மெஸ்ஸி - ரொனால்டோ இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பிருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
கால்பந்து என்றால் இந்தியாவில் அதிகமாகத் தெரியும் சர்வதேச நட்சத்திரங்கள் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியும். போர்ச்சுகலின் ரொனால்டோவும்தான்.
கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் இவர்கள் இருவரும் மோதுவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுவது இயல்பு.
உண்மையில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் கத்தார் உலகக் கோப்பை போட்டியில் 4 அணிகளைக் கொண்ட 8 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும்.
அதன் பிறகு காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளைக் கடந்த இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோத வேண்டும். ஆக, இறுதிப் போட்டியை எட்டுவதற்கு முதல் ஆறு போட்டிகளைக் கடந்தாக வேண்டும்.
முதல் சுற்றில் போர்ச்சுகல் அணி எச் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. உருகுவே, கானா, தென்கொரியா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிவு இது.
மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சி பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. சௌதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகிய அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.
மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் தருணத்தில் அந்த இருவரும் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வார்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
இதற்கு விவாதத்துக்கு விதைபோட்டது சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு கணிப்பு. வீடியோ கேம்களை உருவாக்கும் EA Sports நிறுவனம் வெளியிட்ட இந்தக் கணிப்பில் அர்ஜென்டினாவும் பிரேசிலும் இறுதிப் போட்டியில் மோதும் என்றும் அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்றும் கூறியிருந்தது.
அரையிறுதிப் போட்டியில் போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்னும் அவரை முறையே பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகளிடம் தோல்வியடையும் என்றும் இந்தக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.
2010, 2014, 2018 ஆகிய மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது கணிப்பு சரியாக இருந்ததாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இந்தக் கணிப்புகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் போர்ச்சுகல் நட்சத்திரம் ரொனால்டோ ஏற்கவில்லை. முதல் ஆறு போட்டிகளிலும் கடுமையாகப் போராடுவோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
மெஸ்ஸி பற்றிய கேள்விக்கு, “அவர் அற்புதமான ஆட்டக்காரர், அவர் ஒரு மாயாஜாலம்” என்று கூறியிருக்கிறார் ரொனால்டோ.
போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பையை வெல்லவில்லை. முதல் முறையாக அதைப் பெறுவதற்கு ரொனால்டோ முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதிருக்கும் அட்டவணைப்படி அர்ஜென்டினாவும் போர்ச்சுகலும் நேரடியாக மோத வேண்டுமெனில் இரு அணிகளும் குறைந்தபட்சம் அரையிறுதிப் போட்டிக்காவது தகுதி பெற வேண்டும். ஏனெனில் காலிறுதி வரை சி பிரிவு அணிகளும் எச் பிரிவு அணிகளும் மோதுவதற்கு வாய்ப்பில்லை.
அர்ஜென்டினா அணி இதுவரை இரு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. மூன்று முறை இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
பிரேசில் அணி இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது.
2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது, குரோஷிய அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினா, பிரேசில், போர்சுகல் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கத்தார் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் எவை?
- லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)
- அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)
- ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)
- கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)
- எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
உலக கோப்பை 2022 அட்டவணையில் உள்ள பிரிவுகள் என்னென்ன?
32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
- குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ்
- குழு C: அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
- குழு D: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா
- குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்
- குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா
- குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
- குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு
12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

பட மூலாதாரம், Getty Images
FIFA உலக கோப்பை போட்டி ஏன் குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது?
FIFA உலக கோப்பை போட்டிகள் வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் ஆண்டின் இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை சுமார் 41 °C மற்றும் 50 °C ஐ எட்டும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது.
அத்தகைய சூழ்நிலையில் 90 நிமிடங்கள் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏலத்தின் போது, கத்தார் மேம்பட்ட ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தது. இது மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் போன்ற இடங்களை 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் என்று கூறப்பட்டது.
இருப்பினும், 2015 இல், போட்டியை குளிர்காலத்தில் நடத்த ஃபிஃபா முடிவு செய்தது. உலகக் கோப்பை போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதாவது, பல நாடுகளின் கிளப் கால்பந்து சீசனின் நடுப்பகுதியில் இது வரும். இதன் காரணமாக அவர்கள் குறுக்கீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








