மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்

பட மூலாதாரம், Getty Images
கத்தார் உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் வெளியேறிவிட்ட நிலையில், தனது வாழ்நாள் கனவின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.
கத்தார் உலகக் கோப்பை போட்டி அவருக்குக் கசப்பாகத் தொடங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிவரை அர்ஜென்டினாவைக் கொண்டுவருவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
பெனால்ட்டி கோல்கள் முதல் பல அற்புதமான பாஸ்கள் வரையிலும் மெஸ்ஸியின் கால்வண்ணம் இல்லாத போட்டிகளே இல்லை என்று சொல்லலாம். பெரும்பாலான போட்டிகளில் அவர் அதிகமான தரப் புள்ளிகளைப் பெற்ற வீரராகவும் இருந்திருக்கிறார்.
கத்தாரில் அர்ஜென்டினா ஆடிய ஆறு போட்டிகளில் அவர் நிகழ்த்திய 5 மாயாஜாலங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
ஆல்வரேஸுக்கு அற்புத பாஸ்
குரோஷியாவுடனான அரையிறுதிப் போட்டியில் 40வது நிமிடத்திலேயே 2 கோல்களை அடித்து ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது.
எனினும் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் அற்புதமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.

பட மூலாதாரம், Getty Images
குரோஷியாவுடனான அரையிறுதிப் போட்டியில் 40வது நிமிடத்திலேயே 2 கோல்களை அடித்து ஏறக்குறைய தன்னுடைய வெற்றியை அர்ஜென்டினா உறுதி செய்திருந்தது.
எனினும் அர்ஜென்டினாவின் மூன்றாவது கோல் அற்புதமானது. மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றால், அவருடைய இடது காலின் மேஜிக்குக்கு நடுவில், பந்தை மீண்டும் திரும்பப் பெறுவது எளிதான காரியமல்ல எனச் சொல்லப்படுவதுண்டு.
அந்த மேஜிக்கை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் கால்பந்து மைதானத்தில் ஒவ்வொரு போட்டியிலும் காத்துக் கிடப்பார்கள். இதிலும், அவர்களுடைய எதிர்பார்ப்பை மூன்றாவது கோலின்போது பூர்த்தி செய்தார் மெஸ்ஸி.
குரோஷியாவின் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான யோஷ்கோ கவார்டியோலின் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி, மெஸ்ஸி பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சென்றார். தனது 20 வயதில், துள்ளிக் குதித்து, முழு ஆற்றலுடன் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கவார்டியலோலிடம், 35 வயதான மெஸ்ஸி பந்தை நழுவவிட்டு விடுவாரா என்ற அச்சமும் எழாமல் இல்லை.
ஆனால், 35 வயது ஆனாலும் தான் இன்னமும் அதே மெஸ்ஸி தான் என்பதை அந்தத் தருணத்தில் அவர் ரசிகர்களுக்குக் காட்டினார்.
த்ரோ மூலமாகக் கிடைத்த பந்தை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கொண்டு சென்று, கோல் லைன் பகுதியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் பந்தை ஆல்வாரெஸிடம் கொண்டு சேர்த்தார். அதன் மூலம் 69வது நிமிடத்தில் விழுந்தது அந்த அற்புதமான கோல்

பட மூலாதாரம், Getty Images
முகத்தை திருப்பாமல் கடத்திய தருணம்
நெதர்லாந்துடனான காலிறுதிப் போட்டியில் மெஸ்ஸியால் ஆட்ட நேரத்தில் கள கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பெனால்ட்டியில் ஒரு கோலும், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒன்றும்தான் அவரால் அடிக்க முடிந்தது. ஆனாலும் அவர்தான் அர்ஜென்டினா வீரர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற வீரர்.
அதற்கும் காரணம் உண்டு. போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அற்புதமாக பந்தைக் கடத்தி மொலினா கோல் அடிக்க உதவினார். பந்தை முன்புறமாக கோலை நோக்கி கடத்திக் கொண்டு வந்து பின்னர் முகத்தைத் திருப்பாமலேயே வலது புறமாக சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த மொலினாவை நோக்கி பந்தைத் தட்டி விட்டார்.
அது நெதர்லாந்து வீரர்கள் பலரைக் கடந்து சரியாக மொலினாவைச் சென்றடைந்தது. இதனை அற்புதமான பாஸ் என்று சமூக வலைத்தளங்களில் கால்பந்து நிபுணர்கள் பாராட்டினார்கள்.

பட மூலாதாரம், Getty Images
எதிரணியை வியக்க வைத்த தருணம்
‘அவர் வியக்கத்தக்கவர், தலைசிறந்த ஆட்டக்காரர்’ என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியைப் புகழ்ந்தவர் அவரது ரசிகரோ, அவரது அணி வீரரோ அல்ல. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதித் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் அர்னால்ட்.
“அவர் தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதில் எங்களது வீரர்கள் சிறப்பாகச் செல்பட்டார்கள். ஆனால் முடியவில்லை. அவர் அற்புதமானவர் ” என்று கூறினார் கிரஹாம்.
பந்தைக் காலால் கடத்தியபடி மெஸ்ஸி தொலைக்காட்சித் திரைகளில் தோன்றும்போது அவரை ‘மந்திரக்காரர்’ என்று வர்ணணையாளர்கள் கூறுவதைக் கேட்க முடிந்தது.
“ஒரு அங்குல இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாகப் பந்தைக் கோலுக்குள் கொண்டு செல்லும் திறன் படைத்தவர் மெஸ்ஸி” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்று கூறியது.
“நான் மாரடோனா ஆடியபோது அவருக்கு எதிராக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். இப்போது மெஸ்ஸி ஆடும் அணிக்கு எதிராக பயிற்சியளிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இருவரும் அற்புதமான ஆட்டக்காரர்கள். அவர்களைப் பெற்றதற்காக அர்ஜென்டினா பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார் கிரஹாம் அர்னால்ட்.
இந்தப் போட்டியின் 35-ஆவது நிமிடத்தில் ப்ரீகிக் மூலம் கிடைத்த பந்து ஆஸ்திரேலிய கோலுக்கு அருகே சென்று மீண்டும் மெஸ்ஸியிடமே திரும்பி வந்தது. அதை லாவகமாக பெனால்ட்டி பாக்ஸுக்குள் கடத்திச் சென்ற மெஸ்ஸி, பல ஆஸ்திரேலிய வீரர்கள் சூழ்ந்து நிற்கும்போதே கோலுக்குள் அடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தரையோடு தரையாக அடித்த கோல்
மெக்சிகோ அணியுடனான லீக் போட்டியின் முதல் பாதி வரை மெஸ்ஸி எங்கே என்று கேட்கும் அளவுக்குத்தான் அவரிடம் பந்து இருந்தது. ஆனால் பிற்பகுதியில் உண்மையிலேயே வாழ்வா சாவா என்ற கட்டத்தை அர்ஜென்டினா அணி எட்டிவிட்டது.
முதல் பாதியில் பல முறை அர்ஜென்டினாவின் கோலுக்கு அருகே மெக்சிகோ வீரர்கள் பந்தைக் கடத்திக் கொண்டு சென்றார்கள். அப்போதெல்லாம் அரங்கில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் பதற்றத்தில் தவித்ததை அவர்கள் எழுப்பிய சத்தத்திலேயே உணர முடிந்தது.
அதுவும் 45-ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அடித்த ஒரு ப்ரீ கிக் நேராக கோலை நோக்கிச் சென்றபோது பலருக்கு இதயமே நின்று போயிருக்கக்கூடும். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் அதை துல்லியமாகக் கைகளால் பிடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார்.

பட மூலாதாரம், Getty Images
64-ஆவது நிமிடத்தில் டி மரியா கடத்தித் தந்த பந்தை சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்து தரையை ஒட்டி, பல மெக்சிகோ வீரர்களின் கால்களை ஒட்டியபடி பந்தை கோலுக்குள் அடித்தார் மெஸ்ஸி.
அது கோல் அடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லாத ஒரு தருணம் என்றுதான் கருதப்பட்டது. பல மெக்சிகோ வீரர்கள் சுற்றியிருந்தார்கள். கோலுக்கான தூரமும் அதிகமாக இருந்தது. ஆனால் மரியா கொடுத்த பந்தை அமைதியாக வாங்கிய மெஸ்ஸி, 4 மெக்சிகோ வீரர்களை போக்குக் காட்டி கோல் கீப்பருக்கு இடது புறமாக தரையோடு தரையாக பந்தை அடித்துக் கோலாக்கினார்.
அந்த நேரத்திலேயே ட்விட்டரில் அந்த கோலைப் பற்றிய விவாதம் ட்ரெண்டானது. பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அடித்த கோலைப் போல மெஸ்ஸியின் கோலையும் வியந்து பேசினர்.
மெஸ்ஸி கோல் அடித்ததும் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்த அரங்கில் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடினர். களத்துக்குள்ளும் அரங்கிலும் எழுந்த ஆராவாரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆகின.

பட மூலாதாரம், Getty Images
மின்னல் வேக பெனால்ட்டி கிக்
கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி நான்கு முறை பெனால்ட்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். அதில் போலாந்து அணியுடனான போட்டியில் அவருக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது.
37-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் கோல் அடிக்க முயன்றபோது போலாந்து கோல் கீப்பரின் கை மெஸ்ஸியின் தலையில் பட்டதால் காணொளி நடுவரின் ஆய்வுக்குப் பிறகு அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது.
பெனால்ட்டியை கோலாக்குவதில் வல்லவரான மெஸ்ஸியே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். வலுவாகவும் துல்லியமாகவும் மெஸ்ஸி பந்தை அடித்தார். ஆனால் போலாந்து கோல்கீப்பர் செசஸ்னி அதைப் பாய்ந்து சென்று ஒரு கையால் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
சமூக வலைத்தளங்களில் மெஸ்ஸியை கேலி செய்யும் பெஸ்ஸி என்று ஒரு ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. மெஸ்ஸியின் தவறு பற்றி ஏராளமானோர் விமர்சித்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான பெயரை அவர் பெற்றார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி அடித்த பெனால்ட்டியை அந்நாட்டு கோல்கீப்பர் ஹேல்டோர்சன் கோல் ஆகாமல் தடுத்துவிட்டார்.
இத்தகைய மோசமான அனுபவத்தைப் பெற்ற மெஸ்ஸி அதன் பிறகு இரண்டு பெனால்ட்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றினார். அதிலும் குரோஷியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் அடித்த அதிவேக பெனால்ட்டி மிகவும் அபாயகரமானது என்று கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள். சற்று தவறினாலும் கோல்வலைக்கு மேலே பந்து பறந்து சென்றுவிடும் வாய்ப்பு உண்டு. கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டி ஒன்றில் அவர் இப்படியொரு அதிவேக உதையால் பெனால்ட்டியை தவறவிட்ட தருணம் உண்டு.
ஆனால் குரோஷியாவுடனான போட்டியில் அதே வேகத்தில் கோல்கீப்பரின் இடதுபுறமாக கோல்வலையின் மேற்பகுதியில் துல்லியமாக அடித்தார் மெஸ்ஸி. கோல்கீப்பரால் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












