உ.பியில் இளமையான தோற்றத்தால் சிக்கிய போலி ஐஏஎஸ் அதிகாரி – என்ன நடந்தது?

பட மூலாதாரம், LucknowPolice
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த புதன்கிழமை இரவு 10:30 மணியளவில், லக்னோவின் வஜீர்கஞ்ச் காவல் நிலைய பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த காவல் நிலைய அதிகாரி (எஸ்.எச்.ஓ) ராகேஷ் திரிபாதி, ஒரு போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடிப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை.
அது ஒரு வழக்கமான சோதனை. ராகேஷ் திரிபாதி ஒரு ஃபார்ச்சூனர் காரை நிறுத்தியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் தனது விசிட்டிங் கார்டை நீட்டினார்.
அதில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப இயக்குநர் என்று எழுதப்பட்டிருந்தது.
"நான் காரை நிறுத்தியபோது, பின்னால் அமர்ந்திருந்தவர் மிரட்டும் தொனியில், 'நீங்கள் யாருடைய காரை நிறுத்தினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டு, உடனடியாக ஒரு விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். அதில் அசோக சக்கரம் இருந்தது'' என்கிறார் ராகேஷ் திரிபாதி.
ஆனால் காவல்துறை விசாரணையில், விசிட்டிங் கார்டு மட்டுமன்றி, அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் சவுரப் திரிபாதி என்ற நபரை போலீசார் கைது செய்து அவருடன் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர். சவுரப் திரிபாதி தற்போது சிறையில் உள்ளார்.

பட மூலாதாரம், Lucknow Police
பல விலையுயர்ந்த வாகனங்கள் மீட்கப்பட்டன
லக்னோவின் உதவி காவல் ஆணையர் (குற்றம்) கமலேஷ் குமார் தீட்சித் பிபிசியிடம் கூறுகையில், "ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்து பல ஆண்டுகளாக தலைமைச் செயலகங்கள் மற்றும் பிற அலுவலகங்களுக்குச் சென்று வந்த சவுரப் திரிபாதி என்ற சந்தேகத்திற்கிடமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
"இந்த நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் அரசாங்கத்துடன் பணிபுரிந்தார். அரசாங்க டொமைன் டாட் என்.ஐ.சியின் மின்னஞ்சல் ஐடியும் அவரிடம் இருந்தது. அதை அவர் தவறாகப் பயன்படுத்தினார் என்பது இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று அவர் கூறினார்.
இந்த இளைஞரின் முகவரியில் இருந்து டிஃபெண்டர், ஃபார்ச்சூனர், மெர்சிடிஸ் மற்றும் இன்னோவா போன்ற ஆறு விலையுயர்ந்த வாகனங்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இருப்பினும், மீட்கப்பட்ட வாகனங்களின் உண்மையான உரிமையாளர் சவுரப் திரிபாதியா அல்லது வேறு யாராவதா என்பதை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
"மீட்கப்பட்ட வாகனங்கள் வெவ்வேறு உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சவுரப் திரிபாதிக்கு இவை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றார் விசாரணை அதிகாரி ராகேஷ் திரிபாதி.
போலி முத்திரைகள், ஆவணங்கள், பல துறைகளின் லெட்டர்ஹெட்கள் மற்றும் செயலகங்களின் போலி நுழைவுச் சீட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி, உயர் பாதுகாப்பு பகுதிகளுக்கு செல்வதற்கான பாதுகாப்பு நுழைவுச் சீட்டுகளையும் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிரட்டும் தொனியில் பேசிய போலி அதிகாரி

பட மூலாதாரம், @KamleshDixitIps
சவுரப் திரிபாதியை கைது செய்த போலீஸ் அதிகாரி ராகேஷ் திரிபாதி, காரை நிறுத்தியபோது, அவர் மிக தைரியமாகவும் அச்சுறுத்தும் தொனியிலும் பேசினார் என்கிறார்.
சவுரப் திரிபாதியின் தனிப்பட்ட செயலாளராக பணிபுரிந்த மற்றொரு நபரையும் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சவுரப் திரிபாதி பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்குவது வழக்கம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"அவர் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் இணை செயலாளர் நிலை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்." என்றார் ராகேஷ் திரிபாதி.
"நான் விசிட்டிங் கார்டை எடுத்து அதில் கொடுக்கப்பட்ட விவரங்களை இணையத்தில் சரிபார்த்தேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னபோது, அவர் கோபமடைந்து பல உயர் அதிகாரிகளின் பெயர்களை சொல்லி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தினார்." என்று நடந்தவற்றை ராகேஷ் திரிபாதி விளக்குகிறார்.
போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவருடன் வந்த ஓட்டுநருக்கு அவர் ஒரு 'செல்வாக்கு மிக்க மனிதர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி' என்பது மட்டுமே தெரியும்.
"சவுரப் திரிபாதி தனது அடையாளத்தை அவருடன் இருக்கும் நபர்களிடம் இருந்து கூட மறைத்துள்ளார். இதுவரை நடந்த விசாரணையில் அவர் பிஹார், உ.பி., உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவரது நெட்வொர்க்கில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார் உதவி காவல் ஆணையர் கமலேஷ் தீட்சித்.
அரசாங்க மின்னஞ்சல்

பட மூலாதாரம், Lucknow Police
வெள்ளிக்கிழமை, அவரது 'ஓ.எஸ்.டி'யாக (சிறப்பு அலுவலர்) பணிபுரிந்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்தனர்.
அவர் டாட் நிக் டொமைனில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பி, சவுரப் திரிபாதியை ஒரு உயர் அதிகாரி என்று கூறி, அவரது வருகையின் போது பல்வேறு மாவட்டங்களில் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கான பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, சவுரப் திரிபாதி எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் செல்லும்போது, அவர் ஃபார்சூனர் மற்றும் இன்னோவா போன்ற வாகனங்களைப் பயன்படுத்தினார், மேலும் அவர் எந்தவொரு தொழிலதிபரையும் சந்திக்கும்போது, அவர் மெர்சிடிஸ் காரைப் பயன்படுத்தினார்.
"சவுரப் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அவர் மிரட்டும் தொனியிலேயே பேசினார். ஆனால் அவரது உண்மை அம்பலப்படுத்தப்பட்டதை உணர்ந்தபோது, தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார்." என்கிறார் ராகேஷ் திரிபாதி.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான சவுரப் திரிபாதி குறித்த கூடுதல் தகவல்களை சேகரிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் அவர் தவறான முகவரியைக் கொடுத்துள்ளார்.
"அவர் தன்னை ஒரு இணை செயலாளர் நிலை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார், ஆனால் அவர் அந்த பொறுப்புக்கு மிகவும் இளையவராகத் தோன்றினார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, மேலும் விசாரித்தபோது முழு உண்மையும் வெளிவந்தது." என்கிறார் ராகேஷ் திரிபாதி.
சவுரப் திரிபாதி தன்னுடன் போலீஸ் சீருடையில் தனிப்பட்ட பாதுகாவலர்களையும் வைத்திருப்பார். தற்போது அவருக்கு இந்த சீருடை எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்படி ஏமாற்றினார்கள்?

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் கூற்றுப்படி, சவுரப் திரிபாதி உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேறும்போதெல்லாம், அவர் தன்னை அந்த மாநில கேடரின் உயர் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
"சவுரப் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர் எத்தனை பேரை ஏமாற்றினார் என்பது இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றும் விசாரணை அதிகாரி ராகேஷ் திரிபாதி கூறினார்.
சவுரப் திரிபாதியின் சமூக ஊடக கணக்குகளையும் போலீசார் தேடியுள்ளனர்.
"அவர் உயர் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் மத குருக்களுடன் எடுக்கப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவார். இதனால் அவர் ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்று மக்கள் நினைப்பார்கள். சவுரப் திரிபாதி விலையுயர்ந்த வீடுகளையும் வாடகைக்கு எடுத்திருந்தார், இதனால் அவரைச் சந்திக்க வரும் மக்கள் அவரது கதையை உண்மை என்று நம்புவார்கள்.''

சவுரப் திரிபாதி கணினிகளில் கை தேர்ந்தவர், தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர் என்று உதவி காவல் ஆணையர் கமலேஷ் கூறுகிறார்.
உயர் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல.
சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பல போலி நாடுகளின் தூதரகங்களை திறந்த ஹர்ஷவர்தன் ஜெயினை போலீசார் கைது செய்தனர். விலையுயர்ந்த கார்கள் மற்றும் பல முன்னணி உலகத் தலைவர்களுடன் போலி புகைப்படங்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம், ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சாலையில் சோதனை நடத்தியபோது, போலீஸ் சீருடை அணிந்து, ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு வந்த சுப்ரியோ பானர்ஜியை போலீசார் கைது செய்தனர். அவரது காரிலும் நீல விளக்கு எரிந்தது.
கடந்த மாதம், போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெய் பிரகாஷ் பதக் குருகிராமில் கைது செய்யப்பட்டார். அவரும் தன்னை உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டார்.
ஜெய் பிரகாஷ் பதக் முன்பு இதேபோன்ற குற்றச்சாட்டுகளில் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் மாதத்திலேயே ஒடிசா மாநிலம் அங்குல் போலீசார் தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிய பிராஞ்சி நாயக்கை கைது செய்தனர். நாயக் வேலை வாங்கித் தருகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












