1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் - வியப்பூட்டும் வரலாறு

விம்கோ ஃபுட்பால் கிளப்

இந்தியாவில் 1950 மற்றும் 60களில் மிகவும் பிரபலமான அணியாக இருந்தது விம்கோ கால்பந்து கிளப் அணி. யாராலும் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்த இந்த அணி அந்த காலகட்டத்தில் தொடர்ந்து சாம்பியன்ஷிப்களை வென்றது. ஆனால், அந்த அணியை உருவாக்கிய தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டதும் அந்த கிளப்பும் மூடப்பட்டு விட்டது.

“விம்கோ அணியில் நான் சேர்ந்த போது அவர்கள் வெல்லாத அணியே கிடையாது. அவர்கள் பெறாத கோப்பைகளே இல்லை. எல்லா தொடரிலும் முன்னணி அணியாக இருந்தனர். நான் பார்க்கும் போது கிட்டத்தட்ட நூறு கோப்பைகள் அவர்களிடம் இருந்தன. துரதிருஷ்டவசமாக அதையெல்லாம் புகைப்படம் எடுக்கவில்லையே என்று இப்போது நான் வருந்துகிறேன்” என்கிறார் தற்போது கோவையில் வசித்து வரும் விம்கோ கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம்ஸ்.

இந்திய அணிக்கான மிகவும் திறமை வாய்ந்த பல வீரர்களை விம்கோ அணி உருவாக்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த பல வீரர்கள் விம்கோ அணியைச் சேர்ந்தவர்கள்.

முன்னாள் கேப்டன் வில்லியம்ஸ்
படக்குறிப்பு, முன்னாள் கேப்டன் வில்லியம்ஸ்

“விம்கோ என்பது ஸ்வீடன் நாட்டு நிறுவனம். வெறும் நிறுவனமாக மட்டுமல்லாமல் விளையாட்டு உட்பட தங்கள் பகுதியைச் சுற்றியிருந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு அந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. இது, 1920 முதல் 90 காலகட்டம் வரை பல வீரர்களை உருவாக்கிய நிறுவனம்.

1948ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா பங்குபெற இருந்தது. அதற்கான கால்பந்து அணியில் விம்கோ வீரர்கள் பலர் இருந்தனர். ஆனால், அந்தத் தொடரில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

பின்னர் 1950இல் மணிலாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் விம்கோ அணியைச் சேர்ந்த பலர் இடம்பெற்றிருந்தனர். பல புகழ் பெற்ற வீரர்கள் தங்களுக்கு விம்கோ அணியில் விளையாட இடம் கிடைக்குமா என்று ஏங்கியிருக்கிறார்கள்” என்கிறார் விம்கோ அணியைச் சேர்ந்தவரும் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனுமான செழியன்.

ஒரு காலத்தில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த விம்கோ அணி தற்போது புத்துயிர் பெற்று இளம் வீரர்களுடன் மீண்டும் தயாராகிவருகிறது. முன்னாள் விம்கோ வீரர்கள் அதற்கான பணியை செய்து வருகின்றனர்.

“இது ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கிளப். இன்றைக்கு இந்த கிளப் இல்லை. இதை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மற்றும் விம்கோ நகர் வாழ் மக்களின் முயற்சியால் இந்த கிளப்பிற்கு புத்துயிர் கொடுத்துள்ளோம்” என்கிறார் புதிய விம்கோ அணியின் பயிற்சியாளரான செல்வம்.

பயிற்சியாளர் செல்வம்

புதிய விம்கோ அணி தேசிய அளவில் நடைபெற்ற சில போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது அவர்கள் பயிற்சி எடுக்க போதுமான மைதான வசதி இல்லை.

அதே போல, வெளி இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்குச் செல்வதற்கான நிதி வசதியும் தங்களிடம் இல்லை என்கிறார்கள் அந்த அணியினர்.

“கோவா, டெல்லி என இரண்டு இடங்களில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் நாங்கள் வென்றுள்ளோம். அண்டை நாடுகள் நேபாளம், பூடான், சிங்கப்பூரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. நாங்கள் அங்கு செல்ல வேண்டுமென்றால் இதை விட பெரிய மைதானத்தில் பயிற்சி செய்ய வேண்டும். இந்தச் சுருங்கிய இடத்திற்குள் ஓரளவிற்குத்தான் பயிற்சி செய்ய முடியும். பயிற்சி செய்வதற்கான பெரிய இடமும் பிற நாடுகளுக்குச் செல்வதற்கான நிதியும் இருந்தால் நிச்சயம் நாங்கள் கலந்துகொண்டு வெற்றிபெறுவோம்” என்கிறார் பயிற்சியாளர் செல்வம்.

“கால்பந்து போட்டிகளில் இந்தியாவை அடுத்த பிரேசிலாக மாற்ற வேண்டும். ஒரு காலத்தில் கால்பந்து என்றால் விம்கோ என்ற நிலை இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. அதை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறோம். அது நிச்சயம் ஒருநாள் நடக்கும். விளையாட்டில் எங்களுடைய பசங்களும் விம்கோ அணியும் சாதிப்பார்கள். கடைசி ஒரு வீரர் இருந்தாலும் அவர் இந்த அணியை வழிநடத்தி முன்னுக்கு எடுத்துவருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே உள்ளது” என்றும் பயிற்சியாளர் செல்வம் கூறுகிறார்.

போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் இன்றைய இளைய சமுதாயத்தின் கவனத்தை திசைதிருப்பவே விம்கோ அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் செழியன்.

“விம்கோ அணியை திடீரென மூடிய ஆதங்கம் அந்த அணியால் மூன்று தலைமுறைகளாகப் பயன்பெற்ற எங்களுக்குள் நீண்ட காலமாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் சினிமா மோகம் மற்றும் போதைக்கு அடிமையாகிறார்கள்.

அவர்களை நாம் சிறிதாவது திசை திருப்ப வேண்டுமென்றால் அதற்கு விளையாட்டு ஒன்றுதான் தீர்வு. அதனால் விம்கோ அணியை மீண்டும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்கிறார் செழியன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: