அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையே நடந்த நம்பமுடியாத உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய அனைத்து விவாதங்களும் லியோனெல் மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பேவுக்கு இடையிலான போட்டியாக இருக்குமென்றே கூறப்பட்டது. அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும், நேற்றைய போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா அணியிலிருந்த மற்றொருவரின் பெயரும் பேசுபொருளானது.
120 நிமிடங்களில், 3-3 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. அதைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றியடைந்தது.
திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமிகுதி ஆகியவை நிரம்பிய இந்தப் போட்டியில், அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ். அவருக்கு 'கோல்டன் கிளவுஸ்' விருது கிடைத்துள்ளது.
அர்ஜென்டினாவின் வீரர்கள் தங்கள் நான்கு முயற்சிகளையும் நிதானமாக கோலாக்கினார்கள். அவர்கள் தங்களுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், மார்ட்டிஎன்ஸ் பிரெஞ்சு ரசிகர்களின் இதயங்களை உடைத்துவிட்டார்.
அவ்வளவுக்கும் அதை அவர் கூலாக செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது. இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டின்போது, அவர்மீது தான் அதிக அழுத்தம் இருந்தது. சொல்லப் போனால், அவர் கைகளில் தான் அர்ஜென்டினாவுக்கு வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கும் தருணமே இருந்தது.
ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிரணி வீரர்கள் ஒவ்வொரு முறை பெனால்டி ஷாட் அடிக்க வந்தபோதும் அவர் ஆடிய ஆட்டம் பிரான்ஸை அச்சுறுத்தியது. எம்பாப்பே போட்டியின் நடுவிலேயே மார்ட்டினெஸுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்திருந்தார். ஆகவே கடைசியிலும் ஷூட் அவுட்டை தொடக்கி வைத்த எம்பாப்பே, அதை கோலாக்கியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
வெற்றிக் கனியை நெருங்க உதவிய மார்ட்டினெஸ்
அந்த கோலையும் கூட கைக்கு எட்டும் தூரத்தில், மார்ட்டினெஸின் தடுப்பு முயற்சியின்போது அவர் கைகளில் பட்டு உள்ளே சென்றது. அவர் எடுத்த அந்த முயற்சியே பிரான்ஸ் அணியினரைக் கலங்க வைத்திருக்க வேண்டும். எம்பாப்பே கோல் அடித்திருந்தாலும், அதைத் தடுக்க அவர் எடுத்த முயற்சியிலேயே போட்டியின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிங்ஸ்லி கோமன், ஷாட் அடிக்க வந்தபோது, அவருடைய அமைதியை மார்ட்டினெஸின் கூலான ஆட்டமும் அமைதியான அணுகுமுறையும் குலைத்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆரேலியன் சூயிமென்னி, அடுத்ததாக அவருடைய கோல் வாய்ப்பை எடுக்கச் சென்றபோது, அதையும் தவிடுபொடியாக்கினார் அர்ஜென்டினாவின் அந்த உயரமான கோல் கீப்பர். இந்த இடத்தில், மார்ட்டினெஸின் உடல் அமைப்பும் அவருக்கு நன்றாகவே உதவியது. அவரால் கோல் போஸ்டுக்குள் நன்கு இடதும் புறமும் வேகமாக நகர்ந்து, பெரிதாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் செயல்பட முடிந்தது.
மார்ட்டினெஸ் பெனால்டி ஷூட் அவுட் கோல்களை தடுக்கும்போது, ஒரு நடனம் ஆடுவார். அந்த நடனம் ரசிகர்களுக்கு வெற்றிக் களிப்பைக் கொடுக்கும் அதேநேரத்தில், எதிரணிக்கு கலக்கத்தையும் கொடுக்கக்கூடியது. ஏனெனில், அந்த நடனத்தில், “யாராக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன்” என்ற நம்பிக்கை பிரதிபலிக்கும்.
கோமன், சூயிமென்னி ஆகியோரின் கோல்களை அவர் தடுத்தது, அதுவரை சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு போல் இருந்த அர்ஜென்டினாவின் வெற்றியை, உண்மையாகவே மிக அருகில் கொண்டு சென்றது.
அவர்களைத் தொடர்ந்து கோலோ முவானி அடுத்த பெனால்டியை கோல் அடித்திருந்தாலும்கூட, அதற்கு அடுத்ததாக அர்ஜென்டினா தரப்பில் கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டி கோலின் மூலம் அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அரவணைத்த மெஸ்ஸி
இங்கிலாந்தின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜெர்மைன் ஜெனாஸ், “பிரான்ஸ் ஷூட் அவுட்டில் ஷாட் அடிக்க முயன்ற போதெல்லாம், அவர்களுடைய முயற்சியின்மீது மார்ட்டினெஸ் உளரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
“எமிலியானோ மார்ட்டினெஸ், மிகவும் நேர்மறையான நபர். அவர் தமது அணியிடம் சில பெனால்டிகளை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்” என்று கூறினார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி.
இந்த இடத்தில் நெதர்லாந்துக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டை குறிப்பிட வேண்டியது அவசியம். அன்றிரவு, காலிறுதிப் போட்டியில் ஷூட் அவுட் வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லௌடாரோ மார்ட்டினெஸ் கடைசியாக வெற்றிக்கான கோலை அடித்தார்.
அப்போது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக லௌடாரோவை நோக்கி ஓடினார்கள். ஆனால், மெஸ்ஸி மட்டும் வலது பக்கமாக, கோல் போஸ்டை நோக்கி ஓடினார். அங்கு, லுசைல் மைதானத்தின் ஒரு முனையில், டை-பிரேக்கரில் நெதர்லாந்தின் இரண்டு கோல்களை, இடதும் வலதுமாகப் பறந்து பறந்து தடுத்த கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அங்கு தரையில் கிடந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மெஸ்ஸி ஓடிச் சென்று அவரைத் தூக்கி அரவணைத்து, தனது பாராட்டுகளையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய பெயர் அன்றே எதிரணிகளின் காதுகளுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இது மெஸ்ஸியின் கனவு. மார்ட்டினெஸின் கனவு. மார்ட்டினெஸை பொறுத்தவரை, இறுதிப்போட்டிக்கான இந்த ஓட்டம் மிகவும் எதார்த்தமானது.
ரஷ்யாவில் நடந்த கடைசி தொடரில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாக் அவுட் செய்து வெளியேற்றியது. அப்போதே மார்ட்டினெஸ் தனது சகோதரரிடம் 2022 உலகக் கோப்பையில் நான் இதற்கு பதிலடி கொடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்.
நேற்று 'கோல்டன் கிளவுஸ்' விருது பெற்றவுடன் அதை வைத்து எமிலியானோ மார்ட்டினெஸ் காட்டிய சைகையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அது மரியாதைக்குறைவான செயல் என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
யார் இந்த எமிலியானோ மார்ட்டினெஸ்
2010ஆம் ஆண்டில், மார்ர்டினெஸுக்கு ஆர்சனலில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு இருந்தது. அப்போது தொடங்கி அவருடைய வாழ்வில் பல தடைகளைத் தகர்த்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எமிலியானோ மார்ட்டினெஸ், ஜூன் 2021இல் தான் முதன்முதலாக அர்ஜென்டினாவுக்காக விளையாடினார். முந்தைய இரண்டு சீசன்களில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா ஆகிய கிளப்புகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினாவின் வெற்றியில் அவருக்குப் பெரும் பங்குண்டு.
2020ஆம் ஆண்டில், எமிரேட்ஸின் எஃப்.ஏ கோப்பையை ஆர்சனல் அணி வென்றபோது, அவர் கோல் கீப்பராக அணிக்கு அளித்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.
17 வயது இளைஞராக கிளப்பில் சேர்ந்து, அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
2021-22 சீசன் தொடங்கவிருந்த நேரத்தில் அவர் ஆஸ்டன் வில்லா அணிக்குச் சென்றார். அங்கு அவர் தனது இடத்திற்காக யாருடனும் சண்டையிடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வகைகளில் தனது திறமையைக் காட்டியவர், அங்கு மிக முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
ஷூட் அவுட்களில் அவர் மிகவும் திறமையாக இருக்க ஒரு காரணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் தொடர்ந்து பெனால்டி ஷாட் அடிக்க வைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பல ஷாட்களை எதிர்கொள்வார்.
மேலும் 2021 கோபா அமெரிக்கா அவரை ஒரு ஹீரோவாக மாற்றியது. கொலம்பியாவுக்கு எதிரான அரையிறுதி ஷூட் அவுட்டில் மூன்று முறை கோல் முயற்சியைத் தடுத்து, அணியைக் காப்பாற்றினார். அவருடைய நுணுக்கங்கள் இந்த முறையும் அர்ஜென்டினா அணிக்குப் பேருதவி புரிந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













