You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் ஜாங் -நாம் கொலை: குற்றம் செய்யவில்லை என இரு பெண்களும் மறுப்பு
வட கொரிய தலைவரின், ஒன்றுவிட்ட மூத்த சகோதரரான கிம் ஜாங்-நாமின் கொலை வழக்கின் விசாரணை மலேசியாவில் துவங்கிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்களும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என மறுத்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், உலகை அதிரவைக்கும் வகையில், மிக மர்மமான முறையில் கிம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உயிரிழந்தார்..
இந்தோனீஷியாவை சேர்ந்த, 25 வயதான சிட்டி அய்ஷ்யா மற்றும் வியட்நாமை சேர்ந்த 29 வயதான தேயன் தி ஹீயோங் ஆகியோர், அவரின் முகத்தில், விஷத்தனமை வாய்ந்த வி.எக்ஸ் ரசாயனத்தை பூசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த பெண்கள், வட கொரிய அதிகாரிகள் தங்களை ஏமாற்றி இதை செய்ய வைத்ததாக கூறுகின்றனர்.
இந்த கொலையில் தங்களுக்கு சம்மந்தம் இல்லை என வட கொரியா மறுக்கிறது.
இந்தக் கொலைச் சம்பவத்தை அடுத்து, வடகொரியா - மலேசியா இடையிலான உறவில் பெரும் நெருடல் ஏற்பட்டது.
திங்களன்று, கோலாலம்பூருக்கு வெளியே உள்ள ஷா அலாம் நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களும், தலையை குனிந்தவாறு, செய்தியாளர்களை கடந்து சென்றனர்.
இருவரின் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டு இருந்ததாகவும், குண்டு துளைக்காத சட்டைகளை அவர்கள் அணிந்து இருந்ததாகவும் ஏ எ.ஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
அவர்கள் மீதான குற்ற அறிக்கை, வியட்நாம் மற்றும் இந்தோனீஷிய மொழிகளில் படித்து காண்பிக்கப்பட்ட பிறகு, அந்த பெண்கள் இருவரும் தங்களுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மனுவை தெரிவித்தனர்.
40 வயதுக்கு மேல் ஆகும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரரான கிம் ஜாங் - நாம், இறந்து போகும் காலகட்டத்தில், அவரை பிரிந்து வேறுநாட்டில் வாழ்ந்துவந்தார்.
பிப்ரவரி 13ஆம் தேதி காலை, கோலாலம்பூர் விமான நிலையத்தில், இரண்டு பெண்கள், கிம் முகத்தில் தங்கள் கைகளை வைத்து எதையோ பூசுவது போன்று சி.சி.டி.வி கேமரவில் பதிவாகியுள்ளது.
அதன் பின்னர், உடனடியாக விமானநிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்த கிம், மயங்கி விழுந்த சில நிமிடங்களில் இறந்தார்.
ஐ.நா மன்றத்தால், பல மக்களை கொல்லக் கூடிய கொடுமையான ஆயுதமாக கூறப்படும் வி.எக்ஸ் ரசாயனத்தை, அவர் சுவாசித்ததால் இறந்தார் என்பதை, மலேசிய அதிகாரிகள், உடற்கூறு ஆய்விற்குப் பிறகு தெரிவித்தனர்.
அவரின் மரணத்திற்கு பின்பு, சில நாட்களில் இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், இவை அனைத்தையும், தொலைக்காட்சி ஏமாற்றும் நிகழ்ச்சி என எண்ணியதாக, வலியுறுத்துகின்றனர்.
அவர்களின் வழக்கறிஞர்கள், உண்மை குற்றவாளிகள், மலேசியாவை விட்டு வெளியெறிவிட்டதாக வாதாட உள்ளோம் என தெரிவித்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து, மலேசியாவில் இருந்து வெளியேறிய பலரை இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என மலேசியா தெரிவித்தது.
இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே இருந்த உறவின் பெரிய கரையையும், ராஜாங்க பிரச்சனைகளையும் கொண்டு வந்ததோடு, இரு நாட்டு தூதர்களையும் வெளியேற வைத்தது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்