ஒரு வேலையில் இருக்கும் போதே கூடுதல் வருவாய் பெறுவதற்கான டிஜிட்டல் வழிமுறைகள் என்னென்ன?

கூடுதல் வருமானம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் முதல் முறையாக கூடுதல் வருமானம் (passive income) குறித்து கேள்விப்பட்டதாகக் கூறுகிறார் பிரிட்டனின் லெய்செஸ்டர்ஷயரில் வசிக்கும் 38 வயது சஜன் தேவ்ஷி.

அந்த நேரத்தில், கிட்டத்தட்ட அனைவருமே வீட்டில் முடங்கிக் கிடந்தனர். அப்போது, முகநூல் மற்றும் டிக்டாக் பக்கங்களில் மிகக் குறைந்த அல்லது சிறிய முயற்சியுடன் பணம் சம்பாதித்ததாக பலர் கூறுவதை அறிந்தார்.

“மிகக் குறைந்த மூலதனம், நேரம் மற்றும் உழைப்பு செலுத்தி ஒரு தொழிலைத் தொடங்கி, பின்னர் அது தானாகவே இயங்குவதை பார்ப்பது என்ற யோசனை எனக்கு பிடித்திருந்தது. இதன் மூலம் நான் எனது முக்கியமான அனைத்து வேலைகளையும் எப்போதும் போல் செய்ய முடியும், அதே நேரம் சிறு சேமிப்பு போல கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.” என்கிறார் தேவ்ஷி.

தேவ்ஷி தான் அலுவலகத்திலிருந்து திரும்பியபின் தனது குழந்தைகளை தூங்க வைத்த பிறகு, கல்வித்துறை சார்ந்த பணிகள் சிலவற்றை வீட்டிலிருந்தே செய்ய தொடங்கினார். அவர் செய்வதை தான் நிபுணர்கள் கூடுதல் வருமானம்(passive income) என்று அழைக்கின்றனர். அதாவது மிகக் குறைந்த முயற்சியுடன் வருவாய் ஈட்டுவது.

ராஞ்சியைச் சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியரும் தற்போதைய நிதி ஆலோசகருமான மனீஷ் வினோத் இதை மேலும் விளக்கி, “ஆரம்பத்தில் நீங்கள் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், ஏதாவது வேலை அல்லது தொழிலைத் தொடங்க வேண்டும், ஆனால் சில நாட்கள் கழித்து, அதிலிருந்து பணம் வரத் தொடங்கும், பின்னர் நீங்கள் அதில் தினமும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதில்லை, உங்கள் வேலை தானாகவே நடக்கும்” என்று கூறுகிறார்.

இந்த வருமானத்தை இரண்டாவது பாதுகாப்பு அரண் என்கிறார் வினோத். "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்கும் நீங்கள் உருவாக்கும் இரண்டாவது பாதுகாப்பு அரண் தான் இந்த கூடுதல் வருமானம்” என்று கூறுகிறார்.

கூடுதல் வருமானம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா ஊரடங்கு

முன்பெல்லாம், பணக்காரர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஏனெனில் அவர்களுக்கு சொத்து இருந்தது, அதை அவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வாடகை பெறலாம் அல்லது வேறு எங்காவது முதலீடு செய்யலாம். ஆனால் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு,கூடுதல் வருமானத்தின் முழு வரையறையும் மாறி விட்டது. ஏனெனில் இப்போது இளைஞர்கள், குறிப்பாக ஜென் ஜி தலைமுறை எனப்படும் இளைஞர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர்.

வேலைகளில் உள்ள சிரமங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, மக்களுக்கு கூடுதல் வருமானத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்காவில் சுமார் 20 சதவீத குடும்பங்கள் கூடுதல் வருமானம் ஈட்டுகின்றன. அவர்களின் சராசரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 4200 டாலர் ஆகும். மேலும் மில்லினியல்கள் எனப்படும் 1980,90 களில் பிறந்தவர்களில் 35 சதவீதத்தினர் கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்தியாவில் எப்படி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்?

இதன் போக்கு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

மனீஷ் வினோத் கூறுகையில், “இந்தியாவில் கூடுதல் வருமானம் ஈட்டும் நபர்களின் சரியான எண்ணிக்கையை கூறுவது கடினம், ஏனெனில் பலர் அதை மறைக்கின்றனர்” என்றார்.

டெலாய்ட் குளோபல் 2022 ஆய்வின் படி, இந்தியாவில் 62 சதவீத ஜெனரேஷன் Z மற்றும் 51 சதவீத மில்லினியல்கள் பிரதானமான வேலை அல்லாமல், பிற வேலைகளும் செய்கிறார்கள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர்.

கூடுதல்வருமானம் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை என்றாலும், இந்தியாவில் அதன் போக்கு அதிகரித்து வருவதாகவே மும்பையை சேர்ந்த தனிப்பட்ட நிதி நிபுணர் கௌஸ்துப் ஜோஷி தெரிவிக்கிறார்.

அவர் கூறுகையில், “இப்போதெல்லாம், புதிய தலைமுறை இளைஞர்கள் என்னிடம் வரும் போது, பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று கேட்பதோடு நிறுத்துவதில்லை. கூடுதல் வருமானம் ஈட்ட என்ன வழிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்” என்கிறார்.

கூடுதல் வருமானம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களின் தாக்கம்

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாவில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வீடியோக்களை காணலாம், அவை பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுக்கும்.

பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக பிசினஸ் ஸ்கூலில் கற்பிக்கும் பேராசிரியர் ஷங்க்கா பாசு, இதுபோன்ற வீடியோக்களால், இளைஞர்கள் மத்தியில் கூடுதல் வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார்.

இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் வெற்றிக் கதைகளைச் சொல்வதைக் கண்டு மக்கள் ஈர்க்கப்பட்டு, அவற்றைப் போலவே செய்யத் தொடங்குகிறார்கள் என்று அவர் கூறுகிறார். பின்னர் அந்த நபர்களில் சிலர் வெற்றி பெறுகிறார்கள், பின்னர் அவர்கள் தங்கள் கதையைச் சொல்கிறார்கள், இவ்வாறு இது தொடர்கிறது.

‘ஜெனரேஷன் மணி’யின் நிறுவனர் மற்றும் தனிப்பட்ட நிதி ஆலோசகரான அலெக்ஸ் கிங், கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம் மட்டுமல்ல, நிதி சுதந்திரத்தை அடைவதற்கான பொதுவான வழியும் அதுவே என்று சமூக ஊடகங்கள் மக்களை நம்ப வைக்க உதவுகிறது.

பொருளாதார நிலைமை காரணமாக, மக்கள் கூடுதல் வருமானம் ஈட்டுவது பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்று கிங் கூறுகிறார்.

“கடந்த பத்தாண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. பல இளைஞர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள், மேலும் பல நிறுவனங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது பற்றி கடுமையான விதிகள் உள்ளன, நீங்கள் சில மணிநேரங்கள் மட்டுமே கூடுதல் நேரம் வேலை செய்ய முடியும்” என்று அவர் கூறுகிறார்.

பணவீக்கம் அதிகரிப்பதாலும், தினசரி செலவுகள் அதிகரிப்பதாலும், பல இளைஞர்கள் இப்போது கூடுதல் வருமானம் ஈட்ட தொடங்கியுள்ளனர். ஏனெனில் அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்தாலும், அவர்களின் வருமானம் மிகவும் குறைவு என்றும் அவர் கூறுகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பலர் தங்கள் வேலைகளில் அதிக சுதந்திரம் தேவை என்று உணர்ந்தனர். மேலும், மக்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களைப் பெற நேரமும் வாய்ப்பும் கிடைத்தது.

தற்போதைய பொருளாதார நிலையில், ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் இருப்பது மிகவும் அவசியம் என்று புதிய தலைமுறையினர் கருதுவதாக கிங் கூறுகிறார்.

கூடுதல் வருமானம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கூடுதல் வருமானத்துக்கான வழிகள்

இந்தியாவில் என்னென்ன முறைகளில் கூடுதல் வருமானம் ஈட்டப்படுகிறது என மனீஷ் வினோத் பட்டியலிடுகிறார்.

“இந்தியாவில் சிலர் உணவுத் தொழில் செய்கிறார்கள், சிலர் பிளாகர்களாக மாறிவிட்டனர். சிலர் பங்குகளை வாங்கி விற்கத் தொடங்கியுள்ளனர், சிலர் டிராப் ஷிப்பிங் கடைகளை கவனித்து வருகின்றனர். உங்கள் சொத்தை வாடகைக்கு விடுவது பணம் சம்பாதிக்க மிகவும் எளிதான வழி” என்று அவர் கூறுகிறார்.

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் பெருமளவு அதிகரித்தது. கற்பிப்பதில் ஆர்வம் கொண்டு, ஆனால் வேறு வேலைகள் செய்து வந்த பலர் இருந்தனர். அவர்கள் கொரோனா காலத்தில், தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், மற்றொரு வருமான ஆதாரத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.

பலர் இந்த காலக்கட்டத்தில் புத்தகங்கள் எழுதி, பின்னர் அவற்றை வெளியிட்டு பணம் சம்பாதித்தனர். மனீஷ் வினோத் கூறுகையில், “பலர், குறிப்பாக பெண்கள், பொழுதுபோக்குக்காக யூடியூப்பில் சமையல் வகுப்புகள் தொடங்கியவர்கள் இன்று அதிக அளவு பணம் சம்பாதித்துள்ளனர்” என்றார். கொரோனா காலத்தில், மக்கள் டிராப்ஷிப்பிங் மூலமும் அதிகம் சம்பாதித்ப்பதாகவும், இப்போது அது மிகவும் பிரபலமாகிவிட்டதாகவும் மனீஷ் வினோத் கூறுகிறார்.

ஆன்லைன் ஷிப்பிங்

பட மூலாதாரம், Getty Images

ட்ராப்ஷிப்பிங் என்றால் என்ன?

டிராப்ஷிப்பிங் என்பது மிகக் குறைந்த முதலீடு தேவைப்படும் ஒரு நவீன ஆன்லைன் வணிக மாடலாகும். இதில், ஒருவர் நிறைய பொருட்களை வாங்கி கிடங்கில் வைக்க வேண்டியதில்லை, தயாரிப்பு விற்பனையாகுமா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

“நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு ஆன்லைன் கடையைத் திறக்க வேண்டும். பொருட்கள் வழங்குபவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வழங்கும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக காட்டலாம். பொருள் தேவை என்று கூறினால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று விளக்குகிறார் மனீஷ் வினோத்.

பங்குகளில் வர்த்தகம் செய்வது என்பதும் வீட்டில் அமர்ந்தே பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு வழியாகும் என்றார் அவர்.

கெளஸ்துப் ஜோஷி, “ கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆன்லைன் போர்ட்டல்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவற்றின் உதவியுடன் வருமானம் ஈட்டப்படுவது அதிகரித்துள்ளது” என்கிறார்.

“ உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்றை பற்றி நீங்கள் சமூக ஊடகங்களில் எழுத்து பதிவாகவோ, வீடியோவாகவோ பதிவிட்டு பணம் சம்பாதிக்கலாம். யூடியூப் பலருக்கு முதன்மையான வருமான ஆதாரமாக மாறி வருவது உண்மையே, ஆனால் பலர் இன்னும் இதை ஒரு கூடுதல் வருமான ஆதாரமாக கருதுகின்றனர்” என்கிறார் ஜோஷி.

கூடுதல் வருமானம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கூடுதல் வருமானத்தின் சவால்கள்

ஆனால் சிலருக்கு மட்டுமே இது வேலை செய்கிறது என்பது உண்மைதான், பலருக்கு இது ஒரு கனவாகவே இருக்கிறது. உண்மையில், சமூக ஊடகத்தில் சொல்லப்படுவது போல் விஷயங்கள் அவ்வளவு எளிதல்ல.

மாணவர்களுக்கு தேர்வுகளில் உதவ கல்வி ஆதார வலைத்தளத்தை தேவ்ஷி தொடங்கினார். அவர் முன்பு நினைத்தது போல் அது எளிதாக இல்லை.

“எந்தவொரு திட்டத்தையும் நிறுவுவதற்கு கடின உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது. அதன் பின், கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே கூடுதல் வருமானம் மட்டுமே ஈட்டுவது அவ்வளவு எளிதல்ல” என்று கூறுகிறார்.

பல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று கிங் கூறுகிறார். கூடுதல் வருமானம் ஈட்டுவது தொடர்பான படிப்புகளை விற்று பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள், ஆனால் பார்வையாளர்களை பெறுவது இல்லை.

கூடுதல் வருமானம் ஈட்டுவதில் இந்த சிக்கல்கள் இருந்தாலும், வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

பலர் கூடுதல் வருமானம் ஈட்டினால், இளைஞர்களுக்கான பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மாற்றம் ஏற்படும். டிஜிட்டல் வணிகத்தை மூடுவதால் எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை. வணிகம் செய்வது பணக்காரர்களுக்கானது என்ற நிலை மாறிவிட்டது. பணத்தை கொண்டே பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணமும் மாறிவிட்டது.

கூடுதல் வருமானம் பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கையும் தேவை

கூடுதல் வருமானத்தின் போக்கு அதிகரித்து வருகிறது, மேலும் பலர் இதை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். ஆனால் கௌஸ்துப் ஜோஷி இது பற்றி கவனமாக இருக்க அறிவுறுத்துகிறார். "மக்கள் பணம் சம்பாதிக்க தங்கள் பிரதான வருமான ஆதாரமாக கூடுதல் வருமானத்துக்கான வழியைக் கருதுவது சரியல்ல," என்று அவர் கூறுகிறார்.

“அலுவலக வேலையை புறக்கணித்து தங்கள் கூடுதல் வருமானத்தில் கவனம் செலுத்த முயற்சிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன், இந்த முயற்சி தவறானது. இது உங்கள் இரு வருமான ஆதாரங்களையும் பாதிக்கும்” என்கிறார் ஜோஷி.

ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக்காட்டி அவர் கூறுகிறார், "இன்று அனைவருக்கும் கூடுதல் வருமானம் ஈட்டுவது ஒரு ஆசை, ஆனால் நீங்கள் அதில் அதிக நேரம் செலவிட்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால், இளைஞர்கள் அது குறித்து யோசிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது உங்கள் முக்கிய குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் இறுதி குறிக்கோளாக இருக்கக்கூடாது." என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)