தமிழ் தலைவாஸ் கபடி அணியில் புதிய சர்ச்சை; கைகள் கட்டப்பட்டிருப்பதாக கேப்டன், கோச் புகார்

பட மூலாதாரம், Arjun Deshwal
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
நடந்து கொண்டிருக்கும் ப்ரோ கபடி சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. விளையாடிய 18 போட்டிகளில் 12 தோல்விகளைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ்.
இந்நிலையில், தங்கள் சீசனின் கடைசி போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான், கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் இருவரும் தங்களால் அணியில் எதுவுமே செய்ய முடியவில்லை என்று கூறினார்கள். தான் பெயரளவிலேயே பயிற்சியாளராக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் சஞ்சீவ் பலியான்.
'பயிற்சியாளர் கையில் எதுவும் இல்லை'
செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் 12 புள்ளிகளோடு அவர்கள் சீசன் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பின்பு அணியை முன்னேற்ற என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தன் கையிலோ அர்ஜுன் கையிலோ எதுவும் இல்லை என்று கூறினார் சஞ்சீவ் பலியான்.
"அணியை மாற்றுவது என் கையிலோ, அர்ஜுன் கையிலோ இல்லை. அங்கு அனலிஸ்ட் (analyst) இருக்கிறார். அவர்கள் தான் அணியை தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தான் மாற்றம் செய்ய முடியும். அது பயிற்சியாளரின் கையில் இல்லை. ஒரு போட்டியில் எந்த 7 பேர் விளையாடப்போகிறார்கள் என்பதையே போட்டிக்கு சில நிமிடங்கள் முன்புதான் தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அர்ஜுனாலோ பயிற்சியாளராலோ என்ன செய்திட முடியும்" என்று கேள்வியெழுப்பினார் சஞ்சீவ் பலியான்.
ஃபிட்டாக இல்லாத வீரர்களெல்லாம் ஆடவைக்கப்பட்டு, ஃபிட்டான வீரர்கள் வெளியே அமரவைக்கப்பட்டதாகவும், எல்லா முடிவுகளையும் அணி நிர்வாகமே எடுப்பதாகவும் கூறினார் அவர்.

பட மூலாதாரம், Arjun Deshwal
இந்த சீசன் தொடங்கியபோது தமிழ் தலைவாஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. முன்னணி ரெய்டர்கள் பவன் ஷெராவத், அர்ஜுன் தேஷ்வால் இருவரையுமே ஏலத்தில் அந்த அணி வாங்கியதால் முன்பை விட நல்ல செயல்பாடு வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டு முறை ப்ரோ கபடி பட்டம் வென்ற பயிற்சியாளர் சஞ்சீவ் பலியானை ஒப்பந்தம் செய்தது இன்னும் நம்பிக்கையைக் கூட்டியது. காரணம், அர்ஜுன் தேஷ்வால் கடந்த சில ஆண்டுகளாகவே சஞ்சீவ் பலியானோடு ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
மேலும், இருவரும் இணைந்து அந்த அணிக்கு 2022 சீசனில் கோப்பை வென்றும் கொடுத்தனர். அது தமிழ் தலைவாஸுக்கும் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி களத்தில் காட்டிய ஆட்டம் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அணித் தேர்வு, வியூகங்கள் அனைத்துமே விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தன.
கடந்த வாரம் நடந்த ஒரு போட்டிக்கு முன்பாக தொலைக்காட்சியில் தமிழ் தலைவாஸ் அணி பற்றிய பேசிய கபடி வல்லுநரும் வர்ணனையாளருமான டி.என்.ரகு, "பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் வியூக அமைப்பை இன்னும் சரியாகச் செய்யவேண்டும். புதுமையாக ஏதாவது செய்யவேண்டும், குறிப்பாக 5 டிஃபண்டர்களோடு களமிறங்கக்கூடாது. களத்தில் அர்ஜுன் தேஷ்வாலுக்கு ஆதரவு தேவை. அவர் என்ன டென்னிஸா ஆடுகிறார் தனியாகப் போராட!" என்று சொல்லியிருந்தார்.
மேலும், இளம் வீரர்கள் யாருக்கும் இம்முறை அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதையு தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ரகு. அவரைப் போல பலரும் சஞ்சீவ் பலியானின் அணித் தேர்வை, வியூகங்களை கேள்வியெழுப்பினார்கள்.
இந்நிலையில், இப்போது இந்த முடிவுகள் எதுவுமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று பயிற்சியாளர் சொல்லியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அர்ஜுனால் தனியாக என்ன செய்ய முடியும்?
பயிற்சியாளரின் சஞ்சீவ் பலியானின் கருத்தை தற்போது கேப்டனாக செயல்பட்டுவரும் அர்ஜுன் தேஷ்வாலும் உறுதி செய்திருக்கிறார்.
அவரால் அணியில் ஏதாவது மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "என்னால் அணியில் எதை மாற்றிவிட முடியும்? உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பார்ப்பவர்களுக்கு என்ன மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பது தெரியும். ஆனால், அர்ஜுனால் மட்டும் அணியை வெல்லவைக்க முடியாது. நிர்வாகம் உள்பட அனைவரும் ஒரு அணியாக ஒன்றிணையும்போதுதான் வெற்றி பெற முடியும்" என்று கூறினார் அர்ஜுன் தேஷ்வால்.

பட மூலாதாரம், Getty Images
ரகு சொல்லியிருந்ததுபோல் பல போட்டிகளில் 5 டிஃபண்டர்களோடு 2 ரெய்டர்களோடு மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. அதனால் 7 பேர் கொண்ட அணியில் 2 ரெய்டர்களே ஆடும் நிலை ஏற்பட்டது.
இது போட்டிகளின்போது பெரும் பின்னடைவாக அமைந்தது. அர்ஜுன் தனியாகப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இது அவருடைய செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சீசன் தமிழ் தலைவாஸ் அணி ரெய்ட்கள் மூலம் 354 புள்ளிகள் எடுத்திருக்கிறது. அதில் அர்ஜுன் தேஷ்வால் மட்டுமே 209 புள்ளிகள் எடுத்தார். அதாவது அணியின் 59% ரெய்ட் புள்ளிகளை அவர் ஒருவரே எடுத்திருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக அதிக ரெய்ட் புள்ளிகள் எடுத்தது நரேந்தர் கண்டோலா. ஆனால், அவர் எடுத்தது வெறும் 29 புள்ளிகளே. இதனால்தான் 2 ரெய்டர்களோடு களமிறங்கிய முடிவையும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததையும் ரகு போன்ற ஆர்வலர்கள் விமர்சித்தார்கள்.
பிரச்னைகள் எங்கிருந்து தொடங்கின?
தமிழ் தலைவாஸ் அணி மீதான கேள்விகளும் சர்ச்சைகளும் இந்தத் தொடர் தோல்விகளுக்கும் குழப்பங்களுக்கும் பல வாரங்கள் முன்பே தொடங்கிவிட்டன.
ஒழுங்கு காரணங்களுக்காக சீசன் தொடக்கத்திலேயே அப்போதைய கேப்டன் பவன் செராவத்தை சஸ்பெண்ட் செய்தது தமிழ் தலைவாஸ் நிர்வாகம். அதற்குப் பின்பு தான் அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை பவன் ஷெராவத் மறுத்தார். "அணி நான் ஒழுங்கற்றவன் என்று சொல்லியிருக்கிறது. அவர்கள் சொல்வதில் 1% உண்மை இருந்தாலும், நான் கபடி விளையாடுவதை நிறுத்திவிடுகிறான். நான் எந்த இடத்திலும் தவறு செய்திடவில்லை என்று தீர்க்கமாகச் சொல்கிறேன்" என்று அப்போது பேசியிருந்தார் பவன்.
மேலும், அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல தான் இளைய சகோதரனாகக் கருதும் அர்ஜுன் தேஷ்வாலுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டியதாகவும், குறிப்பிட்ட ஒரு தனிநபரின் காரணமாக அதைச் செய்யமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.
பவன் குறிப்பிட்ட அந்த ஒற்றை நபர் யார் என்று அப்போதே பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இப்போது பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் அணியின் அனலிஸ்ட் கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பற்றிக் கூறியதும், பவன் மறுபடியும் சமூக வலைதளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Pawan Sehrawat
'உண்மையை மறைக்கலாம். ஆனால், ஒருபோதும் ஒடுக்க முடியாது' என்ற புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பவன், "அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் உண்மையை விரைவில் பகிர்ந்துகொள்வேன். நான் அனுபவித்தது வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது. முக்கியமாக ரசிகர்களின் உணர்வுகளை ஏமாற்றக்கூடாது" என்றும் பதிவிட்டிருக்கிறார்.
பயிற்சியாளரின் குற்றச்சாட்டுக்குப் பின் பவன் இந்தப் பதிவை செய்திருப்பது தமிழ் தலைவாஸ் நிர்வாகம் மீது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
நிறைய மாற்றங்கள் செய்த தலைவாஸ்
வருடாவருடம் பயிற்சியாளர்களை, கேப்டன்களை மாற்றுகிறார்கள் என்று அந்த அணியின் நிர்வாகம் மீது ஏற்கெனவே பல விமர்சனங்கள் இருந்திருக்கிறது. இதுவரை 8 சீசன்களில் பங்கேற்றிருக்கும் அந்த அணியின் ஆறாவது தலைமைப் பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைப் பயிற்சியாளர் மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு கூடுதலாக 'ஸ்ட்ரேடஜி கோச்' என்ற ரோலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் தர்மராஜ் சேரலாதனை நியமித்திருந்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இப்படி பல மாற்றங்களை செய்திருக்கும் தமிழ் தலைவாஸ் அணி 8 சீசன்களில் ஒரேயொரு முறை மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. இதனால் தான் அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் விரக்தியில் இருக்கின்றனர்.
இந்நிலையில், இப்போது ஒரு பயிற்சியாளரும் கேப்டனும் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று குற்றம் சாட்டியிருப்பது கபடி வட்டாரத்திலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் ரசிகர்கள் நிர்வாகத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த விஷயம் பற்றிக் கருத்து கேட்க தமிழ் தலைவாஸ் அணியைத் தொடர்புகொண்டபோது, விரைவில் அணியின் சார்பாக இந்த விஷயம் குறித்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதற்குப் பிறகு பத்திரிகைகளிடம் பேசுவதாகவும் தெரிவித்தனர்.
ப்ரோ கபடி லீக்
கடந்த 2014ம் ஆண்டு தொடங்கிய ப்ரோ கபடி லீகின் 12வது சீசன் இது. தற்போது மொத்தம் 12 அணிகள் இந்த லீகில் பங்கேற்கின்றன. அவை இந்தியாவின் 12 நகரங்களை மையமாக வைத்து அமைந்திருக்கின்றன. ஒரு ரெய்டுக்கு 30 நொடிகள், மூன்று அல்லது அதற்கும் குறைவான டிஃபண்டர்கள் இருக்கும்போது ரெய்டரைப் பிடித்தால் (சூப்பர் டேக்கில்) 2 புள்ளிகள் என சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தி, இந்த ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கினார்கள்.
இரான், தென் கொரியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இத்தொடரில் பங்குபெற்றார்கள். ஐபிஎல் தொடரைப் போலவே ஏல முறையில் வீரர்கள் வாங்கப்பட்டது இந்தத் தொடர் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. ஐபிஎல் கிரிக்கெட் லீகுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய லீகாக இது கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












