சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல்

2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கிறது படம்.

1887ஆம் ஆண்டு. விக்டோரியா மகாராணி, அரச பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் நிகழ்வில் பணியாற்ற, இந்தியாவிலிருந்து இரு பணியாளர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆக்ராவைச் சேர்ந்த 24 வயது அப்துல் கரீம். அப்துல் கரீமின் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் மகாராணிக்குப் பிடித்துப்போய்விட, அப்துலை பணியாளர் என்ற நிலையிலிருந்து 'முன்ஷி' (ஆசிரியர்) என்ற நிலைக்கு உயர்த்துகிறார் விக்டோரியா. அப்துலிடமிருந்து உருது கற்றுக்கொள்ளவும் ஆரம்பிக்கிறார்.

மகாராணி, அப்துலுடன் பழகுவது அரச குடும்பத்திலும் இங்கிலாந்து அரசிலும் பெரும் புகைச்சலை ஏற்படுத்துகிறது. இருந்தும், விருதுகள், பட்டங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அப்துலுக்கு வழங்கப்படுகின்றன. அவரது மனைவியை, குடும்பத்தினரை இந்தியாவிலிருந்து அழைத்துவந்து, தனி வீட்டிலும் தங்கவைக்கிறார் மகாராணி. 1901ல் மகாராணி இறந்தவுடன், இருவருக்கும் இடையிலான கடிதங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, எரிக்கப்படுகின்றன. அப்துல் குறித்து மகாராணி எழுதிய குறிப்புகளும் அழிக்கப்படுகின்றன. இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அப்துல்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 'எம்' ஆக வரும் ஜூடி டென்ச் மகாராணி விக்டோரியாவாக நடித்திருக்கிறார். ஏற்கனவே Mrs Brown படத்திலும் அவர் விக்டோரியா மகாராணியாக நடித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும். அப்துலாக நடித்திருக்கும் அலி ஃபஸல் பெரிதும் வசீகரிக்கிறார்.

கடிதங்கள், நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை திரைக்கதையாக்கும்போது பல சிரமங்கள் வரக்கூடும். சில காலகட்டங்களில் என்ன நடந்திருக்கும் என்பது தெரியாது. ஆனால், படமாகப் பார்க்கும்போது, அந்த உணர்வே ஏற்படாமல் ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. தவிர, எந்த இடத்திலும் தொய்வே ஏற்படுத்தாத திரைக்கதையும் வசனங்களும் சிறந்த திரைப்பட அனுபவத்தைத் தருகின்றன.

19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தை கண்முன் நிறுத்தும் இந்தப் படத்தில் ஒரே உறுத்தல், படத்தின் துவக்கத்தில் வரும் ஆக்ரா நகரக் காட்சிகள். தற்போதைய வீடுகளின் மத்தியில் படமாக்கப்பட்டிருப்பதால், படத்தோடு ஒட்டவேயில்லை.

பிரிட்டிஷ் வரலாற்றில் ஆர்வமுடையவர்கள் ரொம்பவுமே ரசிக்கத்தக்க திரைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :