ஃபிஃபா உலகக் கோப்பை 2022: கிரிக்கெட்டை நேசிக்கும் இந்தியாவில் அதிகரித்துவரும் கால்பந்து ஆர்வம்

பட மூலாதாரம், ARUN CHANDRA BOSE
- எழுதியவர், அஷ்ரஃப் பட்னா
- பதவி, பிபிசிக்காக
ஹாஷிர் அலி மற்றும் அவரது நண்பர்கள் 11 பேர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கத்தார் தலைநகரான தோஹாவுக்கு இந்த வாரம் செல்கிறார்கள்.
55 வயதான அலி ஒரு சிவில் இன்ஜினியர். அவர் ஒரு கால்பந்து ரசிகரும்கூட. அவரும் அவரது நண்பர்களும் தோஹா சென்று அங்கு பத்து நாட்கள் தங்கி போட்டிகளை நேரில் பார்க்க உள்ளனர்.
அலி ஆறு மாதங்களுக்கு முன்பே ஒரு நண்பர் மூலமாக உலகக் கோப்பை டிக்கெட்டுகளை வாங்கி, அன்றிலிருந்து இந்த 'பெரிய வாய்ப்பிற்காக' காத்திருக்கிறார்.
இந்த கால்பந்து திருவிழாவில் பங்குகொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்களில் இவரும் ஒருவர்.
கேரளாவைத் தவிர, மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவிலும், மகாராஷ்டிராவின் கோலாப்பூரிலும் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியா பங்கேற்காததற்கு என்ன காரணம்?
உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. இருப்பினும் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டான கால்பந்து விளையாட்டின் உலகத்தில் இந்தியாவுக்கு போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஃபிஃபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 106வது இடத்தில் உள்ளது.
1950ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றபோதிலும், இதுவரை உலகக் கோப்பை போட்டியில் அது விளையாடியதில்லை.
வழக்கமாக வெறுங்காலுடன் விளையாடும் இந்திய அணி, கால்பந்து காலணிகளை அணிய வேண்டிய நிர்பந்தமே, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்தியா பங்கேற்காததற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், ARUN CHANDRA BOSE
ஆனால் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள கால்பந்து பிரியர்கள், தங்களுக்குப் பிடித்த அணிகள் மீதான தங்களின் ஆர்வத்தையும் மரியாதையையும் காட்ட ஏதாவது செய்கிறார்கள்.
போட்டிக்குச் செல்வதற்காக மாதக்கணக்கில் பணத்தைச் சேமிக்கின்றனர். தங்களுக்குப் பிடித்த அணிகளின் ஜெர்சியை அணிந்துகொண்டு, ஜோடனை போட்டிகளில் விளையாடுகின்றனர். வெற்றியாளர் யார் என்று கணிக்கின்றனர். தங்களுக்குப் பிடித்த அணிகளின் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.
கேரளாவில் ரசிகர்கள் அதிகம் - ஏன்?
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் சமீபத்தில் கோழிக்கோட்டில் ஓர் ஆற்றின் கரையில் அவருடைய முப்பது அடி உயர கட்-அவுட்டை அமைத்தனர். அதன் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் நெய்மர் ரசிகர்களும் கட்-அவுட்களை அமைத்தனர்.
ஆற்றங்கரையில் உள்ள இந்த கண்ணைக் கவரும் கட்-அவுட்கள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. FIFA கூட அதைப் பற்றி ட்வீட் செய்தது.
கேரளாவில் வசிக்கும் பலருக்கு கத்தார் இரண்டாவது வீடாகவும் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வேலை செய்கிறார்கள் அல்லது தொழில் செய்கிறார்கள்.
இவர்களில் பலர் உலகக் கோப்பை போட்டிகளுக்காக மைதானங்கள் கட்டும் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
"எனக்குப்பிடித்த வீரர்கள் விளையாடுவதை நேரில் பார்க்க காத்திருக்கிறேன். என் கனவு நனவாகப்போகிறது,” என்று தனது பயணத்திற்கு தயாராகிவரும் அலி, பிபிசியிடம் தெரிவித்தார்.
அலி தனக்குத்தேவையான சாமான்களுடன் கூடவே கேரளாவின் பாரம்பரிய படகுப் போட்டியின் சின்ன வடிவங்களையும் எடுத்துச் செல்ல இருக்கிறார். அவற்றை தனக்குப் பிடித்த வீரர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்க விரும்புகிறார்.

பட மூலாதாரம், ARUN CHANDRA BOSE
கேரளாவில் உரு என்றும் அழைக்கப்படும் பாய்மரப் படகுகளின் வரலாறு, இந்தியாவின் பண்டைய கடல் வணிகத்துடன் இணைந்துள்ளது.
கோழிக்கோட்டின் பண்டைய துறைமுக நகரமான பேப்பூரில் உள்ள கைவினைஞர்கள் பல நூற்றாண்டுகளாக பாய்மரப்படகுகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் அவர்கள் உருவாக்கும் சொகுசு பாய்மரப்படகுகள் கத்தார் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அடையாளமாக பேப்பூரில் இருந்து பாரம்பரிய படகு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ஆயிரம் மினியேச்சர் படகுகள் கத்தாருக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி ஒரு உண்மையான படகும் கத்தாரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அலி, ஏற்பாட்டாளர்களுக்கும் நினைவுப்பரிசை எடுத்துச் செல்கிறார். உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் மலர்கள் பாய்மரத்தில் பொறிக்கப்பட்ட படகை அவர் கொண்டுசெல்கிறார்.
“நான் இதில் எட்டு மைதானங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகளையும் வரைந்துள்ளேன். இது தவிர மற்ற சின்னங்களும் இதில் இடம்பெற்றுள்ளன,”என்று இந்தக் கலைப் படைப்பை உருவாக்கிய கலைஞர் மேகனா உண்ணிகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தப் படகை உருவாக்க ஒரு மாதம் பிடித்ததாக அவர் மேலும் கூறினார். இது தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. மேகனாவைத் தவிர மேலும் மூன்று கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர்.
மரடோனாவுக்குப் பிறகு இப்போது லியோனல் மெஸ்ஸியின் ரசிகராக அலி இருக்கிறார். அவர் முதல் முறையாக போட்டிகளை நேரில் கண்டுமகிழ உள்ளார்.
“அல்லாவுக்கு நன்றி, இந்த முறை உலகக் கோப்பை போட்டி இங்கு (கத்தார்) நடைபெறுகிறது. மேலும் எட்டு மைதானங்களும் பத்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளன. அப்படி இல்லாமல் இருந்திருந்தால், உலகக் கோப்பை போட்டியை பார்க்க வேண்டும் என்று கனவில் கூட நினைத்திருக்க முடியாது," என்று அலி குறிப்பிட்டார்.
மேலும் சில நாட்கள் கத்தாரில் தங்கி மீதமுள்ள பந்தயங்களையும் பார்க்க தான் விரும்புவதாகவும், ஆனால் இதற்கு அதிக செலவாகும், தனது வேலையும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த வாரம் இங்கிலாந்து அணி கத்தார் சென்றடைந்தபோது, இந்திய ரசிகர்கள் மேளம் அடித்தும், கோஷங்கள் எழுப்பியும் அணியை வரவேற்றனர்.

பட மூலாதாரம், HASHIR ALI / GUDAM ART GALLERY
"ரத்தத்தில் கலந்துள்ள கால்பந்து விளையாட்டு"
கேரளாவில் உள்ள டிவி சேனல்கள், பிற நாட்டு அணிகளின் உள்ளூர் ரசிகர்களின் கொண்டாடங்களை ஒளிபரப்ப நேரம் ஒதுக்கியுள்ளன. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளின் கொடிகளை ஏந்தியும், ஜெர்சிகளை அணிந்தும் கொண்டாடுகின்றனர்.
"கால்பந்து எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது. ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் கொண்டாட்டமாக மாற்றுகிறோம். ஒரு குறிப்பிட்ட அணியை மட்டுமே ஆதரிப்போம் என்பது இல்லை,” என்று அலி தெரிவித்தார்.
அருகிலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் உலகக் கோப்பை ஜூரம் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. முக்கிய உள்ளூர் அணிகளுக்கு இடையே ஏழு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டன.
வீரர்கள் தங்களுக்குப் பிடித்த பிரான்ஸ், இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி மற்றும் போர்ச்சுகல் அணிகளின் ஜெர்சியை அணிந்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மலப்புரத்தை சேர்ந்த கால்பந்து வீரர் அப்துல் நாசரும் அடுத்த மாதம் தோஹா செல்ல தயாராகி வருகிறார்.
அவருடன், அவரது கிராமத்தைச் சேர்ந்த 25 கால்பந்து ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த அணிகளை உற்சாகப்படுத்த அங்கு செல்ல இருக்கிறார்கள். அங்கு வாசிப்பதற்கு மேளங்களையும், கைகளில் வைத்து அசைப்பதற்காக கொடிகளையும் அவர்கள் எடுத்துச்செல்ல இருக்கிறார்கள்.
"எங்களிடையே எல்லா முக்கிய அணிகளின் ரசிகர்களும் உள்ளனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் அர்ஜென்டினா மற்றும் பிரேசிலை விரும்புகிறார்கள்" என்று நாசர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













