ரோஹித் ஷர்மா இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் - தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட இவர் யார்?

அபிமன்யு ஈஸ்வரன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

மூன்று வயது சிறுவனாகத் தனது பாட்டியின் மடியில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கும் போது, ஒருநாள் தானும் அது போல் மைதானத்தில் இறங்கி, பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதைப் பாட்டி டிவியில் பார்த்து கைதட்டுவார் என்று வாக்குறுதி அளித்திருந்தான் ஒரு சிறுவன்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக உத்தராகண்ட் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது தேர்வால் உத்தராகண்ட் விளையாட்டு பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

28 வயதான அபிமன்யு ஈஸ்வரன் ஒரு வலது கை பேட்ஸ்மேன். தேவைப்பட்டால் லெக் பிரேக் கூக்லியில் பந்து வீசவும் முடியும். எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

அபிமன்யுவின் வெற்றிக்குப் பின்னால், அவரது தந்தை ஆர்.பி.ஈஸ்வரனுக்கு முக்கிய பங்கு உண்டு. முதலில் பட்டயக் கணக்காளராக இருந்த ஈஸ்வரன், தனது மகனை கிரிக்கெட் வீரராக்குவதற்காகக் கணக்கியல் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பயிற்சி வழங்கத் தொடங்கினார்.

ஆர்.பி.ஈஸ்வரன் தமிழராக, சென்னைக்காரராக இருந்தாலும், அவரது தொழில் அவரை டேராடூனுக்கு அழைத்து வந்தது. அங்கு டேராடூனைச் சேர்ந்த பேலாவை மணந்தார்.

அபிமன்யு 6 செப்டம்பர் 1995 அன்று டேராடூனில் வட மற்றும் தென்னிந்தியாவின் கலப்புக் கலாசாரம் கொண்ட இந்து குடும்பத்தில் பிறந்தார்.

அபிமன்யு தனது பெற்றோரின் இரண்டு குழந்தைகளில் இளையவர். அபிமன்யுவின் மூத்த சகோதரி பெயர் பல்லவி. அபிமன்யுவின் தந்தை ஆர்.பி.ஈஸ்வரன் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை.

ஆனால் அவரது மகன் இந்தக் கனவை நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளார். இது அபிமன்யு பிறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

அந்த வாக்கு...

கிரிக்கெட் வீரராக முடியாது என்ற வேதனையில் ஆர்.பி.ஈஸ்வரன் 1988ஆம் ஆண்டு டேராடூனில் அபிமன்யு கிரிக்கெட் அகாடமியை நடத்தத் தொடங்கினார்.

கிரிக்கெட் அகாடமிக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டிய பிறகு, மகனுக்கும் அபிமன்யு என்று பெயர் வைத்த ஈஸ்வரன், “நான் தென்னிந்தியன், மனைவி வட இந்திய பெண்மணி, என் மகனின் பெயர் குறித்து எந்தச் சர்ச்சையும் வேண்டாமென்று, கிரிக்கெட் அகாடமியின் பெயரையே மகனுக்கும் சூட்டினோம்.” என்று கூறுகிறார்.

அபிமன்யுவைப் பற்றி அவரது தந்தை, "அபிமன்யு மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. காரணம், அந்தப் பிஞ்சுக் கைகளில் பென்சில் பிடிக்காமல், கிரிக்கெட் மட்டையைப் பிடிக்க வேண்டும் என்பது அவன் ஆசை. ஒரு நாள் அபிமன்யு அவன் பாட்டியின் மடியில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டே, 'பாட்டி, பாருங்க, ஒருநாள் இந்தியாவுக்கு விளையாடுவேன்.”என்றான்.

தந்தையுடன் அபிமன்யு

பட மூலாதாரம், ABHIMANYU

படக்குறிப்பு, தந்தையுடன் அபிமன்யு

அபிமன்யுவின் திறமையைக் கண்ட தந்தை, முதலில் தானே பயிற்சியாளராக இருந்து 2004 இல் கொல்கத்தாவில் உள்ள 13 வயதுக்குட்பட்டோருக்கான பன்காவில் உள்ள நிர்மல் சென் குப்தா பயிற்சியாளரிடம் சேர்க்க இடம் மாறினார். இப்படியாக, அபிமன்யு டேராடூனில் இருந்து வெளியேறி கொல்கத்தாவுடன் இணைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர், கவர் டிரைவ் மற்றும், அழகான ஷாட்களின் மாஸ்டர் என்றெல்லாம் அழைக்கப்படும் மூத்த வீரர் ராகுல் டிராவிட்டைத் தொலைக்காட்சியில் பார்த்து, அபிமன்யு தனது குழந்தை பருவத்தில் அவரையே தனது முன்னுதாரணமாகக் கொண்டதாக ஆர்.பி ஈஸ்வரன் கூறினார்.

நிஜ வாழ்க்கையில் ஒரு நாள் அதே ஆதர்ச நாயகனே தன் விதியை எழுதத் தனது பயிற்சியாளராகத் தன் முன் நிற்பார் என்று எப்படி நினைத்திருப்பான்.

டேராடூன் அபிமன்யு கிரிக்கெட் அகாடமி

அபிமன்யு தேர்வான செய்தி வெளியானதும், டேராடூன்-முசூரி இடையே உள்ள பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ள அபிமன்யு கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் இளம் வீரர்கள், அபிமன்யுவின் டெஸ்ட் போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்.

இந்த உற்சாகத்துடன், தற்போது அனைத்து வயது கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மைதானத்தில் பயிற்சி எடுக்கும் உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

மதியம் கடும் வெயிலில் பயிற்சிக்கு வந்த இந்தக் குழந்தைகளிடம் கேட்டபோது, தாங்களும் ஒரு நாள் இந்தியத் தொப்பியை அணிய வேண்டும் என்றும் அதற்காக அபிமன்யுவைப் போல கடுமையான பயிற்சி செய்து வருவதாகவும் நம்பிக்கையுடன் கூறினார்கள்.

கிரிக்கெட் வீரர் அபிமன்யுவின் பயிற்சியாளரும், டேராடூனில் உள்ள அபிமன்யு கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளருமான சுஷில் ஜாவலே, “அபிமன்யு சிறுவயதிலிருந்தே அபிமன்யு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்துள்ளார்.

அபிமன்யு டேராடூனுக்கு வரும்போதெல்லாம், அவரது விளையாட்டுத் திட்டம் தயாராக இருக்கும். தனது ஆட்டத்தை மேம்படுத்த அவர் தொடர்ந்து முயன்று வருகிறார். அதற்கேற்ப ஒரு திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம்.

அபிமன்யு மிகவும் கடின உழைப்பாளி. தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி அபிமன்யு பயிற்சி செய்கிறார்.” என்று கூறுகிறார்.

திறன் மற்றும் ஜிம் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு முழு நாள் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் அபிமன்யு மிகவும் நல்ல ஃபார்மில் ஓடுகிறார் என்று சுஷில் ஜாவலே கூறுகிறார். இந்திய அணியில் அபிமன்யு தேர்வு செய்யப்பட்டிருப்பது இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்கிறார்.

திட்டத்தின் படி பயிற்சி பெறும் அபிமன்யு

அபிமன்யு

பட மூலாதாரம், Getty Images

இது குறித்த தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் அபிமன்யுவின் உடற்பயிற்சியாளர் ரவிக்குமார், “அபிமன்யுவின் தேர்வால் கிரிக்கெட் அகாடமியில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. முதன்முறையாக எங்கள் அகாடமியில் இருந்து சீனியர் கிரிக்கெட்டில் ஒரு வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று கூறுகிறார்.

அபிமன்யு டேராடூன் வரும்போதெல்லாம் அவரது உடற்பயிற்சிக்கான முழுத் திட்டமும் தனது மேற்பார்வையில் நடப்பதாக ரவி குமார் கூறுகிறார்.

"அபிமன்யுவுக்கு எந்த உடற்பயிற்சி திட்டம் கொடுக்கப்பட்டாலும், அவர் அதை அனுபவித்துச் செய்கிறார், அதன் விளைவாக அவர் இன்று இந்த நிலையை எட்டியுள்ளார். " என்று அவர் கூறினார்.

அபிமன்யு மீண்டும் இங்கு வரும்போது, வீரர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கும் என்று ரவிக்குமார் கூறுகிறார்.

2011 இல் இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றபோது, அபிமன்யுவுக்கு 15 வயதுதான். முதல்தர கிரிக்கெட் மற்றும் இந்தியா 'ஏ' அணிக்காகத் தொடர்ந்து ரன்களை குவித்து வரும் இந்த வீரர், 64 முதல் தரப் போட்டிகளில் 13 சதங்கள், 18 அரைசதம் என 4,401 ரன்கள் குவித்துள்ளதால், தேர்வுக் குழுவின் பார்வையில் எப்போதும் இருக்கிறார்.

இருப்பினும், உலகின் மிகவும் பிரபலமன கிரிக்கெட் லீக் ஐபிஎல்லில் அபிமன்யு ஈஸ்வரனை எந்த அணியும் வாங்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது, இருப்பினும் இந்த வீரர் மனம் தளரவில்லை. தொடர்ந்து தனது செயல்திறனை மேம்படுத்தி வருகிறார்.

2013-14 ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் சுதீப் சாட்டர்ஜியுடன் 163 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்துகொண்டது அபிமன்யுவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அபிமன்யு ஈஸ்வரன் 2016-17 இன்டர்ஸ்டேட் டி20 போட்டியில் பெங்கால் டி20 அணியில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு, தியோதர் கோப்பையில் பங்கேற்கும் அணியில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, அவர் 2019-2020 சீசனுக்கான துலீப் கோப்பைக்கான சிவப்பு அணியில் சேர்க்கப்பட்டார். இந்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் கிரீன் அணிக்கு எதிராக 153 ரன்கள் குவித்தார்.

பெருமையடையும் சிறுவயது தோழர்கள்

டேராடூனில் வசிக்கும் அபிமன்யுவின் பால்ய நண்பன் சன்னி ராணா, இந்திய அணியில் அபிமன்யு தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறார். தானும் அபிமன்யுவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று அவர் கூறினார். அனைத்து நண்பர்களும் அபிமன்யுவைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

அபிமன்யு கண்டிப்பாக ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று நாங்கள் நம்பியிருந்தோம் என்று சன்னி கூறுகிறார். போட்டியின் போது அபிமன்யு கிரீஸில் இருக்கும் வரை, போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இர்க்கும் என்று சன்னி கூறுகிறார்.

போட்டியின் போது அபிமன்யுவின் சிந்தனை மிகவும் நேர்மறையாக இருப்பதாக சன்னி கூறுகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் தோற்க விடாது.

அபிமன்யுவின் உடல்வலு பற்றிக் கூறுகையில், கொல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின் போது, 46 டிகிரி வெப்பநிலையிலும் இருநூறு ரன்கள் எடுத்ததாக சன்னி தெரிவித்தார். இரண்டு ரன்னில் இருந்து இருநூறு ரன் வரை அபிமன்யுவின் ஸ்டாமினா ஒரே மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

அபிமன்யுவின் பால்ய தோழரான ஹனி, “அபிமன்யு சிறுவயதில் இருந்தே நன்றாக விளையாடுவார். அபிமன்யுவின் கிரிக்கெட் ஆர்வத்தில் இருந்து நாமும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அபிமன்யுவும் நானும் பள்ளிக்குப் பிறகு பல மணிநேரம் பயிற்சி செய்திருக்கிறோம்” என்கிறார்.

அபிமன்யுவின் ஆற்றல் நிலை குறித்து, ஹனி கூறுகையில், நாள் முழுவதும் விளையாடிய பிறகும், அபிமன்யு மூன்று மணி நேரப் பயிற்சியின் போது அதே ஆற்றலுடன் இருந்தார் என்று அவர் வியந்து கூறினார்.

அபிமன்யு

பட மூலாதாரம், RAVI KUMAR

“விளையாடுவதில் இருந்த மோகத்தால், அனைவரும் வீட்டிற்குச் சென்ற பிறகும், அபிமன்யு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

விளையாட்டின் போது, அபிமன்யு எங்களிடம் கற்றுக்கொண்டார், அத்துடன் எங்களுக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்தார்” என்று ஹனி கூறுகிறார்.

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஹனி, இந்திய அணியில் அபிமன்யுவின் தேர்வு உத்தரகாண்ட் வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறார்.

சக இளம் வீரர்களின் கருத்து

வேகப்பந்து வீச்சாளர் நிகில் கோஹ்லி கடந்த மூன்று ஆண்டுகளாக டேராடூனில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அபிமன்யுவைப் பற்றி அவர் கூறுகையில், அபிமன்யுவுடன் விளையாடும் போது அவருக்குப் பலமுறை பந்துவீசியுள்ளதாகவும் அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம் என்றும் கூறுகிறார்.

அபிமன்யுவுக்குப் பந்துவீசுவதில் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நிகில் கூறுகிறார். அபிமன்யு ஈஸ்வரன் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் நட்சத்திரமாக மாறித் தனது திறமையை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு அணியில் இடம்பிடித்துள்ளார். வங்கதேசத்தில் அபிமன்யுவிடம் இருந்து நல்ல ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள், இந்தத் தொடரில் அவர் ரோஹித் சர்மாவின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: