நாராயண் ஜெகதீசன்: தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதம் அடித்து உலக சாதனை படைத்த தமிழக வீரர்

நாராயண் ஜெகதீசன்

பட மூலாதாரம், Narayan Jegadeesan/Instagram

ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து சதங்களை அடித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நாராயண் ஜெகதீசன் சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழ்நாடும் அருணாச்சல பிரதேசமும் மோதியது. டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த ஜெகதீசன், இந்தப் போட்டியில் தனது ஐந்தாவது சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் ஜெகதீசன்.

அதுமட்டுமின்றி, அதிக ரன்களை லிஸ்ட் ஏ பிரிவில் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஆலிஸ்டர் பிரவுன் 2022ஆம் ஆண்டு 268 ரன்களை எடுத்து அதிக ரன்களை லிஸ்ட் ஏ பிரிவில் அடித்த வீரராக இருந்தார். இன்று 277 ரன்களை அடித்து நாராயண் ஜெகதீசன் அதை முறியடித்துள்ளார்.

இவருக்கு முன்பாக, லிஸ்ட் ஏ பிரிவில் மூன்று பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்துள்ளனர். தற்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் ஐந்து சதங்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார் நாராயண் ஜெகதீசன்.

யார் இந்த நாராயண் ஜெகதீசன்?

நாராயண் ஜெகதீசன் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். டிஎன்பிஎல் போட்டிகளின் மூலமாகப் பிரபலமடைந்தவர்.

குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில், மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியது. அந்தப் போட்டியில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தவர், 51 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தார்.

இந்த ஒரு போட்டி மட்டுமல்ல, அந்த சீசனில் திண்டுக்கல் அணி பல போட்டிகளில் வெற்றி பெற உதவினார்.

டிஎன்பில் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். பத்து இன்னிங்க்ஸ்களில் 448 ரன்கள் எடுத்து அசத்தினார். அதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற டிஎன்பில் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

நாராயண் ஜெகதீசன்

பட மூலாதாரம், Narayan Jegadeesan/Instagram

ஜெகதீசன் ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன். கடந்த 2016ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, மத்திய பிரதேச அணிக்கு எதிராக விளையாடியபோது தான், முதன்முதலாக அவருக்கு ரஞ்சி கோப்பையில் இடம் கிடைத்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில், ஏழாவது பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கிய ஜெகதீசன், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

அந்தப் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்க்ஸில் 555 ரன்கள் அடித்திருந்தது. அதில் இரண்டு சிக்சர்களும் அடக்கம். அந்த இரண்டுமே ஜெகதீசன் அடித்தது தான்.

204 பந்துகளைச் சந்தித்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 123 ரன்கள் எடுத்திருந்தார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவரே வென்றார்.

1995ஆம் ஆண்டு பிறந்த வலது கை விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனான நாராயண் ஜெகதீசனை 2018ஆம் ஆண்டு 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது சென்னை அணி.

நாராயண் ஜெகதீசன்

பட மூலாதாரம், Narayan Jegadeesan/Instagram

ஆனால், இரண்டு சீசன் காத்திருப்புக்குப் பின்னர் 2020ஆம் ஆண்டு தான் அணியில் இடம் கிடைத்தது.

அவருடைய தந்தை சி.ஜெ. நாராயணும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். மும்பை ஃபர்ஸ்ட் டிவிஷனில் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்காக விளையாடியுள்ளார்.

ஜெகதீசன் முதலில் வேகப்பந்து வீச்சாளராகத்தான் விரும்பினாராம். ஆனால், அவரது தந்தை மற்றும் பயிற்சியாளருடைய அறிவுறுத்தலின் பேரில், விக்கெட்-கீப்பராக செயல்படத் தொடங்கினார்.

கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமெர்ஸ் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், “ஆடம் கில்க்ரிஸ்ட், மகேந்திர சிங் தோனியை விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக பிடிக்கும்,” என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் ஆரம்பக்கட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், தான் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் என்பதை உணர்ந்திருப்பதாகவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: