You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் வேகஸில் 59 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?
லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 59 பேரைக் கொன்று, 515க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரியைப் பற்றிய பல விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க பாடகர் ஜேசன் அல்டின் இசை நிகழ்ச்சியின் போது 64 வயதான ஸ்டீஃபன் பேடக், இசைக் காதலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டு மழையினை பொழிந்துள்ளார்.
மாண்டலே பே ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் 32வது மாடியில் உள்ள அறையில் இருந்து இந்தச் சந்தேகத்துக்குரிய துப்பாக்கித்தாரி சுட்டுள்ளார்.
போலீஸார் அவரை நெருங்கும்போது, பேடக் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில், இது ஒரு மோசமான துப்பாக்கி சூடு சம்பவம்.
ஜூன் 2016-ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 49 பேர் இறந்த நிலையில், தற்போதைய சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய சம்பவத்தை விட அதிகம்.
செப்டம்பர் 28-ம் தேதி முதல் ஹோட்டலில் தங்கியிருக்கும் பேடக் அறையில் இருந்து கூடுதலாக 10 துப்பாக்கிகளை விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளதாக லாஸ் வேகஸ் ஷெரீப் ஜோசப் லோம்பர்டோ கூறியுள்ளார்.
போலீஸார் அவரது அறையை நெருங்கும் நேரத்தில், அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொன்றதாக ஷெரீப் தெரிவித்தார்.
"அவரது மத கோட்பாடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" எனவும் ஷெரீப் கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கும், தீவிரவாத செயலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஏதேனும் ஆதாரம் கிடைத்துள்ளதா? என ஷெரீப்பிடம் கேட்கப்பட்டது.
"இல்லை. தற்போது எதுவும் இல்லை" என அவர் கூறினார்.
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு, பின்னதாக இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. பேடக் சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், இதற்கான எவ்வித ஆதாரத்தையும் ஐ.எஸ் குழு அளிக்கவில்லை. முந்தைய காலத்தில் ஆதாரமற்ற கூற்றுகளை இக்குழு தெரிவித்துள்ளது.
மூத்த அமெரிக்க அதிகாரிகள் இக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளனர்.
22,000 எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை சுடுவதற்குத் தானியங்கி துப்பாக்கியை பேடக் பயன்படுத்தியிருப்பதை, இசை நிகழ்ச்சியில் பதிவான ஒலி குறிக்கிறது.
வழக்கமான போக்குவரத்து விதிமீறல் வழக்கில் மட்டுமே முந்தைய காலங்களில் பேடக் சிக்கியிருந்ததாக லாஸ் வேகஸ் போலீஸார் கூறுகின்றனர்.
லாஸ் வேகஸில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இருக்கும், பேடக்கின் இரண்டு அறை கொண்ட வீட்டினை விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
``நல்ல, அழகான வீடு, அங்கு அசாதாரணமாக எதுவும் இல்லை`` என மெஸ்க்வைட் போலீஸ் அதிகாரி க்யூன் கூறுகின்றனர்.
பேடக் வீட்டிற்குள், சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புவதாகவும் க்யூன் கூறுகிறார்.
உடனிருந்த தாக்குதல்தாரியின் தோழி?
பேடக் அறையில் தங்கியிருந்த, மரிலோவ் டான்லீயை கண்டுபிடிக்க உதவுமாறு முன்னதாக அதிகாரிகள் கோரியிருந்தனர்.
ஆனால், அவர் விசாரிக்கப்பட்டதாக பின்னர் அதிகாரிகள் கூறினர்.
மாண்டலே பே ஹோட்டலில் அறை பதிவு செய்து பேடக் தங்கியபோது, 62 வயதான மரிலோவ் டான்லீ அவருடன் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மரிலோவ் டான்லீயின் சில அடையாளங்களை, பேடக் பயன்படுத்தியாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"அப்பெண் பேடக்கின் தோழி" என சந்தேக நபரான பேடக்கின் சகோதரர் எரிக் பேடக் கூறுகிறார்.
" எனது சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்பது விளங்கவில்லை" எனவும் எரிக் கூறுகிறார்.
``அவருக்கு எவ்வித தீவிரவாத பின்புலமும் இல்லை. மெஸ்க்வைட்டில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். லாஸ் வேகஸுக்கு சென்று சூதாட்டம் ஆடுவார்`` எனவும் அவர் கூறுகிறார்.
சிறிய விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த பேடக், இரண்டு விமானங்களை வைத்திருந்ததாக எம் பி சி கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்