லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 59 பேர் சாவு, 500 பேர் காயம்

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். 515 பேர் காயமடைந்தனர்.

மாண்டலே பே சூதாட்ட விடுதியின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டலே பே விடுதியில் நடைபெற்று வந்த ஒரு திறந்த வெளி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர், 64 வயதுடைய ஸ்டீஃபன் பேடக் என்றும், உள்ளூரைச் சேர்ந்த அந்த நபரை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில், இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 515 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு மருத்துவமனை பேச்சாளர் அமெரிக்க ஊடகத்தில் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபருடன் வந்த ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அது, வீடியோ கேம்களில் ஆடப்படும் விளையாட்டில் தானியங்கி துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றதாக தெரிவித்தனர்.

சம்பவம் நடக்கும்போது, அங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் தப்பியோடினார்கள்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த ஹோட்டல்கள் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தப்பியோடிய மக்கள் அந்தக் கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

லாஸ் வேகஸில் இருக்கும் லண்டனைச் சேர்ந்த மைக் தாம்ஸன் இதுபற்றிக் கூறும்போது, ஒருவர் தன் உடல் முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட ஓடியபோதுதான் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்