்படுத்தி முதல்வரிடம் தெரிவித்தார்கள். பிறகு ஜெயலலிதா வந்து அஞ்சலி செலுத்தினார். அதற்குச் சில மணி நேரத்தில் முதலமைச்சர் கருணாநிதி வந்துவிட்டார். அவர் ஜானகியம்மாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு என் தாத்தாவை (வி.என். ஜானகியின் சகோதரர்) அழைத்துச் சென்று என்ன உதவி தேவை என்று கேட்டார். எனது தாத்தா, தாங்கள் ராமாவரம் தோட்டத்திலேயே ஜானகியம்மாளைப் நல்லடக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான அனுமதிகளைத் தரும்படியும் கோரினார்" என்கிறார் குமார்.

குமார் ராஜேந்திரன்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, குமார் ராஜேந்திரன்

மேலும், உடனடியாக அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ராம் மோகன் ராவை ராமாவரம் தோட்டத்திற்கு அனுப்பி தேவையான அனுமதிகளை பெற்றுத்தருவதோடு, உதவிகளையும் செய்யும்படியும் பணித்தார் கருணாநிதி என்கிறார் குமார்.

ஜானகியம்மாளின் இறுதிச் சடங்குகள் நடந்தபோது முன்னாள் முதல்வருக்கான அனைத்து அரசு மரியாதைகளும் செய்யப்பட்டன என்று நினைவுகூர்கிறார் குமார்.

லதாவின் சகோதரியான சுதாவிடம் கேட்டபோது, "திருமதி ஜானகி ராமச்சந்திரனை தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்வது என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பதுதான் எனக்கு தெரிந்த விஷயம். மெரீனாவில் இடம் கோரலாம் என்பதே எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய அம்மாவின் பூதவுடலை அவர் தன் கணவருடனும் குழந்தைகளான எங்களுடனும் மகிழ்ச்சியாக செலவழித்த வீட்டிலேயே அடக்கம் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், இந்தத் தருணத்திலாவது அவருடைய சிலை ஒன்றை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வைக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம்" என்று தெரிவித்தார்.

1996ல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோது, வி.என். ஜானகியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கருணாநிதி, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தார் என்றும் குறிப்பிடுகிறார் குமார்.

நெஞ்சுக்கு நீதி நூலில் இந்த நிகழ்வு குறித்து கருணாநிதி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், முன்னாள் முதல்வர்கள் பட வரிசையில் ஜானகி எம்.ஜி.ஆரின் படம் இல்லாததைப் பார்த்து, அவருடைய படத்தையும் வைக்க தான் உத்தரவிட்டதாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :