யுரேனஸ்: இங்கு ஓர் ஆண்டு என்பது பூமியில் 84 ஆண்டுகளுக்கு சமம் - ஜேம்ஸ் வெப் காட்டும் சுவாரஸ்யங்கள்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம்

பட மூலாதாரம், WEBBTELESCOPE.ORG

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம்

சூரிய குடும்பத்தின் இந்தக் கோளைச் சுற்றி இருக்கும் ஒளி வளையங்கள் இதற்கு முன் இவ்வளவு தெளிவாகத் தெரிந்தில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்தக் கோள் வட்டமான ஒளி வட்டத்தால் மூடப்பட்டிருப்பது போலக் காட்சியளிக்கும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, யுரேனஸின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்டவை.

யுரேனஸ் நமது சூரிய குடும்பத்தின் ஏழாவது கிரகம்.

1986ஆம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலம் யுரேனஸின் அருகில் இருந்து சென்றபோது, அதன் கேமராவில் யுரேனஸின் படம், நீல-பச்சை பந்து போலத் தோன்றியது. அது ஒளி வளையங்களைக் காட்டவில்லை.

ஆனால், அகச்சிவப்பு அலைநீளங்களின் உதவியுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி யுரேனஸின் படங்களை எடுத்துள்ளது என்றும் இது அந்தக் கோளைச் சுற்றி பிரகாசமான வளையங்கள் இருப்பதைக் காட்டுகிறது என்றும் நாசா கூறுகிறது.

சூரிய குடும்பத்தின் மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்ட ஒரு சிறப்பு அம்சத்தை யுரேனஸ் கொண்டுள்ளது. சுமார் 90 டிகிரி சாய்வுடன் அதன் அச்சில் சுழலும் ஒரே கிரகம் இதுதான்.

இதன் காரணமாக கிரகத்தில் எந்தப் பருவமாக இருந்தாலும் அது உச்சத்தில் இருக்கும். இங்கு துருவப் பகுதிகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து சூரிய ஒளி இருக்கும், பிறகு அதே எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு அடர்ந்த இருள் இருக்கும்.

இங்கு ஓர் ஆண்டு என்பது பூமியின் 84 ஆண்டுகளுக்குச் சமம்

யுரேனஸில் ஒரு நாள் 17 மணிநேரம் 14 நிமிடங்கள். அதாவது, அது தனது அச்சில் முழுமையாகச் சுழன்று முடிக்க இவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் அதன் ஓர் ஆண்டு என்பது 84 புவி ஆண்டுகள், அதாவது 30,687 நாட்களுக்குச் சமம். இந்தக் கோள், சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்க 84 ஆண்டுகள் ஆகும்.

யுரேனஸை சுற்றி 13 வளையங்கள் உள்ளன. அவற்றில் 11 வளையங்கள் ஜேம்ஸ் வெப்பில் இருந்து எடுக்கப்பட்ட படத்தில் காணப்படுகின்றன. சில வளையங்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதால் அவை மிகப்பெரிய ஒளிவட்டத்தை உருவாக்குகின்றன.

எதிர்கால புகைப்படங்களில் மேலும் இரண்டு வளையங்களை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த வளையங்கள் பற்றிய தகவல் 2007இல் கிடைத்தது.

யுரேனஸின் அறியப்பட்ட 27 நிலவுகளில் சிலவற்றையும் இந்தப் படம் காட்டுகிறது. இருப்பினும், இவற்றில் சில நிலவுகள் மிகவும் சிறியவை, அவை கண்ணுக்குத் தெரியாது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

மேற்பரப்பில் பனிக்கட்டி

யுரேனஸின் கடினமான மேற்பரப்பில் லேசாக உருகிய பனிக்கட்டி உள்ளது.

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகியவை பனி கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை உறைந்த நீர், மீத்தேன், அமோனியா ஆகியவற்றால் ஆனவை. இருப்பினும் இவை இரண்டும், வியாழன், சனி ஆக்கய கோள்களைப் போல வாயு கிரகங்களும் ஆகும்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம்

பட மூலாதாரம், WEBBTELESCOPE.ORG

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்துள்ள யுரேனஸின் படம்

இந்தப் படத்தில் காணப்படும் பிரகாசமான துருவப் பகுதி சூரியனை நோக்கி உள்ளது. இது போலார் கேப் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதி கிரகத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

இந்த துருவப் பகுதி சூரிய ஒளியில் வரும்போது இந்த கேப் மேலே தெரியவரும். சூரியன் மறையும்போது இதுவும் மறைந்துவிடும். இது எப்படி நடக்கிறது என்பது இன்னும் தெரியவில்லை.

கோளின் தென் துருவம் படத்தில் இருளில் உள்ளது. எனவே அது தெரியவில்லை.

படத்தில் காணப்படும் யுரேனஸின் நீல நிறம் இரண்டு ஃபில்டர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், WEBBTELESCOPE.ORG

படக்குறிப்பு, படத்தில் காணப்படும் யுரேனஸின் நீல நிறம் இரண்டு ஃபில்டர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது.

எவ்வளவு நேரம் கேமராவில் தெரிந்தது

’போலார் கேப்’இன் விளிம்பில் ஒரு பிரகாசமான மேகமும் கோளின் தொலைதூர இடது பக்கத்தில் மற்றொரு பிரகாசமான மேகமும் உள்ளது. இந்த மேகங்கள் பனிப்புயல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

யுரேனஸ் 12 நிமிடங்களுக்கு இரண்டு ஃபில்டர்களுடன் கூடிய கேமரா முன் இருந்தபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டன என்று நாசா கூறுகிறது. ஆயினும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், இந்த கிரகத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானவை அல்ல என்றும் நாசா தெரிவித்தது.

10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி 2021 டிசம்பரில் நிறுவப்பட்டது. இது புகழ்பெற்ற ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைவிட நவீனமானது என்று கூறப்படுகிறது.

விண்வெளியின் அனைத்து நுணுக்கங்களையும் இதன்மூலம் கண்காணிக்க முடியும். ஆனால் முக்கியமான இரண்டு இலக்குகளை இது கொண்டுள்ளது.

முதலாவது, 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசித்த பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்களின் படங்களை எடுப்பது. இரண்டாவது உயிர்கள் இருக்கலாம் எனக் கருதப்படும் கோள்களைக் கண்டறிவது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: