மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா?

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி...

அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார்.

ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தவர், இப்போது இனி தொடர்ந்து அர்ஜென்டினாவுக்காக மேலும் சில போட்டிகளில் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

“நான் இப்போது ஓய்வுபெறப் போவதில்லை. உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். சாம்பியனாக இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கப் போகிறேன்,” என்று உலக கோப்பையை வென்ற பிறகு தெரிவித்துள்ளார்.

ஊக்கமும் வேகமும் குறையாத மெஸ்ஸி

2006ஆம் ஆண்டில் நடந்தது தான் மெஸ்ஸியின் முதல் உலகக்கோப்பை. அதில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில், ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் அவர் களமிறக்கப்பட்டார்.

அந்த நேரத்தில், மாரடோனாவின் முகத்தில் ஒரு பெருமை தெரிந்தது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, சத்தமாகக் கொண்டாடி வரவேற்றார்.

அந்த நிமிடத்தில் அவருடைய முகத்தில், தன் மகனே களத்தில் இறங்கியதைப் போல் அவ்வளவு பெருமை. 74வது நிமிடத்தில் களமிறங்கிய மெஸ்ஸி, தனது முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே முதல் கோலை அடித்தார். கூடவே, கோல் வாய்ப்பு ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

மாரடோனா கடைசியாக 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது பார்வையாளராக மெஸ்ஸியின் ஆட்டத்தைப் பார்த்தார். அப்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா தோற்கடிக்கப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

அதைப் பார்த்தவரின் கண்களில் தெரிந்த கவலையை இன்றளவும் மறக்க முடியாது. ஒருவேளை நேற்றும் அதே இடத்தில் நின்று, மாரடோனா மெஸ்ஸியின் ஆட்டத்தை, அவரைத் தூக்கியதைப் போலவே கோப்பையோடு மெஸ்ஸியை ரசிகர்கள் சுமந்ததைப் பார்த்திருந்தால், என்ன சொல்லியிருப்பார், எப்படி உணர்ந்திருப்பார்!

2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா போட்டிகள் தொடங்கியபோது, செய்தியாளர்களிடையே பேசிய மெஸ்ஸி, “இது என்னுடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். என்னுடைய பெருங்கனவை அடைவதற்கான கடைசி வாய்ப்பு.

நான் உடல் மற்றும் மனதளவில் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். நாங்கள் மற்ற உலகக்கோப்பை போட்டிகளின்போது இருந்ததைவிட இப்போது சிறந்த ஃபார்மில் வந்துள்ளோமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

ஆனால், தேசிய அணி என்ற பதட்டமோ முடிவுகளைப் பற்றிய கவலையோ இல்லாமல், நன்கு விரும்பி ஆடுவதற்கு கோபா அமெரிக்க கோப்பை வழிவகுத்துள்ளது,” என்று பேசினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010 உலகக்கோப்பக போட்டியின்போது மெஸ்ஸியும் மாரடோனாவும்

அதைத் தொடர்ந்து விளையாடிய முதல் போட்டியிலேயே சௌதி அரேபியாவிடம் தோல்வி.

அதைத் தவிர்த்து, அடுத்தடுத்து வந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி விடாது அவர்களைப் பின் தொடர்ந்தது. மெஸ்ஸி இந்தத் தொடரில் மட்டும் ஏழு கோல்களை அடித்துள்ளார். அதில், இறுதிப்போட்டியில் மட்டுமே இரண்டு கோல்கள்.

இதற்காக, அவர் கிட்டத்தட்ட மூன்று முறை தோல்வியை நெருங்கி மீண்டு வர வேண்டியிருந்தது. 80வது நிமிடத்தில் தொடங்கிய பிரான்ஸ் அணிக்கான எம்பாப்பேவின் இடி போன்ற கோல்களைத் தொடர்ந்து மீண்டும் அவர் கூடுதல் நேரத்தின்போது அணியை முன்னிலைக்குக் கொண்டு வந்து ஊக்கப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் எம்பாப்பே மற்றுமொரு கோல் அடித்து சமன் செய்தார். ஆனால், இறுதி வரை அவருடைய தாக்குதல் ஆட்டமும் குறையவில்லை, அணிக்கு அவரளித்த ஊக்கமும் குறையவில்லை.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

மெஸ்ஸியின் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த உலகக்கோப்பை

இப்படி மூன்று முறை தோல்வியின் விளிம்புக்குச் சென்று, மீண்ட பிறகே இந்த வெற்றியை அவரால் சுவைக்க முடிந்தது. மெஸ்ஸி செய்த சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.

அணியாக செய்த சாதனைகள்

  • 8 முறை ஸ்பானிய கால்பந்து கோப்பையான பிச்சிச்சி கோப்பையை வென்றுள்ளார்
  • நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் வென்றுள்ளார்
  • 10 முறை ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகா கோப்பையை வென்றுள்ளார்.
  • ஏழு முறை கோபா டெல் ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
  • ஐரோப்பிய சூப்பர் கோப்பையை மூன்று முறை வென்றுள்ளார்
  • ஸ்பானிய சூப்பர் கோப்பையை 8 முறை வென்றுள்ளார்
  • கோபா அமெரிக்கா கோப்பையை ஒருமுறை வென்றுள்ளார்
  • பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார்
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

தனிப்பட்ட சாதனைகள்

  • ஏழு முறை பெருமைமிக்க பேலோன் டோர் விருதை வென்றுள்ளார்
  • ஸ்பானிய கால்பந்து லீக் போட்டியான லா லிகாவில் 7 முறை சிறந்த வீரராகியுள்ளார்.
  • லா லிகாவில் ஏழு முறை சிறந்த ஃபார்வார்ட் ஆட்டக்காரராகியுள்ளார்
  • 2005ஆம் ஆண்டில் கோல்டன் பாய் விருது வென்றுள்ளார்
  • ஆறு முறை ஐரோப்பிய கோல்டன் ஷூ வென்றுள்ளார்
  • 2009ஆம் ஆண்டில் ஃபிஃபா வழங்கும் உலகளாவிய சிறந்த வீரர் பட்டம் வென்றார்
  • நான்கு முறை உலகக் கோப்பையில் கோல்டன் பால் வென்றுள்ளார்
  • நான்கு முறை ஓன்ஸே டோர் விருதை வென்றுள்ளார்

இப்படி, அவருடைய வெற்றிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் இப்போது உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பும் சேர்ந்துள்ளது. அது ஒன்றுதான் அவருடைய கால்பந்து வாழ்க்கையில் கிடைக்காமல் இருந்தது. அதையும் சாதித்துவிட்டார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

மெஸ்ஸியை மக்கள் உணர்ந்த தருணம்

இவையனைத்தும் தொடங்கியது, மெஸ்ஸியின் 13வது வயதில். அர்ஜென்டினா உலகக்கோப்பையை கடைசியாக வென்ற 1986ஆம் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில் பிறந்த அந்த இளம் வீரன், பார்சிலோனாவுக்காக விளையாட ஸ்பெயினுக்கு சென்றார்.

ஒரு சராசரி இரும்புத் தொழிற்சாலை ஊழியரின் மகனாக இருந்த ஒரு சிறுவன், உலகம் போற்றும் கால்பந்து நாயகனாக மாறிய பாதை அங்குதான் தொடங்கியது.

அவருடைய குடும்பத்தினர் அப்போதுதான் பார்சிலோனாவுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். அவர் 14 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கான பிரிவில் பார்சிலோனா அணிக்காக விளையாடத் தொடங்கியிருந்தார். அந்த அணியின் ஜூனியர் அணியில் அவர் 14 போட்டிகளில் 21 கோல்களை அடித்தார். அதைத் தொடர்ந்து 16 வயதில் அடுத்தகட்ட அணிக்கு முன்னேறினார்.

2005ஆம் ஆண்டில் 17 வயதிலேயே, பார்சிலோனா அணிக்கான அதிகாரபூர்வ ப்ளேயராக, கோல் ஸ்கோரராக ஸ்பானிய லா லிகா போட்டிகளில் அறியப்பட்டார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

வெறும் 5 அடி 7 அங்குலம், 67 கிலோவே இருந்த அந்த இளைஞர், அவ்வளவு வலிமையானவராக, வேகமானவராக, களத்தில் தடுக்கக் கடினமானவராக இருந்தது, உலகளாவிய அணிகளின் கவனத்தை ஈர்த்தது.

மெஸ்ஸி இடது கால் ஆட்டக்காரர். அவரால், திறன்மிக்க பாஸ்களை வேகமாகச் செய்ய முடிந்தது. எதிரணி விரர்களுக்கு நடுவே மிகவும் வேகமாக பந்தை திரெடிங் செய்து, எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல முடிந்தது. அதை எதிரணிகளின் தடுப்பாட்ட வியூகத்தை உடைக்க பார்சிலோனா பயன்படுத்திக் கொண்டது.

2005ஆம் ஆண்டில் அவருக்கு ஸ்பானிய குடியுரிமை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே பார்சிலோனா அணி ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றது. அடுத்தடுத்து அவருடைய ஆட்டம் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது.

பழைய மெஸ்ஸி இன்னும் மாறவில்லை

2007ஆம் ஆண்டில், கோபா டெல் ரே போட்டியில் பார்சிலோனாவும் ஜெடாஃபீயும் மோதின. அந்த ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், தனது 19 வயதில் மெஸ்ஸி அடித்த கோல் அவரைப் பற்றி கால்பந்து ரசிகர்களுக்கு உணர்த்தியது. மைதானத்தின் நடுவில் அவருடைய கால்களுக்குக் கிடைத்த பந்தை, இடது காலில் டிரிப்பிள் செய்துகொண்டே, எதிரணியின் ஆறு வீரர்களைக் கடந்து சென்று கோல் அடித்தார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக லீக் 1 போட்டியில் மெஸ்ஸி ஆடியபோது...

1986 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிராக மாரடோனா அடித்த பிரபலமான கோலை அவர் அதன் மூலம் ரசிகர்களுக்கு நினைவுபடுத்தினார்.

2006ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை பார்சிலோனா வென்ற பிறகு, அடுத்த இரண்டே ஆண்டுகளில் மெஸ்ஸி உலகளவில் மிகவும் பேசப்படக்கூடிய, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கால்பந்து வீரராக வளர்ந்தார். அவருக்கும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையே யார் முதலிடம் பிடிப்பது என்ற போட்டி இருந்துகொண்டேயிருந்தது.

நெதர்லாந்துடனான போட்டியில், டச்சு வீரரான வௌட் வேகோர்ஸ்ட்டை பெனால்டி ஷூட் அவுட்டின்போது மெஸ்ஸி போபோ எனத் திட்டினார். ‘போபோ’ என்றால் முட்டாள் என்று அர்த்தம். வேகோர்ஸ்டும் நெதர்லாந்தின் பயிற்சியாளரும் அவர்களை மரியாதையாக நடத்தவில்லை என்று மெஸ்ஸி குற்றம் சாட்டினார்.

“விளையாட்டு என்பது எதிரணியைச் சீண்டிவிடுவதோ, தவறாகப் பேசுவதோ இல்லை. அவர் அதைச் செய்துகொண்டிருந்தார். நான் அனைவரையும் மதித்து நடந்துகொள்வேன். அப்படித்தான் என்னிடமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்,” என்று அதுகுறித்து தெரிவித்தார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம், Getty Images

அது அர்ஜென்டினாவில் குழந்தைகளிடையே பயன்படுத்தக்கூடிய வார்த்தை. அநேகமாக அவர் பார்சிலோனாவுக்கு வரும் முன்பாக, தனது 12 வயதில் பயன்படுத்தியிருக்கலாம்.

அந்த மெஸ்ஸியை இப்போது நாம் மீண்டும் பார்க்கிறோம். குணத்தில் மட்டுமில்லை, ஆட்டத்திலும் அதே பதின்பருவ மெஸ்ஸி தான் ஆடியிருப்பதைப் போல் இந்தத் தொடர் இருந்தது.

அவருடைய கையில் தங்கக் கோப்பை இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது முதல் அவருடைய கனவாக இருந்த கோப்பை அவர் கைகளில் இருந்தது.

அவருடைய ஆதரவாளர்கள், அவரே சிறந்த கால்பந்து வீரர் என்ற வாக்குவாதத்தில் முதல் வாதமாக வைக்கப்போவது இனி இந்தக் கோப்பையைத்தான். அதற்கு எதிர்வாதம் வைப்பது, எதிரில் இருப்போருக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஒப்பீடுகள் காலத்திற்கு ஏற்ப மாறலாம். ஆனால், பிலி, மாரடோனா போன்றோரின் வரிசையில் மெஸ்ஸியும் இப்போது இணைந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இறுதிப்போட்டியில் அவர் இரண்டு கோல்களை அடித்தார். கிலியன் எம்பாப்பே, மூன்று கோல்களை அடித்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் செய்துவிடாத ஒரு சாதனை அது.

அதுபோக, இருமுறை கூடுதல் நேரம், பெனால்டி ஷூட் அவுட் என்று பலவற்றையும் தாண்டி, மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகே அவரால் அந்தக் கோப்பையின் உச்சியில் தன் உதடுகளால் முத்திரை பதிக்க முடிந்தது.

அங்கு அவர் வாழ்வில் தவறிக் கொண்டேயிருந்த பரிசை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: