சந்திரயான்-3: நிலவில் பகல் முடியும் நேரம் - விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இனி என்ன ஆகும்?

நிலவில் இருந்து மீண்டும் சமிக்ஞைகள் வருமா?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் படம் பிடித்து அனுப்பியிருந்தது.
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்

நிலவில் சூரிய ஒளி படும் பகல் நேரம் முடிவடைகிறது. இரவு நேரம் தொடங்கப் போகிறது. இந்த அடிப்படையில் பார்க்கையில், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ குறிப்பிட்டுள்ளபடி, செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் சூரிய உதயத்திற்குப் பிறகு விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டையும் உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்த முயற்சிக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை. அவை இரண்டில் இருந்தும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே, அவை இரண்டும் விழித்து, மீண்டும் செயல்படும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை எழுப்புவதற்கான எதிர்கால முயற்சிகள் எப்படி இருக்கும் என்பதை இஸ்ரோ இன்னும் தெளிவுபடுத்தவில்லை. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாண்டிவிட்டதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளது.

நிலவில் ஒரு பகல் மற்றும் இரவு நேரம் என்பது பூமியில் 14 நாட்களுக்கும் மேல் நீடிக்கும்.

விக்ரம் என்ற லேண்டர், பிரக்யான் ரோவரை சுமந்து கொண்டு, ஆகஸ்ட் மாதம் சந்திரனின் தென் துருவத்தின் அருகே தரையிறங்கியது. அந்த இரண்டு சாதனங்களும் இரண்டு வாரங்கள் வரை பல்வேறு தரவுகளைச் சேகரித்தன. அதன் பிறகு நிலவின் தென்துருவத்தில் இரவு நேரம் வந்ததால் அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

நிலவில் இருந்து மீண்டும் சமிக்ஞைகள் வருமா?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, நிலவில் ரோவர் பயணித்த பாதை குறித்த வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செப்டம்பர் 22 ஆம் தேதி அங்கே சூரியன் உதயமாகும் போது பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படும் என்றும், அந்த சாதனங்கள் விழிப்படைந்து மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் நம்புவதாக கூறியது.

வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரோ தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில், "விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் தொடரும்," என்று பதிவிட்டுள்ளது. அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

திங்கட்கிழமை காலை, முன்னாள் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் பிபிசியிடம் பேசியபோது, "லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மீண்டும் செயல்படுவது குறித்த நம்பிக்கை ஒவ்வொரு மணிநேரமும் குறைந்து வருகின்றன" என்று கூறினார்.

"லேண்டர் மற்றும் ரோவரில் பல சிறிய கருவிகள் உள்ளன. அவை நிலவின் உறையவைக்கும் குளிரைத் தாங்கி மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார். நிலவின் தென் துருவத்தில் இரவு நேர வெப்பநிலை -200C முதல் -250C வரை (-328F முதல் -418F வரை) குறைகிறது.

"லேண்டரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் (சமிக்ஞைகளை அனுப்பும் கருவி) மீண்டும் செயல்படாத வரை, நமக்கு அங்கிருந்து எந்தத் தகவலும் கிடைக்காது. பிற அனைத்து கருவிகளும் சரியாகச் செயல்பட்டாலும், டிரான்ஸ்மிட்டர் இயங்கவில்லை என்றால் நமக்கு எந்தத் தகவலும் கிடைக்காது," என்று அவர் மேலும் கூறினார்.

லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தொடர்வதாக இஸ்ரோ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

நிலவில் இருந்து மீண்டும் சமிக்ஞைகள் வருமா?

பட மூலாதாரம், NASA & ISRO

படக்குறிப்பு, சந்திரயான் - 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜுலை 14 அன்று விண்ணுக்கு அனுப்பியது.

சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது சந்திரயான் -3 திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பெற்றது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனாவிற்குப் பிறகு, நிலவில் ஒரு விண்கலத்தை மென்மையாகத் தரையிறக்கும் சக்திவாய்ந்த நாடுகளின் அங்கமாக மாறியது.

லேண்டர் மற்றும் ரோவரை நிலவில் தரையிறக்கும் செயலை மிகவும் கவனமாக இஸ்ரோ மேற்கொண்டதால் தான் அவை ஒரு பகல் பொழுது தொடங்கும் போது தரையிறக்கப்பட்டதுடன் தொடர்ந்து செயல்பட 2 வாரங்களுக்கான சூரிய ஒளியைப் பெறமுடிந்தது.

அவற்றின் இயக்கங்கள், அவை கண்டுபிடித்த விஷயங்கள் மற்றும் ரோவர் எடுத்த படங்கள் குறித்து இஸ்ரோ வழக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

அந்த சாதனங்களை இஸ்ரோ உறக்க நிலையில் வைக்கும் போது, ​​அவற்றிற்கு அளிக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முழுமையாக நிறைவேற்றியதாகவும், நிலவில் மீண்டும் பகல் பொழுது தொடங்கும் போது அவை மீண்டும் செயல்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது.

சீனாவின் Chang'e 4 லேண்டர் மற்றும் Yutu2 ரோவர் ஆகியவை சூரிய உதயத்துக்குப் பின் பல முறை மீண்டும் செயல்பட்டதை விஞ்ஞானிகள் உதாரணமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் இஸ்ரோ தனது எதிர்பார்ப்புகளைத் தணிக்க முயன்றது என்றே தொடக்கத்தில் இருந்து அனைவரும் அறியும் செய்தியாக இருக்கிறது. "விக்ரம் மற்றும் பிரக்யான் ஆகியவை மீண்டும் செயல்படாவிட்டால், அவை இரண்டும் நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் தூதுவர்களாக எப்போதும் நிலைத்திருக்கும்," என்று இஸ்ரோ கூறியதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: