You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரியின் தாக்குதல் நோக்கம் பற்றி போலீஸ் தீவிர விசாரணை
லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிக்சூடு நடத்தி 59 பேர் கொல்லப்படவும், 527 பேர் காயமடையவும் காரணமான தாக்குதல்தாரி இந்த தாக்குதலை நடத்துவதற்கான நோக்கம் என்னவென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாண்டலே பே ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் 32வது மாடியில் உள்ள அறையில் இருந்து, 64 வயதான ஸ்டீஃபன் பேடக் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திறந்தவெளியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, துப்பாக்கியால் சுட்டு இந்த தாக்குதலை தொடுத்துள்ளார்.
ஸ்டீஃபன் பேடக்கின் ஹோட்டல் அறையில் இருந்து 23 குண்டுகளையும், வீட்டில் இருந்து 19 துப்பாக்கிகளையும், வெடி பொருட்களையும் போலீஸ் கண்டெடுத்துள்ளது.
ஆனால், இதுவரை எதற்காக அவர் இந்த தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவரவில்லை.
இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளுகின்ற குழுவினர் தெரிவித்திருந்தாலும், இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையோடு இருக்கும் தொடர்பை புலனாய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை.
புலனாய்வாளர்களில் சிலர் உளவியல் பிரச்சனைகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறியிருந்தாலும், அது உறுதி செய்யப்படவும் இல்லை.
திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையின்போது, இந்த தாக்குதல் "முற்றிலும் தீமையான ஒன்று" என்று அதிபர் டொனால்ட் டி ரம்ப் விவரித்துள்ளார்.
போலீஸார் அவரை நெருங்கும்போது, பேடக் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில், இது ஒரு மோசமான துப்பாக்கி சூடு சம்பவமாகும்.
செப்டம்பர் 28-ம் தேதி முதல் ஸ்டீஃபன் பேடக் இந்த ஹோட்டலில் தங்கிவந்துள்ளார்.
சுமார் 22 ஆயிரம் பேர் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை சுடுவதற்குத் தானியங்கி துப்பாக்கியை பேடக் பயன்படுத்தியிருப்பதை, இசை நிகழ்ச்சியில் பதிவான ஒலி குறிக்கிறது.
வழக்கமான போக்குவரத்து விதிமீறல் வழக்கில் மட்டுமே முந்தைய காலங்களில் பேடக் சிக்கியிருந்ததாக லாஸ் வேகஸ் போலீஸார் கூறுகின்றனர்.
இவர் ஒரு தீவிர சூதாட்ட பிரியர் மற்றும் வினோதமான நடவடிக்கைகள் கொண்டவர் என்று அவரது வீட்டுக்கு அருகே முன்பு குடியிருந்த ஒருவர் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக உளவியல் பிரச்சினைகளால் ஸ்டீஃபன் பேடக் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளன என்று ஒரு அமெரிக்க அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
லாஸ் வேகஸ் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 59 பேர் பலி :
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
.