பேடிஎம் நிறுவனம் வீழ்ச்சியடைந்தது ஏன்? - விரிவான பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
முதலில் பைஜூஸ், இப்போது பேடிஎம். இந்திய பொருளாதாரத்தின் ஒளிரும் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்ட இவ்விரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கியது ஏன்?
சமீப காலங்களில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிறுவனமாக பேடிஎம் கருதப்பட்டது. ஆனால், இப்போது அதன் பேமெண்ட் வங்கி (Payment Bank) நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வேகத்தில் சவாரி செய்யும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக் கதை இப்போது பலவீனமடைந்து வருவதற்கான காரணம் என்ன?
இன்று, இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வெற்றியில் ஆர்வமுள்ள மக்களின் மனதில் இதேபோன்ற கேள்விகள் பளிச்சிடுகின்றன.
முதலில் பேடிஎம் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். பேடிஎம் பேமெண்ட் வங்கி ஒழுங்குமுறை தொடர்பான பிரச்னைகளில் சிக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கே.ஒய்.சி (KYC-வாடிக்கையாளர்களின் தகவல்கள் சரிபார்ப்பு) மீறல் காரணமாக, பேடிஎம்-இல் பணமோசடி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்த அச்சங்கள் காரணமாக, பேடிஎம் பேமெண்ட் வங்கியின் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
மார்ச் 1, 2024 முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கி புதிதாக வைப்புத்தொகை செலுத்துதல், புதிய நிதி பரிமாற்றங்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைக் கண்டறிய தணிக்கை நிறுவனத்தை நியமிக்க பேடிஎம் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பேடிஎம் பேமெண்ட் வங்கியில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தைப் பற்றி ஆதாரங்களின்படி, லட்சக்கணக்கான கணக்குகளில் கே.ஒய்.சி மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிய வருகிறது.
பல லட்சம் கணக்குகளில் பான் அட்டை சரிபார்ப்பு தோல்வியடைந்தது. பல நூறு கணக்குகள் ஒரே பான் எண்ணைக் கொண்டிருந்தன. பல சமயங்களில், ஆயிரக்கணக்கான கணக்குகளில் ஒரே பான் எண் இருந்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES
பேடிஎம்-இன் நட்சத்திர அந்தஸ்து மங்கியது எப்படி?
பேடிஎம் அதன் செயல்பாடுகளை 2010-ல் தொடங்கியது. ஆனால், மோதி அரசாங்கம் நவம்பர் 2016-ல் நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது அதன் வாலட் சேவை தொடங்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த காலகட்டத்தில், பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One-97 கம்யூனிகேஷன் நிறுவனம் பணமில்லா பரிவர்த்தனைகளின் அதிகரிப்பால் அதிகபட்ச பலனைப் பெற்றது.
பேடிஎம் மிக விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் கட்டணச் சேவையின் முகமாக மாறியது. 'பேடிஎம் பண்ணு’ என்ற குரல் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.
மே 2016-ல் பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடங்குவது குறித்த தகவலைத் தெரிவிக்கும் போது, ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகளால் பல நிறுவனங்கள் தங்களது உரிமங்களை ஒப்படைத்துவிட்டு, இந்தத் தொழிலில் இருந்து வெளியேறுகின்றன என்று அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதேனும் தடைகள் வரும்வரை பேடிஎம்-இன் அற்புதமான பயணம் தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
பேடிஎம்-இன் பேமெண்ட் வங்கி ஜனவரி 2017-ல் உரிமத்தைப் பெற்றது. அதே ஆண்டு மே மாதத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது.
இதற்கிடையில், சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் நிறுவனமான SoftBank ஆகியவற்றின் நிதியுதவியுடன், பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One-97 கம்யூனிகேஷன் நிதித் துறையில் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாக உருவெடுத்தது.
ஆனால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பேடிஎம்-இன் அற்புதமான வெற்றிக்கு ஒரு 'தடை' வந்தது.
உண்மையில், பேடிஎம்-இன் சிக்கல்கள் அதன் ஐபிஓ 2022-ல் (IPO - இனிஷியல் பப்ளிக் ஆஃபர் - ஆரம்பப் பொது வழங்கல்) தொடங்கப்பட்ட பிறகுதான் தொடங்கியது.

பட மூலாதாரம், GETTY IMAGES
மார்ச் 2022-இல், அதன் ஐபிஓ தொடங்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அதன் பங்குகளின் விலை 2,150 ரூபாய் பட்டியலிடப்பட்ட விலையில் நான்கில் ஒரு பங்காகக் குறைந்தது.
அந்த நேரத்தில் கூட, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பேடிஎம் பேமெண்ட் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி கூறியது.
பேமெண்ட் வங்கி அலி பாபா குழுமத்திடம் முக்கிய தகவல்களை கசியவிட்டதாக கூறப்பட்டது. அப்போது, பேமெண்ட் வங்கியில் 27 சதவீத பங்குகளை அலிபாபா குழுமம் வைத்திருந்தது.
இப்போது மீண்டும் பேடிஎம் பங்குகள் வேகமாக சரிந்து வருகின்றன. கடந்த திங்களன்று பேடிஎம் பங்குகளின் விலை ரூ.761-ல் இருந்து ரூ.438-க்கு சரிந்தது. கடந்த மூன்று அமர்வுகளில் இந்த சரிவு காணப்பட்டது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கைக்குப் பிறகு, பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One-97 கம்யூனிகேஷன் தொடர்ந்து 'நெருக்கடி மேலாண்மை'யில் ஈடுபட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் மீது பண மோசடி புகார்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், One-97 கம்யூனிகேஷன் இந்த அறிக்கைகளை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES
பைஜூஸ் நிறுவனத்தில் என்ன பிரச்னை?
இப்போது சரிவை சந்தித்த மற்றொரு நிறுவனமான பைஜூஸ் குறித்துப் பார்க்கலாம். ஒரு காலத்தில் இந்தியாவின் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்ட இந்த கல்வி தொழில்நுட்ப நிறுவனம் இப்போது பல சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த நிறுவனத்திடம் பணமில்லை. மேலும் அந்நிறுவனம், அதன் நிதி அறிக்கையை தாமதப்படுத்துகிறது. மேலும், அந்நிறுவனத்திற்கு கடன் வழங்குபவர்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 2022-ல் இந்நிறுவனத்தின் மதிப்பு 22 பில்லியன் டாலர்கள். ஆனால், அதன் விலை 99 சதவீதம் குறைந்துள்ளது.
2021-22 நிதியாண்டில், பைஜூஸின் வருமானம் ரூ.5298.43 கோடி. ஆனால், இழப்பு ரூ.8245 கோடி. செலவினம் 94 சதவீதம் அதிகரித்து, ரூ.13,668 கோடியாக இருந்தது.
முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நிறுவனம் பிழைக்க வேண்டும் என கவலைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் பதவியையும் இழக்க நேரிடும் என அஞ்சுகின்றனர்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், தொழில்நுட்ப சேவை நிறுவனமான சர்ஃபர் டெக்னாலஜி (Surfer Technology), பைஜூஸுக்கு எதிரான திவால் செயல்முறையைத் தொடர தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு (NCLT) மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2020-ம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் காலக்கட்டத்தில் நாடு தழுவிய பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டபோது பைஜூஸ் நிறுவனத்தின் வெற்றி உச்சத்தை எட்டியது.
மாணவர்கள் இணையத்தில் படிக்கத் தொடங்கினர். பின்னர் ஒரு வருடத்திற்குள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் மூலதனத்தை திரட்டியது. இந்த காலகட்டத்தில், பைஜூஸின் பல போட்டி நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறின.
இந்த காலகட்டத்தில் அது ஒன்றன் பின் ஒன்றாக பல கையகப்படுத்துதல்களை மேற்கொண்டது. நிறுவனம் தனது செலவினங்களையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில், பைஜூஸ் இந்திய தொலைக்காட்சி சேனல்களில் அதிகம் காணக்கூடிய பிராண்டுகளில் ஒன்றாக இருந்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES
பேடிஎம் மற்றும் பைஜூஸ் செய்த தவறு என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக, பேடிஎம் மற்றும் பைஜூஸ் என்ன தவறு செய்தார்கள்?
பொருளாதார நிபுணரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் குருவாகவும் அறியப்படும் ஷரத் கோஹ்லி, அதற்கான காரணத்தை விளக்குகையில், “ரிசர்வ் வங்கியின் சில இணக்கங்களை பேடிஎம் பின்பற்றவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேடிஎம் பேமெண்ட் வங்கி தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு பதில் சொல்லாத பேடிஎம் நிறுவனம், எச்சரிக்கைகளை கடந்தும் தன்னை திருத்திக் கொள்ளவில்லை. அதன் விளைவுகளை இன்று அந்நிறுவனம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது" என தெரிவித்தார்.
பைஜூஸின் தோல்விக்கான காரணத்தை அவர் விளக்குகையில், "பைஜூஸ் நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக கையகப்படுத்துதல்களைத் தொடங்கியது. முதலீட்டாளர்களும் அதில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். நிறுவனத்தின் மதிப்பீடு 22-23 பில்லியன் டாலர்களை எட்டியது. ஆனால், அதன் செயல்பாடு கோவிட் கால மாதிரி என்பதை மறந்து விட்டது" என்றார்.
அவர் கூறுகையில், “ஆனால், கோவிட் காலத்திற்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். வகுப்பறைகளில் மாணவர்கள் படிக்கத் தொடங்கினர். குழந்தைகள் ஆன்லைனில் படிப்பதை நிறுத்திவிட்டனர். அதேசமயம், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்று நிறுவனம் கருதியது. ஆன்லைன் மூலம் படிப்பது குறைந்தவுடன், நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. மறுபுறம், இதற்கிடையில் அந்நிறுவனம் தனது செலவுகளையும் அதிகரித்தது" என்றார்.
"ஒரு அழுகிய மீன் குளம் முழுவதையும் அழுக்காக்குகிறது" என்று அவர் கூறுகிறார். "இந்தியாவில் 1 லட்சத்து 15 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் அமைப்பு உள்ளது. சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரகாசிக்கின்றன. சில பெரியதாக மாறுகின்றன. பேடிஎம் போன்ற சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகள் காரணமாக இத்தகைய பிரச்னைகளில் சிக்குகின்றன" என அவர் தெரிவித்தார்.
ஏஞ்சல் இன்வெஸ்டர் மாடலின் விமர்சகரான அனிருத் மல்பானி, பைஜூஸ் மற்றும் பேடிஎம் இரண்டும் சிக்கலில் சிக்குவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்.
அவர் கூறுகையில், "ஆரம்பத்தில் பைஜூஸ் நிறைய தவறாக விற்பனை செய்தது. அவரது வணிக மாதிரியில் அசல் தன்மை இல்லை. கான் அகாடமியின் நகலெடுத்தல் மாதிரி போன்று இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பைஜூஸ் மாணவர்களுக்கு டேப் (Tab) வழங்குவதுதான் " என்றார்.
"பின்னர் அந்நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் குதித்தனர்," என்கிறார் மல்பானி. "ஒரு முதலீட்டாளர் தனது பணத்தை இரட்டிப்பாக்கினார், மற்றவர் அதை நான்கு மடங்காக உயர்த்தினார். அவர்களிடையே ஆட்டு மந்தை மனப்பான்மை தொடங்கியது. ஒவ்வொரு முதலீட்டாளரும் மற்றவர்களைப் பார்த்து, எல்லோரும் பணத்தை முதலீடு செய்யும் போது கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றியடையும் என்று நினைத்து பணத்தை முதலீடு செய்தார்கள். ஆனால், நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரி தோல்வியடைந்து முதலீட்டாளர்களின் பணம் சிக்கியது" என்கிறார் அவர்.
பேடிஎம் சிறிது காலம் சிறப்பாக செயல்பட்டாலும் படிப்படியாக அதுவும் சிக்கலில் சிக்கியது.
அனிருத் மல்பானி கூறுகையில், “பேடிஎம் ஒழுங்குமுறையின் அடிப்படையில் மிகவும் உணர்திறன் வாய்ந்த ஒரு துறையில் பணிபுரிந்து வருகிறது. அதாவது, ரிசர்வ் வங்கி அதன் விதிமுறைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஃபின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். பேடிஎம் விதிகளை பின்பற்றவில்லை. இதனால், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் வந்தது. இங்குதான் பிரச்னை தொடங்கியது” என்றார்.
“பைஜூஸ் விவகாரத்தில் அதனை கண்காணிக்கும் கல்வி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அனிருத் மல்பானி கூறுகிறார். “இல்லையென்றால், பைஜூஸ் இவ்வளவு அதிக வாடிக்கையாளர்களை ஏமாற்றியிருக்க முடியாது. இவையெல்லாம் நடக்கும் போது கல்வி அமைச்சகம் தூங்கிக் கொண்டிருந்தது” என்றார் அவர்.
பைஜூஸும் அதன் தவறான வருவாய் மாதிரியால் தோல்வியடைந்தது.
பத்திரிகையாளரும், 'மார்னிங் கான்டெக்ஸ்ட்' என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான பிரதீப் சாஹா கூறும்போது, "பைஜூஸின் அமைப்பில் ஒரு சிக்கல் இருந்தது. அதன் வருவாய் மாதிரி சரியாக இல்லை. வணிக மாதிரியிலும் ஒரு குறைபாடு இருந்தது. நிறுவனத்தின் விற்பனை உத்தியும் சரியாக இல்லை. நிறுவனம் விற்பனையை தவறவிட்டது. அந்நிறுவனம் தன் திறனை விட அதிக நிறுவனங்களை வாங்கியது. அந்த நிறுவனங்களை வாங்க நிறைய பணம் தேவைப்பட்டது. அதனால் அந்நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் கடனைப் பெற்று இறுதியில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது" என்றார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் அமைப்பு
பேடிஎம் மற்றும் பைஜூஸ் சிக்கலில் சிக்கிய பிறகு, நாட்டின் ஸ்டார்ட்-அப் அமைப்பு குறித்து சிலர் அச்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர். நாட்டில் இந்த அமைப்பு தோல்வியடைந்து வருவதாக அவர் கூறுகிறார்.
இருப்பினும், வல்லுநர்கள் இத்தகைய அச்சங்களை முற்றிலும் நிராகரிக்கின்றனர்.
ஸ்டார்ட்-அப் குரு என்று அழைக்கப்படும் ஷரத் கோஹ்லி, “ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வியை ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி என்று சொல்ல முடியாது” என்கிறார். இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் பல வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கி வருகின்றன என அவர் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வெற்றி விகிதம் 30-40 சதவீதம் மட்டுமே. ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 60 முதல் 70 சதவீதம் தோல்வி அடைகிறது. ஆனால், அனைத்து பெரிய மற்றும் நல்ல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் மிகவும் வெற்றிகரமாக வணிகம் செய்து அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன” என்றார்.
அவர் கூறுகையில், "இருப்பினும், பேடிஎம் மற்றும் பைஜூஸ் போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இடையில் வந்து, தவறான நடவடிக்கைகளால் வீழ்ச்சியடைகின்றன. இது இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் அமைப்புக்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் அமைப்பு மற்றும் தொழில் முனைவோர் உணர்வு வலுவாக உள்ளது. ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மோசமான வேலைகளால் அது பாதிக்கப்படப் போவதில்லை" என்றார்.
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் என்ற அச்சம் அடிப்படையற்றது என அனிருத் மல்பானி கூறுகிறார்.
அவர் கூறுகையில், "எல்லா திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லை, அதேபோல் அனைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் தோல்வியை சந்திப்பதில்லை" என்றார். மேலும், "இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோல்வியடைந்தன. இதில், மூலதன நிறுவனங்களால் நிறைய பணம் முதலீடு செய்யப்பட்டது. அந்நிறுவனங்கள் மிகவும் பேராசை கொண்டவை. அந்நிறுவனத்தினர், குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க முயற்சி செய்வர். நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் போது, அதே விகிதத்தில் அதை இழக்க நேரிடும். பிரச்னை இங்கிருந்து தான் தொடங்குகிறது" என்றார்.
அவர் கூறுகையில், “பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, தங்கள் பணத்தை இரட்டிப்பாகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிப்பதாகக் கூறுகின்றன. இதற்காக அவர்கள் இன்னும் பல வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது, பின்னர் அவை நிறைவேற்றப்படாமல் போகிறது. இதுபோன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பாதி பணம் விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் பத்திரிகைச் செய்திகளுக்குச் செலவிடப்படுகிறது" என்கிறார்.
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக மல்பானி கூறுகிறார். முதலீட்டாளர்கள் மற்றும் இந்த நிறுவனங்களின் சேவைகளைப் பெறுபவர்கள் இப்போது கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார். அவர்கள் முதிர்ச்சி பெற தொடங்கியுள்ளனர் என்றும் அவர்களை ஏமாற்றுவது எளிதல்ல என்றும் கூறுகிறார். மேலும், “பேடிஎம் மற்றும் பைஜூஸ் போன்ற சூழ்நிலைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்த நிறுவனங்களைக் கேட்கிறார்கள்” என்கிறார்.
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் அமைப்பு தோல்வியடையவில்லை என்றும் பிரதீப் சாஹா நம்புகிறார். யாருடைய பிசினஸ் மாடல் சரியில்லையோ அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் தோல்வியை சந்திக்கின்றன என கூறுகிறார் பிரதீப் சாஹா.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இது சவாலான காலகட்டம் என்கிறார் அவர். உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி சிக்கலை எதிர்கொள்வதாகவும் அவற்றை பாதிக்கும் பல விஷயங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதீப் சாஹா கூறும்போது, “பேடிஎம் மற்றும் பைஜூஸ்-இன் தோல்வியைப் பார்க்கும்போது, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் அமைப்பு இந்தியாவில் தோல்வியடைந்து வருகிறது என்று சொல்ல முடியாது. பேடிஎம் மற்றும் பைஜூஸ் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தவறு செய்துள்ளன. அவர்களின் நிறுவனங்கள் இதை ஏற்று மேம்படுத்த வேண்டும். இத்துறைக்கு புதிதாக வருபவர்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். நாம் செய்யக் கூடாததை வரலாறு காட்டுகிறது. பைஜூஸைப் பார்த்தால், கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன செய்யக் கூடாது என்று தெரியும்” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












