You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று
2000களின் தொடக்கத்திலிருந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவந்தன.
இதில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் காவல்துறைக்கு பெரிதாகக் கிடைக்காத நிலையில், 2005ல் கும்மிடிப்பூண்டி தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் இந்தக் கும்பலால் கொல்லப்பட்டார். இதையடுத்து, இந்தக் கும்பலைப் பிடிக்க, தமிழக அரசு அப்போதைய ஐ.ஜியான எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படையை அமைத்தது.
உத்தரப்பிரதேச காவல்துறை, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தமிழக காவல்துறை ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல மாதங்கள் தேடுதல் வேட்டை நடத்தியதில் அந்தக் கும்பலைச் சேர்ந்த பஸுரா பவரியா, விஜய் பவரியா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒமா பவாரியா, லட்சுமணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடைபெற்று, சிலருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்தக் கதையையே சிறப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார் எச். வினோத். ஏற்கனவே சதுரங்க வேட்டை படத்தின் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேரும் தீரன் (கார்த்தி), தன்னுடைய நேர்மையான செயல்பாடுகளின் காரணமாக பல இடங்களுக்கும் மாற்றம்செய்யப்படுகிறார்.
பொன்னேரிக்கு மாற்றம் செய்யப்படும்போது, மிகக் கொடூரமான முறையில் ஒரு கொலை - கொள்ளை சம்பவம் அங்கு நடக்கிறது. அதனை விசாரிக்க ஆரம்பிக்கும் தீரனுக்கு, அதுபோலவே பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருப்பது தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் தீரன். வட இந்தியாவைச் சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றுதான் இதில் ஈடுபடுவது தெரிந்தாலும் அவர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
இதற்கிடையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த கும்பலால் கொல்லப்பட, வேட்டை தீவிரமாகிறது. இறுதியில் பல போராட்டங்கள், காத்திருப்புகள், அபாயங்களுக்குப் பிறகு அந்தக் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட, மீதமுள்ளவர்கள் பிடிபடுகிறார்கள்.
பல வகையிலும் கவனத்திற்குரிய திரைப்படம் இது. ஒரு பெரிய கொள்ளைக் கும்பல், அதுவும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலை மெல்ல மெல்ல துப்புகளைச் சேகரித்து நெருங்குவதை மிக விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
காவல்துறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கமான "என்கவுண்டர்" மற்றும் ஆக்ஷன் படமாக இல்லாமல், ஒரு துப்பறியும் கதைக்கே உரிய ரகசியங்கள், பின்னணித் தகவல்களுடன் படத்தை நகர்த்துகிறார் வினோத்.
ஆனால், சில பகுதிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னுமும் சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் காதல் காட்சிகள்.
சீட் நுனியில் ரசிகர்களை உட்காரவைத்துவிட்டு, திடீரென கதாநாயகன் - கதாநாயகி இடையிலான ரொமான்சிற்குத் தாவுவது படத்தை முழுமையாக ரசிப்பதற்கு பெரும் தடையாக அமைகிறது. அதேபோல, நாயகன் - நாயகி இடையிலான பாடல்களும் இந்தப் படத்திற்கு தேவையேயில்லாதவை.
காற்று வெளியிடை, காஷ்மோரா என கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெறாத நிலையில், அவர் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான, ஒரு குறிப்பிடத்தகுந்த படமாக இந்தப் படம் அமையக்கூடும்.
கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் வரும் காட்சிகள் இயல்பானவை, ரசிக்கத்தக்கவை என்றாலும் இந்தப் படத்திற்குப் பொருந்தாதவை. ஆனால், தன் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
படத்தின் வலுவான திரைக்கதைக்கு மேலும் வலுச் சேர்க்கின்றன சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும். குறிப்பாக, பரந்த பாலைவனப் பகுதிகளையும் அடர்ந்த காடுகளையும் கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவு, படத்தின் மிகப் பெரிய பலம்.
வலுவான திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், முன்பு பாராத இடங்கள் என ஒரு கவனிக்கத்தக்க திரைப்படம் இது.
பிற செய்திகள்:
- ஜிம்பாப்வே: அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் ராபர்ட் முகாபே
- 'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம்
- எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்?
- கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ரோஹிஞ்சா பெண்கள் வேதனை
- வங்கதேசம்: விடுதலைக்குப் பின்னும் இந்திரா உதவியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்