IND vs ENG: இந்தியா சாதனை வெற்றி பெற்றபோது, சர்ஃபராஸ்கான் பற்றி கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்ன? ஜடேஜா என்ன செய்தார்?

பட மூலாதாரம், Getty Images
ராஜ்கோட் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது, கேப்டன் ரோகித் சர்மா சர்ஃபராஸ் அகமதுவை கட்டிப்பிடிக்க, ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா பந்தை முத்தமிட்டார்.
அதே பந்தில், தனது சுழற்பந்து வீச்சால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 33 ரன்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிய நேரத்தில், அவர் அணிக்காக களத்தில் நிலைத்து ஆடினார்.
கேப்டன் ரோகித் சர்மாவுடன் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அவர் நான்காவது டெஸ்ட் சதத்தையும் அடித்தார்.
இந்தியாவின் முதல் இன்னிங்சில் 112 ரன்கள் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை பாதி ஆட்டக்காரர்களை பெவிலியன் திருப்பி அனுப்பிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா தொடர்ந்து நான்கு நாட்கள் வலுவான நிலையில் இருந்தது. இதில், 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐந்து டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை.
இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவைத் தவிர குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பட மூலாதாரம், Getty Images
நான்காவது நாளில் நடந்தது என்ன?
முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களையும், இங்கிலாந்து 319 ரன்களையும் எடுத்தன. 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட் நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்திருந்தது.
இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாச, ஷுப்மான் கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
தனது வாழ்க்கையில் முதல் சர்வதேச டெஸ்டை விளையாடிய சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியால் எந்த நிலையிலும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போட்டி கொடுக்க முடியவில்லை.
இங்கிலாந்துக்கு முன்னால் மிகப்பெரிய இலக்கு இருந்தபோதிலும், ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்ததால், இந்தப் போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்க்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது.
இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்களையும், பென் ஃபோக்ஸ் மற்றும் டொம் ஹார்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களையும், ஜேக் கிராலி 11 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை சுருட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்ட நாயகன் ஜடேஜா என்ன சொன்னார்?
போட்டி முடிந்ததும், அவரது பேட்டிங் குறித்து ஜடேஜாவிடம் கேட்டபோது, "நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். நான் ரோஹித்துடன் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தேன். நான் எனது திறமையை நம்பி ஷாட்களை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியிருந்தது." என்றார்.
ஆடுகளம் குறித்து ஜடேஜா கூறுகையில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் போது ரன்களை எடுப்பது எளிது. படிப்படியாக அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும்" என்றார்.
"ரோகித் டாஸ் வென்றபோது, நாங்கள் என்ன விரும்பினோமோ அதனைப் பெற்றோம். இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியாது, இதற்காக நீங்கள் களத்தில் அதிகம் உழைக்க வேண்டும். பந்தை நீங்கள் சரியாக பிட்ச் செய்ய வேண்டும், நீங்கள் கடினமாக உழைத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்." என்று ஜடேஜா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சர்ஃபராஸுக்கு முன் ஜடேஜா ஏன் அனுப்பப்பட்டார்?
இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி டாஸ் வென்றது. ஆனால் அதன் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 33 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்படிப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தார்.
பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருந்த சர்பராஸ் கானுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்திற்கு அனுப்பப்பட்டார்.
இதற்குப் பின்னால் உள்ள காரணம் நிச்சயமாக அவரது அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது மற்றும் சர்ஃபராஸ் தனது முதல் போட்டியிலேயே இதுபோன்ற அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ரஜத் படிதார் தனது அறிமுகப் போட்டியில் பூஜ்ஜியத்திற்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தார்.
போட்டி முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஜடேஜாவுக்கு அனுபவம் அதிகம், அதிக ரன்கள் எடுத்தது, லெப்ட்-ரைட் கூட்டணி வேண்டும் என்பதால் அவரை முதலில் அனுப்பினோம். சர்ஃபராஸ் இந்த போட்டியில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார்.
எதிர்காலத்திலும் இது இப்படியே தொடருமா? இது குறித்து ரோகித் கூறுகையில், "இது நீண்ட காலத்துக்கானது அல்ல. தேவைக்கு ஏற்ப, அன்றைய தினம், அணி மற்றும் பந்துவீச்சை பார்த்து, மதிப்பீடு செய்து முடிவெடுப்போம்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
முத்திரை பதித்த ஜெய்ஸ்வால்
இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, அவர் சில சாதனைகளை செய்தார். இது மிகவும் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்காக தனது முதல் டெஸ்டில் விளையாடிய யஷஸ்வியின் பேட் தொடர்ந்து களத்தில் ரன்களை குவித்து வருகிறது.
யஷஸ்வி இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் 71.75 சராசரியில் 861 ரன்கள் எடுத்துள்ளார்.
சதத்துடன் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்தியாவின் மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த இன்னிங்ஸில் யஷஸ்வி 12 சிக்சர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் எந்த இன்னிங்ஸிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை இதுவாகும்.
யஷஸ்வியின் மூன்று சதங்களும் 150க்கும் அதிகமான ஸ்கோராகும். முதல் டெஸ்டில் 171 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 209 ரன்களும், ஏழாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 214 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சாதனை படைத்த ஜெய்ஸ்வால் என்ன சொன்னார்?
போட்டிக்கு பிறகு பேசிய அவர், "முதல் இன்னிங்சில் ரோகித் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. மேலும் அனைத்து சீனியர்களும் என்னிடம் கூறியது போல், நீங்கள் செட் ஆனவுடன், பெரிய ஸ்கோரை அடிக்க முயல வேண்டும்" என்றார்.
"எனவே நான் ஆடுகளத்தில் இறங்கும் போதெல்லாம், நான் பெரிய இன்னிங்ஸ் விளையாட முயற்சிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் ஒருமுறை செட்டில் ஆனவுடன் என்னால் முடிந்தவரை விளையாட முயற்சிக்கிறேன்."
தொடக்கத்தில், யஷஸ்வி அதிக பந்துகளில் விளையாடி குறைவான ரன்களையே எடுத்திருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஆரம்பத்தில் ரன்களை எடுப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு செஷன் மற்றும் பந்துவீச்சாளர் மீது கவனம் செலுத்தினேன். ஆடுகளத்தில் நன்றாக செட்டில் ஆனதும் பந்துகளை எங்கே அடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வைத்திருந்தேன்." என்றார்.
சதம் அடித்ததும் காயத்தால் களத்தில் இருந்து வெளியேறியது குறித்து, அவர் கூறுகையில், "சிறிது நேரம் பேட்டிங் செய்த பிறகு, என் முதுகு சரியில்லை. நான் வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் என் முதுகில் இருந்த பிரச்னை மிகவும் பெரியது. நான் செல்ல வேண்டியிருந்தது. " என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சர்ஃபராஸ் குறித்து கேப்டன் ரோகித் கூறியது என்ன?
போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “சர்ஃபராஸ் பேட்டிங் செய்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் அவர் அற்புதமாக செயல்பட்டார் என்று அனைத்து மும்பை வீரர்களும் கூறினார்கள். அவர் பெரிய ரன்கள் எடுத்தார்." என்றார்.
"அவர் 300 ரன்கள், இரட்டை சதம் அடித்துள்ளார். அடிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உள்ளது. நான்கைந்து வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகிறார். அறிமுக வீரர்கள் பதற்றமாக இருப்பது வழக்கம். ஆனால் சர்ஃபராஸ் கான் பதற்றமாக இருந்ததாக நான் உணரவில்லை. அவர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். பார்க்க நன்றாக இருந்தது." என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்து ரோகித் என்ன சொன்னார்?
போட்டி முடிந்ததும், இந்திய வீரர் ரோகித்திடம் இந்த ஆட்டம் குறித்து கேட்டபோது, "டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்து நாட்கள் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இங்கிலாந்து சிறப்பாக விளையாடியதால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. எங்களது பந்துவீச்சு வலுவாக உள்ளது. மறுநாள் நாங்கள் திரும்பி வந்த விதம் ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்." என்றார்.
போட்டியின் திருப்புமுனைகள் குறித்து பேசிய ரோஹித், "பல திருப்பு முனைகள் இருந்தன. டாஸ் வெல்வது நல்லது, ஏனென்றால் அதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். பந்துவீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்தனர். ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் ஆகிய இரண்டு இளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்றி, எங்கள் வேலை பாதி முடிந்தது. அந்த முன்னிலையை எங்களுக்குக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குத் தேவை. நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்." என்று கூறினார்.
ஜெய்ஸ்வால் குறித்து கேப்டன் ரோகித் கூறுகையில், "நான் அவருடன் இங்கும், விசாகப்பட்டினத்திலும் நிறைய பேசியுள்ளேன். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அவர் தனது கேரியரை சிறப்பாக தொடங்கினார், அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிகிறார்” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தொடரை வெல்ல விரும்புகிறேன்: பென் ஸ்டோக்ஸ்
இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என பின்தங்கியிருந்தாலும், தனது அணி வலுவாக மீண்டு வந்து தொடரை வெல்ல விரும்புவதாக அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகிறார்.
தொடரில் 1-2 என பின்தங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். இன்னிங்ஸ் முழுவதும் நாங்கள் அப்படித்தான் விளையாட விரும்பினோம். இந்தியாவின் ஸ்கோரை நெருங்க விரும்பினோம். சில நேரங்களில் எங்கள் திட்டம் வேலை செய்கிறது. எப்போது அது நடக்காது." என்றார்.
தனது அணி இங்கிருந்து மீண்டு வர விரும்புவதாகவும், இந்தத் தொடரை வெல்ல விரும்புவதாகவும் ஸ்டோக்ஸ் கூறினார்.
"தற்போது தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளோம், மீண்டும் மீண்டும் தொடரை வெல்ல எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், அதையே செய்ய விரும்புகிறோம்" என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி
- இந்த டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
- முன்னதாக, 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக (372 ரன்கள் வித்தியாசத்தில்) ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
- ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வியாகும். தவிர, டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் எட்டாவது பெரிய வெற்றி இதுவாகும்.
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸின் போது 12 சிக்ஸர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார்.
- வாசிம் அக்ரம் 1996 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் எடுத்திருந்த போது அதே எண்ணிக்கையிலான சிக்ஸர்களை (12) அடித்திருந்தார்.
- அதேசமயம், இந்தியாவைப் பொருத்தவரை, இந்த சாதனை இதற்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து (எட்டு சிக்ஸர்கள்) பெயரில் இருந்தது.
- இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இரண்டாவது இந்திய மற்றும் 9வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












