You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு சர்ச்சை? 10 முக்கிய தகவல்கள்
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.
அந்தப் படம் வெளியாவதைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜபுத்திரர்களின் அமைப்புகளும், பல வலதுசாரி அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் போராட்டமும் நடத்துகின்றன.
அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பிற்கு என்ன காரணம், பத்மாவதி எனும் ராணிக்கு வரலாறு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
- மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது இந்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படும் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர். வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.
- ரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவனின் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.
- அவருடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.
- அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
- பத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.
- கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று வியாழன்று கூறியிருந்தார்.
- சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
- யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள, ராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக விளங்கிய சித்தோர்கர் கோட்டை உள்பட பிற மாநிலங்களிலும் இந்தத் திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்