You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி குறித்தும், விருதை திருப்பித் தருவது குறித்தும் பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?
நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடியை நையாண்டி செய்ததாக சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகளும், விவாதங்களும் அனல் பறக்கின்றன.
'இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு' என்ற நிகழ்ச்சியின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது
நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த காணொளி அக்டோபர் முதல் தேதியன்று பிற்பகலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, பிரகாஷ் ராஜ் தனது தேசிய விருதுகளை திருப்பிக் கொடுக்கப்போகிறார் என்று சமூக ஊடகங்களில் சலசலப்பு கிளம்பியது.
டிவிட்டரில் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட காணொளி
பிரகாஷ் ராஜின் விளக்கம் என்ன?
பிரகாஷ்ராஜ் தேசிய விருதுகளை திரும்பிக் கொடுக்கப் போவதாக வதந்திகள் பரவத் தொடங்கியதற்கு பிறகு அவர் சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை பதிவேற்றியிருக்கிறார். அதில் அவர் கூறும் விளக்கங்கள் இவை:
- எனக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுக்கப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. விருதுகளை திருப்பித்தரும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல.
- என்னுடைய சிறப்பான பணிக்காக வழங்கப்பட்ட விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இப்போது நான் விசயத்திற்கு வருகிறேன்.
- கௌரி லங்கேஷின் மனிதாபிமானமற்ற கொலை எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. மேடைக்குச் சென்ற நான், அதுகுறித்து பல கருத்துகளையும் சொன்னேன். உண்மையில் லங்கேஷை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் சிலர் இந்தக் கொலைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
- அதுபோன்றவர்கள் மீது எனது கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக மக்களின் கோபத்தை நான் எதிர்கொள்கிறேன், சிக்கல் எழுந்துள்ளது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
- ஆனால், என்னுடைய கேள்வி என்னவென்றால், பிரதமர் மோதி இவர்கள் பற்றி எதுவும் கூறாமல் அமைதி காப்பதும் இந்தியக் குடிமகனாக என்னை பாதிக்கிறது.
- நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாரவில்லை. எந்தவொரு கட்சித் தலைவரிடம் நான் பேசவில்லை.
- இந்தியாவின் குடிமகனான நான், என்னுடைய பிரதமரின் அமைதியைப் பற்றி பேச விரும்புகிறேன். உங்கள் அமைதி என்னை காயப்படுத்துகிறது என்று சொல்ல விரும்புகிறேன், இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு.
- ஆனால், பிரகாஷ் ராஜ் தனது விருதுகளை திரும்பக் கொடுக்கப் போகிறான் என்று வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
சமூக ஊடகங்களில் வைரலான காணொளி
முன்னதாக , இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு' என்ற நிகழ்ச்சியின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை பற்றி பிரகாஷ் ராஜ் கூறியிருப்பவை:
- ''கெளரியை கொலை செய்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் சமூக ஊடகங்களில் நமது பிரதம மந்திரியை தொடர்கிறார்கள்.
- நமது பிரதமரோ, இந்த விசயத்தில் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேச அரசை வழிநடத்துபவர் ஒரு பூசாரியா அல்லது முதலமைச்சரா என்பதே தெரியவில்லை.
- எனக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். அவற்றை நான் திருப்பி கொடுத்துவிடவேண்டும். நான் பிரபலமான நடிகன். நீங்கள் நடிப்பதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்றா நினைக்கிறீர்கள்? குறைந்தபட்சம் என்னை ஓரளவாவது மதியுங்கள்.
- யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்பதை நடிகனாக இருக்கும் என்னால் நன்றாக புரிந்துக் கொள்ளமுடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்