You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்?
- எழுதியவர், சிந்துவாசினி
- பதவி, பிபிசி
சமைக்கத் தெரியுமா? எப்படிப்பட்ட ஆடைகள் பிடிக்கும்? மாடர்னா அல்லது பாரம்பரிய உடையா? அல்லது இரண்டுமா? திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்வாயா?
இந்த கேள்விகளைக் கேட்பவர்கள் மணமகனின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. இந்த கேள்விகளை முன்வைப்பது திருமணம் நடத்தி வைக்க துணை தேடித்தருவதாக கூறும் மேட்ரிமோனியல் இணையதளங்கள்.
கடந்த சில நாட்களாக என் பெற்றோர் திருமணம் செய்துகொள் என்று என்னை வற்புறுத்தியதுடன், திருமணத்திற்கு துணை தேடித் தரும் இணையதளங்களில் பதிந்துகொள்ள அறிவுறுத்தினார்கள்.
நானும் சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் சரி என்று ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு துணை தேடிதரும் இணையதளங்களில் பதிவு செய்ய ஒத்துக்கொண்டேன்.
நான் முதலில் பார்த்த இணையதளத்தில் சிரித்துக்கொண்டே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு தம்பதியினரின் படம் முகப்பில் இருந்தது. அதில் பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது, "love is looking for you, be found". "அன்பு உங்களை தேடிக் கொண்டிருக்கிறது, அதை அடையுங்கள்" என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அதாவது நான் அன்பான வழியில் பயணிக்கப் போகிறேன். அதற்காக என்னுடைய சாதி-மதம், குலம்-கோத்திரம், வயது, தோற்றம், நடை உடை பாவனை, கல்வித்தகுதி, வேலை, சம்பளம் என என்னைப் பற்றிய அனைத்துவிதமான தகவல்களையும் கொடுக்கவேண்டும்!
பரவாயில்லை, இந்த தகவல்கள் நம்மீது அன்பு கொள்வதற்காக தேவைப்படுபவை! எனவே கொடுத்துவிட்டேன்.
சரமாரியான கேள்வி மழை
நான் சைவமா, அசைவமா? மது-புகைப்பழக்கம் உண்டா? உடுத்துவது மாடர்ன் ஆடைகளா அல்லது கலாசார உடையா? இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல்.
அதன்பிறகு, சமைக்கத் தெரியுமா? இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு அடுத்துக் கேள்விக்கு தாவினேன். அடுத்த கேள்வி, 'திருமணத்திற்கு பிறகு வேலை பார்க்க விருப்பமா?'
இப்படி எல்லாவிதமான தகவல்களையும் சொல்லிவிட்ட பிறகும், நான் எப்படிப்பட்ட பெண், வாழ்க்கை பற்றிய என்னுடைய திட்டமிடல் என்ன? லட்சியம் என்ன? என பல கேள்விகள் கேட்கப்படுகிறது.
பாலின பாகுபாடு குறித்து எனது கருத்துகளை எழுதத் தொடங்கினேன். பிறகு இது வேலைக்கான விண்ணப்பம் இல்லையே? இதை எழுதவேண்டாம் என்று அழித்தேன். நான் வேலைக்காக விண்ணப்பிக்கிறேனா அல்லது வாழ்க்கைத் துணையை தேடுகிறேனா என்ற சந்தேகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.
இப்படி பல அடித்தல்-திருத்தல்களுக்கு பிறகு, ஒருவழியாக திருமண சந்தையில் மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றின் மூலமாக என்னை சந்தைப்படுத்த ஒப்புதல் அளிக்கும் கேள்விகளை பூர்த்தி செய்துவிட்டேன்.
சரி, இப்போது வரன்கள் தொடர்பாக எனக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விரிவாக படித்தேன். எந்தவொரு ஆணுமே தனக்கு சமைக்கத் தெரியுமா என்பதை பற்றி குறிப்பிடவில்லை.
திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விருப்பமா அல்லது வீட்டிலேயே இருக்க விரும்புகிறாரா என்று சொல்லவில்லை. பிடித்தமான ஆடைகள், வழக்கமாக எதுபோன்ற ஆடைகள் அணிவார் என்ற எந்த தகவல்களுமே இல்லை. ஆண்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாது.
இன்னும் சற்று விரிவாக அலசி ஆராய்ந்தால், மணமகன்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை என்று தெரிந்துக் கொண்டேன்.
மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதாக கூறிகொள்ளும் நவீன இணையதளங்களும் ஆண் மற்றும் பெண்ணை வெவ்வேறு கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது.
இதன்பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் மேலும் பல இணையதளங்களை பார்த்தேன். ஏறக்குறைய எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கேள்விகளே கேட்கப்படுகின்றன.
ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் மணப்பெண்ணை தேடினால் அது அடிப்படையாக 20-25 வயதுக்கு உட்பட்ட பெண்களை காண்பிக்கும். அதேபோல் மணமகன் என்று பொதுவாக தேடினால் 24-29 வயதுக்கு உட்பட்ட ஆண்களை காட்டும்.
அதாவது நமது சமூக கண்ணோட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆணைவிட பெண்ணின் வயது குறைந்திருக்கவேண்டும். இந்த போக்குதான் இன்று நடைமுறையில் இருக்கிறது.
மற்றொரு இணையதளத்தில் மணப்பெண்ணே தனக்கான பதிவுக் கணக்கை உருவாக்கியிருந்தால், அணுகுபவர்கள் குறைவாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வாழ்க்கைத் துணையை சுயமாக தேடுவர்களின் சந்தை மதிப்பு குறைவு. உங்களுக்கான துணையை தேடுபவர் உற்றார் உறவினராக இருந்தால் அதிகம் விரும்பப்படுவீர்கள்.
இதன்பொருள் என்ன? தனக்கான வாழ்க்கைத் துணையை தானே தேடுபவரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் மக்கள். உங்களுக்கு திருமணம் ஆக வேண்டுமா? பெற்றோர் அல்லது சகோதரன், சகோதரி உங்களுக்காக கணக்கை தொடங்கவேண்டும்.
ஆண் பெண் என்பதால் காட்டப்படும் பாகுபாடு இத்துடன் முடிவதில்லை, புகைப்படத்தில் அது வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
செல்ஃபியில் தெரியும் வித்தியாசம்
ஆண், தனது செல்ஃபியோ அல்லது அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போன்ற இயல்பான புகைப்படங்களை கொடுத்திருப்பார். ஆனால், பொதுவாக பெண்களின் படம் கலாசார பாணி ஆடை அணிந்து, அலங்காரத்துடன் காணப்படும்.
செய்தித்தாள்களில் வெளியாகும் மணமகள் தேவை விளம்பரங்களில், 'அழகான, குடும்பப்பாங்கான, பண்பான பெண் தேவை' என்று பார்ப்பது இயல்பானதே. ஆனால், இந்த நவீன உலகில் மேட்ரிமோனியல் இணையதளங்களிலும் அதே பழம்போக்கு காணப்படுவது வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
பத்திரிகைகளில் அழகான, குடும்பப்பாங்கான, பண்பான மணமகன் வேண்டும் என்ற விளம்பரங்களை பார்ப்பதும் அரிது, விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் அனுப்புங்கள் என்று மணமகனிடம் கோரிக்கை வைப்பதோ அரிதிலும் அரிதானது.
இவற்றை பழமையான மனப்பாங்கு என்று சொல்லி புறந்தள்ளலாம். ஆனால் நவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் மேட்ரிமோனியல் இணையதளங்கள் பழையவற்றை கழிக்காமல் அப்படியே இந்த தலைமுறைக்கும் தொடர்வதை கேள்வி கேட்கவேண்டாமா?
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது திருமண பந்தத்திற்கும், அதை தேடும் வழிமுறைகளுக்கும் பொருந்தாதா? அதிலும், இணையதளம் மூலமாக வாழ்க்கைத்துணை தேடும் ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்தத்துறையில் மாற்றங்கள் தேவை.
பில்லியன்களின் வருவாய்
கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் தொடர்பான இணையதளங்களின் சந்தை அதிகரித்து, தற்போது அதன் வணிகம் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாக அசோசேம் வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.
இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, வரன்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கேள்விகளில் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது என்று தெரிந்துக் கொள்ள முயன்றேன்.
தொலைபேசியை உற்சாகத்துடன் எடுப்பவர்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க விரும்பாமல், வேறு வேலையில் மும்முரமாக இருப்பதாக சொல்லி தவிர்த்துவிட்டார்கள்.
விடாக்கண்டியாக நான் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு அவர்களும் பதில் கொடாதவர்களாகவே இருந்துவிட்டார்கள்.
விக்ரமாதித்யனிடம் கேள்வி கேட்கும் முயற்சியை வேதாளம் கைவிடாதது போன்று, நானும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டேன். அதன்பலனாக, வாடிக்கையாளர் உதவி மையத்தில் பணிபுரியும் அலோக் என்ற ஒருவர் பேசினார்.
"மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் கேள்விகளை தயாரிக்கிறோம். பொதுவாக மணமகள் தேடும் அனைவருமே, பெண் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, வீட்டு நிர்வாகத்தையும் கவனிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள்'' என்கிறார் அலோக்.
எனது தோழி ஒருத்தியை பெண் பார்க்க வந்தவர்கள் செருப்பை கழற்றி விட்டு நிற்கச் சொல்லி உயரத்தை தெரிந்துக் கொண்டார்களாம். அந்தகாலத்தில் பெண் பார்க்க வருபவர்கள் தலை முடி உண்மையானாதா, சவுரியா என்று இழுத்துப் பார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
காலம் மாறினாலும் பெண் பற்றிய கண்ணோட்டம் மாறவில்லை என்பதையே மேட்ரிமோனியல் இணையதளங்கள் பிரதிபலிக்கின்றன.
நன்கு படித்த, உயர் பதவிகளில் இருப்பவர்கள் மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவு செய்து வாழ்க்கைத் துணையை தேடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேட இந்த மேட்ரிமோனியல் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இரட்டை அணுகுமுறை தொடர்பாக குரல் எழுப்பாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும், இது கவலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது?
பிற செய்திகள்:
- 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'
- ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்
- கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் வேதனை
- 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'
- வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்