ஹெச்-1பி விசா கட்டண உயர்வு யாருக்கு? அமெரிக்கா விளக்கம் - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

ஹெச்-1பி விசா, டிரம்ப் விசா உத்தரவு, அமெரிக்க விசா, ஹெச்-1பி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபய் குமார் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி இனி ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரர்களும் அமெரிக்க அரசுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டியுள்ளது. இந்த விதி செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வர உள்ளது.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில் இந்த கட்டணம் ஆண்டுதோறும் செலுத்த வேண்டியதல்ல என்றும் ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணம் மட்டுமே என்றும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த விதி அடுத்த ஹெச்-1பி விசா சுழற்சியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை ஹெச்-1பி விசாவுக்கான கட்டணம் 1,500 டாலராக உள்ளது (இந்திய மதிப்பில் ரூ.1.32 லட்சம்). அதிகரிக்கப்பட்ட கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்திருந்து, தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்கள் நாடு திரும்புகிறபோது 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டியது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவு அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்கிற கனவோடு உள்ள இந்தியர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யூஎஸ்சிஐஎஸ்) தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் வழங்கப்பட்ட ஹெச்-1பி விசாக்களில் 71% இந்தியர்களே பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 11.7 சதவிகிதத்துடன் சீனா 2வது இடத்தில் உள்ளது. எனவே இந்த விதியால் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இந்த முடிவுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், "ஹெச்-1பி விசா திட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இந்த நகர்வின் முழுமையாக தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை அமெரிக்க நிர்வாகம் கண்டடையும் என அரசு நம்புவதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

இந்திய பொறியாளர்கள், மருத்துவர்கள், தரவு ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உலகம் முழுவதும் அவர்களின் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு ஹெச்-1பி விசா முக்கியமானதாக இருந்துள்ளது. அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் முதுகெலும்பாக இந்திய வல்லுநர்கள் இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.

இந்த உத்தரவில் கையெழுத்திடும் போது டிரம்ப், "அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.

"தற்போது அமெரிக்க நிறுவனங்கள் 1 லட்சம் டாலர் செலுத்தி வெளிநாட்டு பொறியாளரைக் கொண்டு வருவது பொருளாதார ரீதியில் உகந்த முடிவாக இருக்குமா அல்லது அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு ஒரு அமெரிக்க குடிமகனை வேலைக்கு எடுக்க வேண்டுமா என முடிவு செய்ய வேண்டும்," என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

ஹெச்-1பி விசா, டிரம்ப் விசா உத்தரவு, அமெரிக்க விசா, ஹெச்-1பி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் மையத்தின் தலைவரான அஜய் ஸ்ரீவஸ்தவா இந்த முடிவு தன்னிச்சையானது எனக் கருதுகிறார்.

"இந்த முடிவு கிட்டத்தட்ட ஒரு தடை விதிக்கப்பட்டதைப் போன்றது தான். நம் மக்கள் விளையாட்டுக்காக அங்கு செல்வதில்லை, அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு இழப்புகள் உண்டு, ஆனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்புகள் இருக்கும். சிறிது காலம் கழித்து தான், அமெரிக்கா இதனை உணரும்." என்கிறார் அஜய்.

அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கெனவே 50-80% வரை உள்ளூர் மக்களைத் தான் வேலைக்கு சேர்ப்பதாகக் கூறும் அஜய் ஸ்ரீவஸ்தவா இந்த முடிவால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகாது என்றும் தெரிவிக்கிறார்.

இதனால் எந்த பலன்களும் இருக்காது என்கிறார் அஜய். "இந்த நகர்வு விளம்பரத்திற்கானது. இனி இந்தியர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது அமெரிக்க குடிமக்களை வேலைக்கு வைப்பதை விட அதிக செலவானதாக மாறும்" என்று கூறினார்.

இந்திய நிறுவனங்கள் மீதான தாக்கம் என்ன?

இந்திய ஐடி துறையின் வர்த்தக அமைப்பான நாஸ்காம் (NASSCOM) இந்த உத்தரவு பற்றி கவலை தெரிவித்துள்ளது.

"இத்தகைய மாற்றங்கள் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்புகளையும் வேலைவாய்ப்பு கட்டமைப்பையும் பாதிக்கும். அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் வேலை செய்யும் இந்திய குடிமக்கள் மீது நேரடி தாக்கம் செலுத்தும்" என நாஸ்காம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள நாஸ்காம் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புராஜக்ட்கள் பாதிக்கப்படும் என்பதால் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடு பற்றி குறிப்பிட்டுள்ள நாஸ்காம், "ஒருநாள் காலக்கெடு, அதுவும் நள்ளிரவு முதல் அமல்படுத்துவது வணிகர்கள், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குகிறது." என்றும் தெரிவித்துள்ளது.

ஹெச்-1பி விசா, டிரம்ப் விசா உத்தரவு, அமெரிக்க விசா, ஹெச்-1பி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நீண்ட காலமாக ஹெச்-1பி விசாக்களை நம்பியிருந்தன.

பன்னாட்டு நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுளும் இந்திய வல்லுநர்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. யூஎஸ்சிஐஎஸ் தரவுகளின்படி இந்த நிறுவனங்கள் தான் அதிகபட்சமான ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளன.

இவ்வளவு அதிக கட்டணம் விதிப்பது அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை கடினமாக்கும் என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

இது தொடர்பாக மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஐடி மேலாளர் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஹெச்-1பி விசாதாரர் சம்பளம் 40% குறைவாக இருக்கும், அதுவே இந்தியாவில் 80% குறைவாக உள்ளது. அதிகமான கட்டணத்தால் நிறுவனங்கள் இந்தியாவிலேயே வேலையை முடிக்க நிர்பந்திப்பார்கள். இதன்மூலம் ஹெச்-1பி விண்ணப்பங்கள் குறைந்து, உள்ளூர் வேலைவாய்ப்புகளும் குறைந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான திட்ட செலவுகள் அதிகரிக்கும், புதிய ஆய்வுகளும் குறையும்." என்றார்.

'அமெரிக்காவின் இழப்பு இந்தியாவின் லாபமாக மாறும்'

சண்டிகரைச் சேர்ந்த விசா நவ் சர்வீசஸின் நிர்வாக இயக்குநரான ருபிந்தர் சிங் பிபிசியிடம் பேசுகையில், "இந்த உத்தரவு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமானால் இந்தியப் பணியாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவுக்கான பாதை நிரந்தரமாக மூடப்படும். இது இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்க பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்." என்று தெரிவித்தார்.

ஆனால் நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் வேறு கருத்தை முன்வைக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பதிவில், "ஹெச்-1பி விசா கட்டணத்தை டிரம்ப் உயர்த்தியிருப்பது அமெரிக்க ஆய்வுகளைப் பாதித்து இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும். உலகளாவிய திறமைசாலிகளுக்கான கதவுகளை அடைப்பதன் மூலம் அமெரிக்கா, அடுத்தக்கட்ட ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதிய ஆய்வுகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை இந்திய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் குருகிராமை நோக்கி நகர்த்துகிறது."

"இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கும் வளர்ந்த இந்தியாவிற்கும் பங்களிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். அமெரிக்காவின் இழப்பு இந்தியாவின் லாபமாக மாறும்." எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஹெச்-1பி விசா, டிரம்ப் விசா உத்தரவு, அமெரிக்க விசா, ஹெச்-1பி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் இந்த உத்தரவு அமெரிக்க வல்லுநர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அதிகப்படியான கட்டணம் வெளிநாட்டு பணியாளர்களின் வரவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் நம்புகின்றனர்.

காடோ நிறுவனத்தில் இமிக்ரேஷன் ஸ்டடீஸின் இயக்குநரான டேவிட் ஜே பையர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவின் வரலாற்றிலேயே சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கு மிகவும் எதிர்ப்பானதாக உள்ள அரசு, நாட்டின் வளத்தையும் சுதந்திரத்தையும் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. இந்த நடவடிக்கை ஹெச்-1பி விசாக்களை ஒழித்துக் கட்டுவதோடு அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பணியாளர்களை வெளியே அனுப்பும். இது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று." எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த நகர்வு அமெரிக்கப் பணியாளர்களைத் தான் பாதிக்கும், ஏனென்றால் இது அவர்கள் ஊதியங்களைக் குறைத்து விலைவாசியை அதிகரிக்கும் என்கிறார் டேவிட்.

"புதிய உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் எவரும் 1 லட்சம் டாலர் செலுத்தாமல் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது," என கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டதாரியும் மான்ஹாட்டன் நிறுவனத்தின் வல்லுநருமான டேனியல் டி. மார்டினோ தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு ஹெச்-1பி திட்டத்தையே சிதைத்துவிடும் என எச்சரிக்கும் டேனியல், இது நீதிமன்றத்தால் தடுக்கப்படவில்லையென்றால் "சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும்." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நியூயார்கைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞரான சைரஸ் மெஹ்தா தனது எக்ஸ் பதிவில், "ஹெச்-1பி விசா வைத்துக் கொண்டு வேலை நிமித்தமாகவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ அமெரிக்காவுக்கு வெளியே சென்றவர்கள் செப்டம்பர் 21-ஆம் தேதி நள்ளிரவுக்குள் அமெரிக்காவுக்குள் வரவில்லையென்றால் சிக்கிக் கொள்வார்கள். இந்தியாவில் உள்ள பலரும் இந்த காலக்கெடுவைக் கடந்திருப்பார்கள், ஏனென்றால் நேரடி விமானத்தில் வந்தாலும் குறித்த நேரத்திற்குள் அவர்களால் அமெரிக்காவை வந்தடைய முடியாது." எனத் தெரிவித்தார்.

இவ்வாறு இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு அச்சங்கள் எழுப்பப்பட்டாலும் மேலதிக தகவல்கள் வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து சனிக்கிழமை இரவு பகிரப்பட்டது.

வெள்ளை மாளிகையில் ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லெவிட் தனது எக்ஸ் பதிவில் இந்த உத்தரவை விளக்கியுள்ளார்.

  • இது வருடாந்திர கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் போது செலுத்தும் ஒருமுறை கட்டணம் மட்டுமே.
  • ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்துக் கொண்டு தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வருகிற போது 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டியதில்லை. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல நாட்டைவிட்டு வெளியே சென்று திரும்பலாம். இது டிரம்பின் உத்தரவால் பாதிக்கப்படாது
  • இந்த விதி புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய விசாக்களின் புதுப்பித்தல்களையும் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களையும் இந்த உத்தரவு பாதிக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு